நாட்டிலேயே தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்ற விரும்புவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கிராம சபை கூட்டத்தில் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் காந்தி ஜெயந்தியை முன்னிட்டு அனைத்து ஊராட்சிகளிலும் கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி கிராம சபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறும் கிராமங்களை தவிர்த்து மற்ற அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற்றது.
இதில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடைபெற்ற கிராம சபை கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பொது மக்களுடன் கலந்துரையாடினார்.
கிராம சபைக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், “கிராம சபை கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். கோரிக்கைகள் நிறைவேற்றப்படுவது குறித்து மாவட்ட ஆட்சியரிடம் வாரந்தோறும் கேட்டறிவேன். கரையாம்பட்டியில் கதிரடிக்கும் களம் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும். பாப்பாப்பட்டியில் 30 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் நீர் தேக்க தொட்டி அமைக்கப்படும். எந்த வேற்றுமையும் பார்க்காமல் ஒட்டுமொத்த தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு பாடுபடுவோம்” என்று பாப்பாபட்டி ஊராட்சி குறித்து பேசினார்.
கிராம சபாவில் பங்கேற்ற முதல் முதலமைச்சர் என்ற வரலாற்றை உருவாக்கிய ஸ்டாலின், இந்த கிராமம் சமூக சமத்துவத்திற்காக நின்றதால் தான் பாப்பாப்பட்டிக்கு வந்ததாக கூறினார்.
2006 ல் திமுக அரசு பாப்பாப்பட்டி உள்ளாட்சி தேர்தலை நடத்தி எப்படி சாத்தியமற்றதை அடைந்தது என்பதை முதல்வர் நினைவு கூர்ந்தார். "இது அதிகாரிகளான அசோக் வர்தன் ஷெட்டி மற்றும் டி.உதயச்சந்திரனால் அடையப்பட்டது. அப்போது உதயச்சந்திரன் உங்கள் கலெக்டராக இருந்தார், இப்போது அவர் எனது தனிப்பட்ட செயலாளராக இருக்கிறார்," என்று அவர் கூறினார்.
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டர்மங்கலம் மற்றும் கோட்டகாச்சிஏந்தல் ஆகிய இடங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்ட பிறகு, அப்போதைய முதல்வர் கருணாநிதி ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்தார். சென்னையில் அந்த சமத்துவ பெருவிழா நடைபெற்றது. "இந்த விழாவின் போது தான் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கலைஞர் அவர்களுக்கு சமத்துவ பெரியார் என்ற பட்டத்தை வழங்கினார்" என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.
மேலும், “நான் சிறப்பாக செயல்பட்ட முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டேன் (ஊடக கணக்கெடுப்பில்). ஆனால் நான் உண்மையில் செய்ய விரும்புவது, தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றவது என்றும் கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.