இந்தியா கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சீதாராம் யெச்சூரி என நினைவேந்தல் நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மறைந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளராக இருந்த சீதாராம் யெச்சூரியின் பட திறப்பு மற்றும் நினைவேந்தல் நிகழ்ச்சி சென்னை, காமராஜர் அரங்கில் இன்று (23.09.2024) மாலை நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, மூத்த பத்திரிகையாளர் என்.ராம் மற்றும் கூட்டணி கட்சியின் தலைவர்கள் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்ததாவது; ”மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தலைவரான சீதாராம் யெச்சூரியின் இறப்பு என்னை அதிர்ச்சி அடைய செய்தது. சீதாராம் யெச்சூரியின் உடல்நலம் குறித்து தொடர்ந்து விசாரித்து கொண்டே இருந்தேன். சீதாராம் யெச்சூரி சி.பி.எம் கட்சிக்கு மட்டுமல்லாமல் எங்களுக்கும், சொந்தமானவர், அனைவருக்கும் சொந்தமானவர். சீதாராம் யெச்சூரி பேச்சுக்கு கருணாநிதி பாராட்டு தெரிவித்தார்.
நாட்டின் கருத்தியல் அடையாளமாக விளங்கியவர் சீதாராம் யெச்சூரி. கருணாநிதி இல்லாமல் தமிழ்நாடு இல்லை என பேசியவர் சீதாராம் யெச்சூரி. கலைஞர் மீதும், என் மீதும் அதிகம் பாசம் கொண்டவர். சீதாராம் யெச்சூரி எப்போதுமே சிரித்த முகத்துடன் தான் இருப்பார். சீதாராம் யெச்சூரி இளைய சமூகத்தின் வழிகாட்டியாக வாழ்ந்திருக்கிறார்.
சீதாராம் யெச்சூரியின் தமிழ்ப்பற்று, நகைச்சுவை உணர்வு சிறப்பானது. கோவை செம்மொழி மாநாட்டில் 'தமிழ்நாட்டில் எனக்கொரு பங்கு உண்டு' என சீதாராம் யெச்சூரி பேசியதுதான் என் நினைவுக்கு வருகிறது.
கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் இந்தியா கூட்டணி என்கிற ஒரு கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்தவர் சீதாராம் யெச்சூரி. கூட்டணி பங்கீட்டில் மாநில தலைவர்கள் கொஞ்சம் முரண்டு பிடித்தாலும், சீதாராம் யெச்சூரி மட்டும் தான் சிரித்த முகத்துடன் கூட்டணியை முடிவு செய்தார். அவரின் பொன் சிரிப்பை என்றும் மறக்க முடியாது, எந்த பிரச்னையாக, கருத்தாக இருந்தாலும் சிரித்த முகத்துடன் தான் பேசுவார்.
தேவகவுடா, குஜ்ரால் ஆட்சியின்போது இடதுசாரி பங்கில் சீதாராம் யெச்சூரியே முக்கிய காரணம். டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகம் தந்த தலைவர்களில் அவரும் ஒருவர். இடதுசாரிகளையும், ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்தவர் சீதாராம் யெச்சூரி. காங்கிரஸ் தலைமையில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி உருவாக்க முக்கிய காரணமானவர் சீதாராம் யெச்சூரி.
கூட்டணி கட்சியினரிடையே முரண்பாடுகள் இருந்தாலும் பா.ஜ.கவை விழ்த்த வேண்டும் என தீர்க்கமாக கூறியவர் அவர். சீதாராம் யெச்சூரி விட்டுச்சென்ற பணிகளை நாம் தொடர வேண்டும். அவர் நினைத்த மதச்சார்பற்ற இந்தியாவை உருவாக்க வேண்டும். சகோதரத்துவம் மிக்க இந்தியாவை உருவாக்க வேண்டும். சமூக நீதி இந்தியாவை உருவாக்க வேண்டும் இவை அடங்கிய சமதர்ம இந்தியாவை உருவாக்க வேண்டும். அதற்காக நாம் உறுதியேற்போம்” என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“