சென்னை, அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவத்தில், 5 மாதங்களில் விசாரணை முடிக்கப்பட்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 23-ஆம் தேதி இரவு, சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இதைத் தொடர்ந்து, நடத்தப்பட்ட தீவிர விசாரணையின் அடிப்படையில் கோட்டூர்புரம் பகுதியைச் சேர்ந்த ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்தனர். சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், இவ்வழக்கை மூன்று பெண் ஐ.பி.எஸ் அதிகாரிகள் கொண்ட சிறப்பு குழுவினர் விசாரித்தனர். இதன் தொடர்ச்சியாக, கடந்த மார்ச் மாதம் முதல் இந்த வழக்கு விசாரணை சென்னை மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இந்நிலையில், வழக்கின் அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவுபெற்ற நிலையில் இன்று (மே 28) இந்த வழக்கிற்கு தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதன்படி, குற்றம்சாட்டப்பட்ட ஞானசேகரனை குற்றவாளி என அறிவித்து நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், ஞானசேகரனுக்கான தண்டனை விவரங்கள் ஜூன் 2-ம் தேதி வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
நீதிமன்றத்தின் இந்த உத்தரவு குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், "சென்னை மாணவிக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக வழக்கைத் துரிதமாக நடத்தி, ஐந்தே மாதத்தில் நீதியைப் பெற்றுத் தந்துள்ளது நமது காவல்துறை. விசாரணை அதிகாரிகளுக்கும், அரசு வழக்கறிஞர்களுக்கும், மாண்பமை நீதிமன்றத்துக்கும் நன்றி!
காவல்துறையினரிடம் நான் தொடர்ந்து கூறுவது: 'குற்றம் நடக்கக் கூடாது; நடந்தால் எந்தக் குற்றவாளியும் தப்பக் கூடாது; விசாரணையைத் துரிதமாக நடத்தி, தண்டனை பெற்றுத் தர வேண்டும்!'.
குற்றங்களின் கூடாரமாக அன்று அரசை நடத்தி, இன்று அவதூறுகளை அள்ளித் தெளித்து, மலிவான அரசியல் செய்யத் துடித்த எதிர்க்கட்சியினரின் எண்ணத்தைத் தவிடுபொடியாக்கி உள்ளோம்.
சட்டநீதியையும் - பெண்கள் பாதுகாப்பையும் எந்நாளும் உறுதிசெய்வோம்!" என்று குறிப்பிட்டுள்ளார்.