சட்டவிரோத பணப் பரிமாற்ற வழக்கு மற்றும் வேலை வாய்ப்பு மோசடி புகாரில் மதுவிலக்கு, ஆயத்தீர்வை மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறையால் கைதுசெய்யப்பட்டார்.
அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டது. தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
தொடர்ந்து அவரிடம் இருந்து அமைச்சரவை பொறுப்புகள் தங்கம் தென்னரசு மற்றும் முத்துசாமியிடம் பிரித்து கொடுக்கப்பட்டது. செந்தில் பாலாஜி இலாகா இல்லாத அமைச்சராக தொடர்ந்தார்.
அப்போது ஆளுனர் ஆர்.என். ரவி இதற்கு ஆட்சேபம் தெரிவித்தார். மோசடி புகாரில் சிக்கி, அமலாக்கத்துறை விசாரணையை எதிர்கொள்ளும் செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பில் தொடர் தார்மீக உரிமை இல்லை என்றார்.
இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. சபாநாயகர் அப்பாவு, முதல்வர் மு.க. ஸ்டாலின், அமைச்சர் பொன்முடி உள்ளிட்ட பலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இந்த நிலையில், செந்தில் பாலாஜி அமைச்சர் பொறுப்பில் இருந்து ஆளுனரால் இன்று அதிரடியாக நீக்கப்பட்டார். இதுதொடர்பாக பேசிய முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ”ஆளுனருக்கு அந்த அதிகாரம் கிடையாது; இது தொடர்பாக சட்ட ரீதியாக சந்திப்போம்” என்றார்.
சபாநாயகர் அப்பாவு எதிர்ப்பு
இதேபோல் சபாநாயகர் அப்பாவும், செந்தில் பாலாஜி நீக்கத்துக்கு ஆட்சேபம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர், “அமைச்சரை நீக்க ஆளுனருக்கு அதிகாரம் இல்லை.
இது அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது” எனத் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“