டெல்டா மாவட்டங்களில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை முதல் பார்வையிட்டார். தஞ்சை மாவட்டத்தில் ஆலக்குடி பகுதிகளில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணிகளை பார்வையிட்ட தமிழக முதல்வர் மதியம் திருச்சி மாவட்டம் லால்குடி, புள்ளம்பாடி பகுதிகளில் உள்ள ஆறுகளில் தூர்வாரும் பணியினை பார்வையிட்டார்.
பின்னர் அங்கு வயல்வெளிகளில் வேலை செய்த பெண்களிடம் குறைகளை கேட்டறிந்தார். தொடர்ந்து விமான நிலையத்தில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில், “காவிரி டெல்டா மாவட்டங்களில் இருக்கக்கூடிய சேத்தியாத்தோப்பு, மைக்கேல்பட்டி, வடசேரியில் தனியார் மூலம் நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்கான ஏல அறிவிக்கையை மத்திய அரசு வெளியிட்ட உடனே, அடுத்த நிமிடமே தமிழக அரசு அதை எதிர்த்துப் போராடியது.
மத்திய அரசுக்கு கடிதம் அனுப்பியது. ஒருபோதும் இதை அனுமதிக்கமாட்டோம் என்று நானே அறிவித்தேன். இதன்மூலமாக மத்திய அரசு ஏல அறிவிக்கையை ரத்து செய்தது.
டெல்டாவின் உரிமைகளை விட்டுக்கொடுக்காத அரசாக திமுக அரசு தொடர்ந்து செயல்படும். அதேபோல், காவிரி டெல்டாவின் வேளாண் வளர்ச்சிக்கும், இந்தப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாரவும் முன்னுரிமை அளித்து இந்த அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
இந்த வரிசையில், காவிரியில் உள்ள பாசன கால்வாய்களைத் தூர்வாரும் பொருட்டு கடந்த 2021-22ம் ஆண்டில், 62 கோடியே 91 லட்ச ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது. 3,859 கி.மீ தூரமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டன.
மேட்டூர் அணை பாசனத்துக்காக திறந்துவிடப்படக்கூடிய நாளான ஜூன் 12-ம் தேதியன்று அணை திறக்கப்படும். அதோடு, வேளாண் பெருமக்களுக்கான பல்வேறு உதவிகள் எல்லாம் வழங்கப்படும். இதன் விளைவாக காவிரி டெல்டா பகுதியில் வரலாற்று சிறப்பான சாதனையை நாம் எட்டியிருக்கின்றோம்.
4 லட்சத்து 90 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 341 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டு, 39 லட்சத்து 73 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டு மிகப்பெரிய சாதனை படைக்கப்பட்டிருக்கின்றது.
அதை சாதனை என்று சொல்வதைவிட, வேளாண் புரட்சி என்று கூறலாம். அதன் தொடர்ச்சியாக 2022-23 வரவு செலவு திட்டத்தில், காவிரி பாசனப்பகுதியில் தூர்வாருவதற்காக ரூ.80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடைமடை பகுதிவரை தண்ணீர் செல்ல வசதியாக, தூர்வாரும் பணிகள் துரிதமாக நடந்தது.
கடந்தாண்டு மேட்டூர் அணை முன்கூட்டியே மே 24 அன்றே திறக்கப்பட்டது. இருந்தாலும், தண்ணீர் வந்து சேருவதற்கு முன்பே 4,964 கி.மீ நீளமுள்ள கால்வாய்கள் அனைத்திலும் தூர்வாரும் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டன.
உழவர்களுக்கான இடுபொருட்களும், கூட்டுறவு வங்கிக் கடன்களும் முழுமையாக கிடைப்பதற்கான அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டன. இதன் விளைவாக 2021-22 சாதனையை முறியடிக்கும் வகையில், மற்றொரு வரலாற்று சாதனையாக 2022-23ம் ஆண்டில், 5 லட்சத்து 36 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடியும், 13 லட்சத்து 53 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் சம்பா சாகுபடியும் மேற்கொள்ளப்பட்டது. இதனால், 41 லட்சத்து 47 ஆயிரம் டன் நெல் உற்பத்தி செய்யப்பட்டது.
இந்த ஆண்டு இதேபோன்றதொரு திட்டமிடுதலை தமிழக அரசு செய்தது. நீர்வளத்துறை மூலமாக தூர்வாரும் பணிகளை மேற்கொள்வதற்காக 90 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டது.
சேலம், நாமக்கல், அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, திருச்சி, தஞ்சாவூர், நாகப்பட்டினம், திருவாரூர் மற்றும் புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில், 4,773 கி.மீ நீளமுள்ள கால்வாய்களில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதில் 96 விழுக்காடு அளவு பணிகள் முடிக்கப்பட்டுள்ளன. எஞ்சிய பணிகளும் குறிப்பிட்ட சில நாட்களுக்குள் முடிக்கப்படும்.
இதோடு வேளாண் பொறியியல் துறை சார்பாக ரூ.5 கோடி செலவில், 1,146 கி.மீ நீளமுள்ள கால்வாய்களைத் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதில் 651 கி.மீ தூரமுள்ள தூர்வாரும் பணிகள் முடிந்துள்ளது. எஞ்சியுள்ள 45 விழுக்காடு தூர்வாரும் பணிகள் தொடர்ந்து விரைவாக நடைபெற்றது வருகிறது. சென்ற ஆண்டுகளில் நாம் சாதித்துக் காட்டியதைப் போலவே மேட்டூர் அணை நீர் காவிரி டெல்டா பகுதிகளுக்கு வருவதற்கு முன்னதாகவே, அனைத்து தூர்வாரும் பணிகளும் முடிக்கப்படும்" என்றார்.
தொடர்ந்து, மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று விட்டதா என்ற கேள்விக்கு, ஆணையம் கூறிய சிறிய குறைபாடுகள் சரி செய்யப்பட்டு விட்டது. மூன்று மருத்துவக் கல்லூரிகளுக்கான அங்கீகாரம் கிடைக்கப்பெற்று விட்டது.
பல்கலைக்கழகங்களில் மாணவர்களுக்கு பட்டம் வழங்கப்படாததற்கு ஆளுநர் தான் காரணம் என உயர்கல்வி துறை அமைச்சர் குற்றம்சாட்டி உள்ளார். அதே குற்றச்சாட்டை நானும் வைக்கிறேன். இது போன்ற பிரச்சனைகளுக்காக தான் பல்கலைக்கழக வேந்தர்களாக முதலமைச்சரை நியமிக்க வேண்டும் என சட்டசபையில் ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றி உள்ளோம்.
தமிழக ஆளுநர் பல்வேறு மசோதாக்களை நிறுத்தி வைத்திருப்பதால் தமிழக அரசு நீதிமன்றத்தை நாடலாம் என சட்ட வல்லுனர்களை கலந்து ஆலோசித்து வருகின்றோம்.
கவர்னரை மாற்ற கோரிக்கை வைப்பீர்களா குறித்த கேள்விக்கு நாங்கள் நினைப்பதெல்லாம் நடந்துவிட்டால் இந்த பிரச்சனை இல்லை. தமிழக அமைச்சரவையில் மாற்றம் உள்ளதா உதயநிதி துணை முதல்வர் ஆவாரா என்ற கேள்விக்கு இப்போதைக்கு வரும் சேதி ஒன்றிய அரசில் தான் அமைச்சரை மாற்றம் இருப்பதாக சேதி வருகிறது என்றார்.
அமுல் நிறுவனம் தமிழகத்தில் வருவது எதிர்க்கிறோம் அதில் உறுதியாக இருக்கிறோம். ஆவின் நிறுவனத்தில் சிறுவர்கள் வேலை செய்வது குறித்து அத்துறை அமைச்சர் மறுத்துள்ளர். மேலும் அந்தக் காட்சிகள் Fake ஆக வெளியிடப்பட்டது.
அதன் பின்னர், முதல்வரிடம், மேகேதாட்டு அணை விவகாரம் குறித்து கேட்கப்பட்டபோது, அதற்குப் பதிலளித்த அவர், "கர்நாடகாவில் புதிதாக பொறுப்பேற்றுள்ள காங்கிரஸ் அரசு மட்டுமல்ல, ஏற்கெனவே இருந்த அரசும் மேகேதாட்டுவில் அணை கட்டுவோம் என்றுதான் கூறி வந்தது.
அப்போதும் நாங்கள் எதிர்ப்பு தெரிவித்துக் கொண்டுதான் இருந்தோம். அதேநிலையில்தான் எங்களுடைய ஆட்சி இன்றைக்கும் உள்ளது. கலைஞர் எப்படி அந்த விசயத்தில் உறுதியாக இருந்தாரோ, அதே உறுதியோடு இந்த ஆட்சி நிச்சயமாக இருக்கும். அதில் எந்தவிதமான சந்தேகமும் வேண்டாம்" என்று அவர் கூறினார்.
தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் லால்குடி பகுதியில் தூர் வாரும் பணிகளை ஆய்வு செய்து பின்னர் திருச்சிக்கு வரும் வழியில் லால்குடி அருகே மாங்குடி கிராமத்தில் விவசாய சங்கத்தை சேர்ந்த எஸ்.ஆர்.கண்ணன் என்பவருடைய குழந்தைகளான ஸ்ரீநிதி, கீர்த்திவாசன் ஆகியோர் முதலமைச்சருக்கு ஆட்டுக்குட்டியை பரிசாக வழங்கினர்.
அதனை பெற்றுக்கொண்ட முதல்வர் அவர்களுக்கு சாக்லேட் வழங்கி மகிழ்ந்தது குறிப்பிடத்தக்கது.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.