Advertisment

ஜூன் 4-ம் தேதி தி.மு.க தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போகிறது; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள்; ஜூன் 4-ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

author-image
WebDesk
New Update
stalin letter

ஜூன் 4-ம் தேதி வெற்றிக் கொடி ஏற்றுவோம்; தொண்டர்களுக்கு ஸ்டாலின் கடிதம்

Listen to this article
0.75x 1x 1.5x
00:00 / 00:00

‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம் என தி.மு.க தொண்டர்களுக்கு மு.க ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

Advertisment

இதுதொடர்பாக மு.க ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில் குறிப்பிட்டிருப்பதாவது;

தமிழ் உள்ளவரை தலைவர் கலைஞர் புகழ் ஓங்கட்டும்! நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழா மடல்.

நம் இதயத்துடிப்பாகவும், குருதி ஓட்டமாகவும் இருந்து ஒவ்வொரு நாளும் நம்மை இயக்கிக் கொண்டிருப்பவர் தலைவர் கலைஞர். அவர் நம்மை இயக்குவதால்தான் திராவிட முன்னேற்றக் கழகம் எனும் அரசியல் பேரியக்கத்தை நம்மால் அவர் வகுத்துத் தந்த பாதையில் வெற்றிகரமாக இயக்க முடிகிறது.

தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மட்டுமல்ல, இந்திய அரசியல் வரலாற்றிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களைப் போன்ற பொதுவாழ்வில் சளைக்காமல் உழைத்து, சாதனைகள் பல படைத்த தலைவரைக் காண்பது அரிது. இந்திய வரைபடத்தில் தேடவேண்டிய ஒரு குக்கிராமமான திருக்குவளையில் பிறந்து, திருவாரூர் எனும் சிறிய நகரில் பயின்று, 14 வயதில் மாணவப் பருவத்திலேயே மொழி-இன உணர்வுடனான கொள்கை வழி நடந்து, பெரியார்-அண்ணா எனத் தன் தலைவர்களின் நன்மதிப்பைப் பெறும் வகையில் கடுமையாக உழைத்து, போராட்டக் களத்திற்கு அஞ்சாத வீரனாக, சிறைத் தண்டனையைச் சிரித்த முகத்துடன் ஏற்கும் தீரனாக, படைப்பாற்றல் மிக்க இளந்தலைவராக, எந்நாளும் மக்களுடன் இணைந்திருப்பவராகத் திகழ்ந்தவர் தலைவர் கலைஞர்.

முதன் முதலில் தேர்தல் களம் கண்ட 1957 முதல், இறுதியாகத் தேர்தல் களம் கண்ட 2016 வரை 13 தேர்தல்களில் தொடர் வெற்றியைப் பெற்ற இந்திய அரசியல் தலைவர் கலைஞர் மட்டுமே. 5 முறை தமிழ்நாட்டின் முதலமைச்சர். அளப்பரிய திட்டங்கள், இந்தியாவுக்கே முன்னோடியான சாதனைகள், இந்திய அரசியலில் முக்கியப் பங்காற்றிப் பல குடியரசுத் தலைவர்களையும் பிரதமர்களையும் தேர்ந்தெடுக்கத் துணைநின்ற அரசியல் ஆளுமை. இத்தனைத் திறமைகளும் இவ்வளவு சாதனைகளும் ஒருங்கே பெற்ற ஒரே தலைவர் நம் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான்.

அவர் நம்மை நாள்தோறும் இயக்கும்போது, நம் உழைப்பும் அவரிடம் பெற்றதாகவே இருக்கும். நம் இயக்கமும் அவர் வழிகாட்டிய திசையில் நடக்கும். நமது கழக ஆட்சியும் அவரது ஆட்சி போலவே சாதனைத் திட்டங்களால் வரலாறு படைக்கும். அதனால்தான் 2023 ஜூன் 3-ஆம் நாள் தொடங்கிய தலைவர் கலைஞரின் நூற்றாண்டு 2024 ஜூன் 3 அன்று நிறைவடையும் நிலையில் கடந்த ஓராண்டு முழுவதும் சாதனைத் திட்டங்களாலும், மக்களுக்குப் பயன் அளிக்கும் செயல்களாலும் அவரது நூற்றாண்டைக் கொண்டாடியிருக்கிறோம்.

தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னை கிண்டியில் கலைஞர் பன்னோக்கு மருத்துவமனை, மதுரையில் கலைஞர் நூற்றாண்டு நூலகம், அலங்காநல்லூரில் கலைஞர் நூற்றாண்டு நினைவு ஏறுதழுவுதல் அரங்கம், சென்னை கிளாம்பாக்கத்தில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம், நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் நிரந்தர ஓய்வுகொள்ளும் சென்னை மெரினா கடற்கரையில் வரலாற்று ஆவணமாகக் கலைஞர் நினைவிடம் உள்ளிட்டவை கடந்த ஓராண்டில் நிறைவடைந்து கம்பீரமாக அமைந்துள்ளன.

அறக்கட்டளை சார்பில் திருவாரூரில் கட்டி முடிக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ள கலைஞர் கோட்டம் அன்றாடம் பள்ளி -கல்லூரி மாணவர்களுக்கு வரலாற்றைக் கற்றுத் தந்து கொண்டிருக்கிறது. திருத்தலங்கள் பல நிறைந்த காவிரி டெல்டா மாவட்டங்களுக்குச் செல்கின்ற தமிழ்நாட்டு மக்களின் புதிய திருத்தலமாகத் திருவாரூர் கலைஞர் கோட்டம் அமைந்துள்ளது.

இவற்றை உருவாக்குவதில் உங்களில் ஒருவனான நான் செலுத்திய கவனத்தையும் அக்கறையும் கலைஞரின் உடன்பிறப்புகளான நீங்களும் தமிழ்நாட்டு மக்களும் அறிவீர்கள். கழகத் தலைவர் என்ற பொறுப்பைச் சுமந்திருக்கும் என்னுடன் போட்டி போட்டுக்கொண்டு கழகத்தின் கடைசித் தொண்டன் வரை கலைஞரின் நூற்றாண்டில் தன் பங்களிப்பைச் செலுத்தியதுதான் வேறெந்த தலைவருக்கும் அமையாத வகையில் தலைவர் கலைஞரின் நூற்றாண்டுக்கு அமைந்த சிறப்பு.

சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம் என்ற அரசியல் இலக்கணத்தை வகுத்துத் தந்து, ஆட்சிநெறியை உருவாக்கியவர் தலைவர் கலைஞர். அதனால், அவருடைய நூற்றாண்டு என்பது சொல்லாகத் தமிழ்நாடு தழுவிய பொதுக்கூட்டங்கள், கருத்தரங்குகள் என நடத்தப்படுகின்ற அதே நேரத்தில், செயல் வடிவிலும் பல நிகழ்வுகள் நடைபெற வேண்டும் என்று 2023 மே 28 அன்று நடந்த மாவட்டச் செயலாளர்கள்/ பொறுப்பாளர்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களை முன்னிறுத்தி, மே 29 அன்று எழுதிய உங்களில் ஒருவன் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தேன்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் உருவாக்கிய திராவிட முன்னேற்றக் கழகத்தை ஊர்கள்தோறும் வளர்த்தெடுத்தவர் தலைவர் கலைஞர். அண்ணாவின் மறைவுக்குப் பிறகு கழகத்தை அரை நூற்றாண்டு காலம் கட்டிக்காத்து வலிமைப்படுத்தியவரும் தலைவர் கலைஞர்தான். அவருடைய நூற்றாண்டில் கழகத்தை மேலும் வலிமைப்படுத்தும் வகையில், புதிதாக ஒரு கோடி உறுப்பினர்களைச் சேர்க்கும் செயல்திட்டமும் வகுக்கப்பட்டு, ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு சராசரியாக 50 ஆயிரம் புதிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

தன்னால் கழகத்திற்கு என்ன நன்மை என்று நினைப்பவர்கள்தான் கழகத்தின் இரத்தநாளங்கள் என்றவர் கலைஞர். அத்தகைய இரத்தநாளங்களாகக் கழகத்தின் அனைத்து நிர்வாகிகளும் செயலாற்றி, ஒரு கோடி புதிய உறுப்பினர்களைச் சேர்த்து, கழகத்தின் மொத்த உறுப்பினர்கள் எண்ணிக்கையை இரண்டு கோடிக்கு மேல் உயர்த்தியிருப்பது உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டில் நாம் மேற்கொண்டுள்ள அரிய பணியாகும்.

நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள வேண்டியிருந்ததாலும், தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறைக்கு வந்ததாலும் முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டினையொட்டி நாம் திட்டமிட்டிருந்த ஒரு சில செயல்பாடுகள் முழுமை பெற இயலவில்லை. எனினும், தேர்தல் பணியும்கூட தலைவர் கலைஞரின் புகழ் போற்றும் பணியாகவே இருந்தது.

இந்தியாவில் ஜனநாயகத்திற்கு நெருக்கடிகள் ஏற்பட்ட போதெல்லாம் வடஇந்தியத் தலைவர்களின் பார்வை தெற்கை நோக்கித் திரும்பியதும், அவர்களின் எதிர்பார்ப்பிற்குரிய தலைவராக நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள் செயலாற்றியதும், அதன் காரணமாக ஜனநாயகம் மீட்கப்பட்டு, ஆட்சியில் நிலைத்தன்மை ஏற்பட்டதையும் எவரும் மறுக்க முடியாது. கூட்டாட்சித் தத்துவத்தை வலியுறுத்தி, மாநில சுயாட்சியின் குரலை இந்திய அளவில் முன்னெடுத்தவர் தலைவர் கலைஞர்.

திராவிட முன்னேற்றக் கழகம் என்றாலே சமூகநீதி, மத நல்லிணக்கம், எளிய மக்களின் வாழ்வுரிமை, மாநில சுயாட்சி, ஆதிக்க மொழிகளிடமிருந்து தாய்மொழியைப் பாதுகாத்தல், இந்தியாவுக்கே முன்னோடியான திட்டங்கள் என்ற எண்ணத்தைத் தன் செயல்களால் பதிவு செய்திருக்கிறார் கலைஞர். அதனால்தான் சமூகநீதிக்கு எதிராகவும், மாநில உரிமைகளைப் பறிக்கின்ற வகையிலும், ஏழை-எளிய மக்களைப் பற்றி அக்கறையில்லாதவர்களாகவும் இருக்கக்கூடிய மதவெறி அரசியல் நடத்துவோர் இந்தியாவின் எந்த மாநிலத்தில் பேசினாலும் தி.மு.க. மீது தாக்குதலை நடத்துகிறார்கள். வன்மத்தைக் கக்குகிறார்கள். வதந்திகளைப் பரப்புகிறார்கள். தோல்வி பயத்தில் நடுங்குவதை அவர்களின் குரல் வெளிப்படுத்துகிறது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தோழமையில் புதிய இந்தியா உருவாகப்போவதை உள்ளூர உணர்ந்து அவர்கள் புலம்புவதைக் காண முடிகிறது.

ஜூன்-3 அன்று முத்தமிழறிஞர் கலைஞர் பிறந்தநாள். தேர்தல் நடத்தை முறைகளைக் கவனத்தில் கொண்டு, மக்கள் நலன் சார்ந்த நிகழ்வுகளை ஒவ்வொரு மாவட்டக் கழகம் சார்பிலும், ஒன்றிய - நகர - பேரூர் - கிளைக் கழகங்கள் சார்பிலும் நடத்தப்பட வேண்டும். கலைஞர் நூற்றாண்டு நிறைவுறும் இந்த ஜூன்-3 அன்று மக்கள் கூடும் இடங்களில் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மாலையிட்டு, அனைத்துக் கொடிக்கம்பங்களிலும் கொடிகளைப் புதுப்பித்துக் கொடியேற்றி, இனிப்புகள் வழங்கி, மக்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கிட வேண்டும். கழகத்தினர் தங்கள் இல்லங்களுக்கு முன்பாக ‘கலைஞர் 100’ என்ற வரியுடன் கோலமிட்டு முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் பிறந்தநாளைக் கொண்டாட வேண்டும். உள்ளூர் மைதானங்களில் இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகளை நடத்திப் பரிசுகளை வழங்கி ஊக்குவிக்க வேண்டும்.

ஜூன்-4 நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகின்றன. அன்றைய நாளில் வெற்றிக் கொடி ஏற்றுவோம். ‘இந்தியா’வின் வெற்றியைத் தலைவர் கலைஞருக்கு காணிக்கையாக்குவோம். தமிழ் உள்ளவரை புகழ் நிலைத்திருக்கும் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் நூற்றாண்டின் தொடர்ச்சியை இந்திய அளவில் கொண்டாடுவோம். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Dmk Mk Stalin Tamil Nadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment