சென்னை நந்தம்பாக்கத்தில் உள்ள வர்த்தக மையத்தில் உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை இன்று (ஜன.7) முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார். இன்றும், நாளையும் மாநாடு நடைபெறுகிறது. 50க்கும் மேற்பட்ட உலக நாடுகளைச் சேர்ந்த பிரநிதிகள் மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். இந்த மாநாட்டில் ரூ.5.5 லட்சம் கோடி முதலீடுகளை ஈர்க்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.
மாநாட்டில் சிறப்பு விருந்தினராக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில், ஜவுளித்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கலந்து கொண்டார். மாநாட்டில் பேசிய அவர், "தமிழ்நாடு அரசுக்கு பாராட்டுகளை தெரிவித்தார். “கலாச்சாரம், இயற்கை எழில் கொஞ்சும் மாநிலமாக தமிழகம் உள்ளது. இந்தியாவில் தமிழகத்தின் பெருமையை பறைசாற்றும் வகையில் நாடாளுமன்றத்தில் செங்கோல் வைக்கப்பட்டுள்ளது. ஒரு டிரில்லியன் டாலர் இலக்கை வைத்து செயல்படும் முதல்வர் மு.க. ஸ்டாலினை பாராட்டுகிறேன்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், இஸ்ரோ விஞ்ஞானி நிகர் ஷாஜியை குறிப்பிட்டு பேசினார். அப்போது, "ஆதித்யா எல்.1 விண்கலம் நேற்று வெற்றிகரமாக நிர்ணயிக்கப்பட்ட எல்.1 புள்ளியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்த ஆதித்யா எல்.1 திட்டத்தின் இயக்குநர் நிஹர் ஷாஜி. இவர் தமிழ்நாட்டு மகள் என்று கூறினார்.
தமிழ்நாட்டின் தென்காசியைச் சேர்ந்தவர் என்றார். மேலும் பேசிய அவர், அரங்கில் உள்ள அனைவரும் நிஹர் ஷாஜிக்கு எழுந்து நின்று பாராட்டுவோம்" என்று கூறினார். இதையடுத்து அரங்கில் இருந்த வெளிநாட்டு பிரநிதிகள், முதலமைச்சர், அமைச்சர்கள் என அனைவரும் எழுந்து நின்று கைத்தட்டி பாராட்டு தெரிவித்தனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“