காற்றாலை மின்சாரத்தில் ஊழலா? ஸ்டாலின், தங்கமணி சொல்வது என்ன?

அவர் என் மீது வழக்கு தொடரட்டும். இல்லையெனில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன்

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடந்ததாக குற்றம் சாட்டிய விவகாரத்தில், ஒரு வாரத்திற்குள் என் மீது அமைச்சர் தங்கமணி வழக்கு தொடராவிட்டால், நான் அவர் மீது வழக்குத் தொடர்வேன் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரித்துள்ளார்.

தமிழகத்தில் மின் உற்பத்தியில் முக்கிய பங்கு வகிப்பது தூத்துக்குடி அனல் மின்நிலையம். இங்கு தலா 210 மெகாவாட் மின் உற்பத்தி திறன் கொண்ட 5 யூனிட்டுகள் இயங்கி வருகின்றன. இவற்றின் மூலம் தினமும் 1,050 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

முதல் மூன்று யூனிட்கள் 30 ஆண்டுகளை கடந்தவை என்பதால் அடிக்கடி பழுது ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இங்கு இயங்கிவந்த இரு யூனிட்டுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதனால் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த 19ம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்ட அறிக்கையில், “தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகத்தின், திருநெல்வேலி மண்டலத்தில் உள்ள மின்வாரியத்தின் ஆடிட் பிரிவு, காற்றாலை மின்சாரம் குறித்து நடத்திய ஆய்வின் போது மிகப்பெரிய ஊழல் நடந்திருப்பது தெரியவந்திருப்பதாக தெரிவித்தார்.

இதனை உடனடியாக மறுத்த அமைச்சர் தங்கமணி, ‘காற்றாலை மின்சாரத்தில் ஊழல் நடக்கவில்லை’ என்றார்.

இதைத் தொடர்ந்து, நேற்று(செப்.20) ஆதாரத்துடன் ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார். அதில், ”

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகத்தில் உள்ள திருநெல்வேலி மண்டல ஆடிட் பிராஞ்சின் உதவி ஆடிட் அதிகாரி தனது அறிக்கையில், “உற்பத்தியே ஆகாத காற்றாலையின் பெயரில் 9 கோடியே 17 லட்சத்து 3 ஆயிரத்து 379 ரூபாய் மதிப்புள்ள காற்றாலை மின்சாரம் பெறப்பட்டதாக போலி ஒதுக்கீடு கணக்கு காட்டப்பட்டுள்ளது.

ஆகவே, இந்த 9 கோடி ரூபாயை மின்வாரியம் கொடுக்கும் கடன்களுக்கு விதிக்கப்படும் 22 சதவீத வட்டியுடன் உடனடியாக வசூல் செய்ய வேண்டும்” என்று மிகத் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில் உள்ள வரிகளை ஆதாரத்துடன் சொல்வது என்றால், “Bogus Energy allotment made without generation” என்று நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் அந்த ஆடிட் அதிகாரி அறிக்கை கொடுத்த பிறகும், ஊழல் நடக்கவில்லை என்று மின்துறை அமைச்சர் மறைக்க வீணே முயற்சி செய்வதில்தான், ஊழலின் மொத்த உருவமுமே மறைந்திருக்கிறது. மின் வாரியத்திற்கு ஏதும் பிரச்சினையில்லை என்றால், 9 கோடி ரூபாயை வசூல் செய்யுங்கள் என்று ஆடிட் அதிகாரி கூறியிருப்பது ஏன்?

அமைச்சர் தன் பேட்டியில் “இது தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரம்” என்று மூடி மறைக்கிறார். அப்படியென்றால், மின்பகிர்மான கழகத்தின் தூத்துக்குடி வட்டார மேற்பார்வைப் பொறியாளர் கடிதம் எழுத வேண்டிய அவசியம் ஏன் வந்தது?

அதுவும் உற்பத்தி ஆகாத காற்றாலையில் மின்சாரம் பெறப்பட்டதாக ஏன் கடிதம் எழுதப்பட்டது? அந்த மேற்பார்வைப் பொறியாளர் மீது ஏன் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை?

