செஸ் ஒலிம்பியாட் போட்டி தொடங்க விழாவிற்கு பிரதமர் மோடி தமிழகம் வந்தபோது, அரசு உரிய பாதுகாப்பு வழங்கப்பட வில்லை என பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலை நேற்று குற்றஞ்சாட்டியிருந்தார். இந்தநிலையில் பிரதமர் தமிழகம் வந்தபோது எவ்வித பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை, உரிய பாதுகாப்பு வழக்கப்பட்டது என டிஜிபி சைலேந்திர பாபு விளக்கம் அளித்துள்ளார்.
சென்னை, மாமல்லபுரத்தில் 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்றது. இந்தப் போட்டியை தொடங்கி வைக்க பிரதமர் மோடி சென்னை வந்திருந்தார். அப்போது பிரதமருக்கு தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என அண்ணாமலை நேற்று குற்றம்சாட்டினார்.
ஆளுநர் ஆர்.என். ரவியை சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, "சென்னையில் செஸ் ஒலிம்பியாட் விளையாட்டு போட்டி தொடக்கவிழாவிற்கு பிரதமர் வருகை தந்தார். 180க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்தவர்கள் வந்திருந்தனர். பிரதமர் வருகையின் போது தமிழக அரசு போதுமான பாதுகாப்பு வழங்கவில்லை என்பது பல ஆதாரங்களின் அடிப்படையில் எங்களுக்குத் தெரியவந்தது. மெட்டல் டிடெக்டார் கருவி வேலை செய்யவில்லை. இது குறித்து ஆளுநரிடம் புகார் அளித்துள்ளோம்" என்று கூறினார்.
2 மடங்கு அதிக உபகரணங்கள்
இந்த நிலையில் இன்று (நவம்பர் 30) காவல்துறை நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய டி.ஜி.பி சைலேந்திரபாபு, "பிரதமர் வருகையின் போது எந்த பாதுகாப்பு குறைபாடும் ஏற்படவில்லை. குறைபாடுகள் ஏற்பட்டதாக தகவல் ஏதும் இல்லை. ஆண்டுதோறும் காவல்துறை பயன்படுத்தும் உபகரணங்கள், பாதுகாப்பு உபகரணங்கள் உள்பட அனைத்தும் ஆய்வு செய்யப்படுகிறது. பல ஆண்டுகளாகவே இந்த வழக்கம் உள்ளது.
தமிழகத்தில் தான் அதிக உபகரணங்கள், தரமான உபகரணங்கள் உள்ளன. நவீன உபகரணங்களாக உள்ளன. குறிப்பாக அண்டை மாநிலங்கள் நம்மிடமிருந்து உபகரணங்கள் வாங்கி பயன்படுத்துகின்றனர். நம்மிடம் 2 மடங்கு அதிக உபகரணங்கள் உள்ளன" என்று கூறினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil