தேசிய அளவில் பாஜக, காங்கிரஸ் அல்லாத மூன்றாவது அணி அமைக்க, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தீவிர முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இருந்து வருகிறது. ஆனால், திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலின், இன்று நண்பகலில் தனது டிவிட்டர் பக்கத்தில் மம்தா பார்னர்ஜியின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தேசிய அளவில் காங்கிரஸ், பாஜக அல்லாத மாநில கட்சிகளை ஒருங்கிணைத்து மூன்றாவது அணி அமைக்கும் பணியில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, தெலுங்கான முதல்வர் சந்திரசேகர் ராவ் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர். இந்த மூன்றாவது அணிக்கு சந்திரபாபு நாயுடு ஆதரவு தெரிவிக்க வாய்ப்பு இருக்கிறது.
கடந்த மாதம் இது தொடர்பாக, மாநில கட்சிகளின் தலைவர்களை மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி டெல்லியில் சந்தித்துப் பேசினார். அப்போது திமுகவின் மாநிலங்களவை தலைவர் கனிமொழி எம்.பி.யையும் சந்தித்துப் பேசினார். அதன் பின்னர் கடந்த மாதமே ஸ்டாலினை சந்திக்க சென்னை வருவதாக இருந்தது. தீடீரென அந்த பயணம் ரத்து செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று ஸ்டாலின் தனது டிவிட்டரில் மம்தா பானர்ஜியின் முயற்சிக்கு வாழ்த்து தெரிவிப்பதாக பதிவிட்டுள்ளார். அந்த ட்விட்டில் அவர் கூறியிருப்பதாவது:
‘‘திமுக எப்போதும் மாநில கட்சிகளின் ஒற்றுமைக்காக பாடுபட்டு வருகிறது. சர்வாதிகார, ஜனநாயக விரோத பாஜகவுக்கு எதிராக மாநில கட்சிகளை ஒருங்கிணைக்க முயற்சித்து வரும் மம்தா பானர்ஜிக்கு பாராட்டுக்கள்’’ என தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி உள்ளது. ஆனால், மம்தாவின் மூன்றாவது அணி அமைக்கும் முயற்சிக்கு ஆதரவு தெரிவித்திருப்பது, ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2014ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சி கழற்றிவிடப்பட்டது. அந்த தேர்தலில் திமுகவுக்கு ஒரு இடம் கூட கிடைக்கவில்லை. பின்னர் 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் கூட்டணியில் காங்கிரஸ் கட்சி இணைந்து போட்டியிட்டது. அப்போதும் திமுக அணி தோல்வியையே கண்டது.
ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், ஆளும் கட்சிக்கு எதிராக திமுக முன்னெடுக்கும் போராட்டங்களில் எல்லாம் காங்கிரஸ் கட்சி உடனிருந்தது. சமீபத்தில், சுப்ரிம் கோர்ட் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா மீது ராஜ்யசபாவில் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை காங்கிரஸ் கட்சி கொண்டு வந்தது. அதில் திமுக உறுப்பினர்கள் முதலில் கையெழுத்திடுவதாக சொல்லியிருந்தனர். கடைசி நேரத்தில் கையெழுத்திடாமல் தவிர்த்துவிட்டனர்.
அப்போதே திமுக காங்கிரஸ் கூட்டணியில் நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில் மம்தாவின் மூன்றாவது அணிக்கு திமுக வெளிப்படையாக ஆதரவு தெரிவித்திருப்பதன், கூட்டணியில் இருந்து காங்கிரஸ் கட்சியை கழற்றிவிட முடிவு செய்துவிட்டது என்பது உறுதியாகிறது.