அதேபோல், தனியார் ஆலைகளுக்குள் நடைபெற்ற விவகாரத்திற்கு அமைச்சர் தன் பேட்டியில் கூறியிருப்பது போல், 11 கோடி ரூபாய் பணம் செலுத்தக்கோரி மின் பகிர்மானக்கழகம் இப்போது டிமான்ட் நோட்டீஸ் அனுப்பியது ஏன்?” என்று அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினார்.

காற்றாலை மின்சார ஊழல் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட ஆதாரம்

காற்றாலை மின்சார ஊழல் குறித்து ஸ்டாலின் வெளியிட்ட ஆதாரம்

இந்நிலையில், அமைச்சர் தங்கமணி இன்று தூத்துக்குடி வந்து அனல் மின்நிலையத்தில் திடீர் ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அனல்மின் நிலைய அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, “தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் நிலக்கரி தட்டுப்பாடு இல்லை. தற்போது இங்கு 1 லட்சத்து 2 ஆயிரம் டன் நிலக்கரி இருப்பு உள்ளது. வருகிற 25‍-ந்தேதி ஒரு கப்பலில் நிலக்கரி வர உள்ளது. இதனால் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்படாது.

தமிழகத்தில் தற்போதைய சூழலில் காற்றாலைகள் மூலமாக 3500 மெகாவாட், சூரிய சக்தி மூலமாக 1500 மெகாவாட், தண்ணீர் மூலம் 2500 மெகாவாட் மின் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மின் உற்பத்தி அதிகமாக இருப்பதாலேயே தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்தது. நிலக்கரி தட்டுப்பாடு என்பது தவறான தகவல்.

தமிழகத்தில் புதிதாக 4 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யும் வகையில் உடன்குடி, எண்ணூர், வடசென்னை ஆகிய இடங்களில் புதிய அனல் மின்நிலையங்கள் கட்டுமான பணி நடைபெற்று வருகிறது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் தண்ணீர் தட்டுப்பாட்டை போக்க கடல் நீரை சுத்தம் செய்யும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது. மழை நீரை சேகரிக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது.

காற்றாலை மின்சாரத்தில் ஊழல் என்று மு.க.ஸ்டாலின் கூறுவது உண்மைக்கு புறம்பானது. தனியார் நிறுவனம்தான் அரசுக்கு ரூ9.17 கோடி செலுத்தவேண்டியுள்ளது. பாளையங்கோட்டையில் 50 கிலோவாட் மின்சக்தி திறன் கொண்ட துணை மின் நிலையத்தை 80 கிலோவாட் சக்தி கொண்டதாக மாற்ற திட்டமிடப்பட்டு பணிகள் தொடங்குவதாக இருந்தது. அதற்காகவே மின்தடை அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது அத்திட்டம் கைவிடப்பட்டுள்ளது” என்றார்.

இந்நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களிடம் பேசுகையில், “தமிழக மின்சார வாரியம் காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில் ஊழல் நடந்து இருப்பதாகவும், இது தொடர்பாக சி.பி.ஐ. விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் நான் கூறினேன். இதற்கு அமைச்சர் தங்கமணி அளித்துள்ள பதில் தெளிவாக இல்லை. இதற்காக என்மீது வழக்கு தொடருவேன் என்றும் கூறியுள்ளார்.

இதேபோல் குட்கா ஊழலை முதன் முதலில் நான் வெளிக்கொண்டு வந்தேன். அப்போது சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் என் மீது வழக்கு தொடரப்போவதாக கூறினார். ஆனால் இதுவரை அவர் என் மீது எந்த வழக்கும் தொடரவில்லை. ஆனால் நான்தான் அவர் மீது வழக்கு தொடர்ந்தேன்.

இப்போது அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடரப்போவதாக கூறியுள்ளார். காற்றாலை மின்சார கொள்முதலில் நடந்த ஊழலுக்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ளேன். எனவே அமைச்சர் தங்கமணி என்மீது வழக்கு தொடர தயாரா?

ஒருவாரம் வரை காத்திருக்கிறேன், அவர் என் மீது வழக்கு தொடரட்டும். இல்லையெனில் நான் அவர் மீது வழக்கு தொடருவேன். அமைச்சர் தங்கமணி மீது நான் கூறிய புகார் ஆதாரப்பூர்வமானது. அறிக்கையில் நான் கூறிய விவரங்களுக்கு அமைச்சர் தெளிவாக பதில் அளிக்கவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close