மேடைத் தமிழ் பயிற்சி பட்டறை தொடங்குகிறார், நாஞ்சில் சம்பத்!

பூத்து வருகிற புதிய தலைமுறை மேடையிலே சுடர் விட வேண்டும் என்று, தாகமும் மோகமும் கொண்ட, தம்பிமார்களுக்கு, மேடைத்தமிழ் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்கப் போகிறேன்.

டிடிவி.தினகரன் அணியில் இருந்து விலகிய நாஞ்சில் சம்பத், விரைவில் ‘மேடைத் தமிழ் பயிற்சி பட்டறை’யைத் தொடங்கப் போவதாக அறிவித்துள்ளார்.

டிடிவி.தினகரன் கடந்த 15ம் தேதி அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற புதிய இயக்கத்தை ஆரம்பித்தார். இது தற்காலிகமானதுதான். அதிமுகவை கைப்பற்றுவதே எங்கள் முதன்மை நோக்கம் என்று மேடையில் அறிவித்தார். இந்நிலையில் இன்று கட்சியின் கொள்கை பரப்பு துணை செயலாளராக இருந்த நாஞ்சில் சம்பத், கட்சியில் இருந்து விலகுவதாகவும், அரசியலுக்கு முழுக்குப் போடுவதாகவும் அறிவித்தார். இது குறித்து அவரிடம் கேட்ட போது,

’’காலகாலமாக எந்த கொள்கையை பேசி வந்தேனோ… எந்த கொள்கையை பேசியதால் முகமும் முகவரியும் கிடைத்ததோ… காலம் காலமாக எந்த கொள்கையை பேசி வந்ததால், அடக்குமுறை சட்டங்களை வெற்றி கொண்டேனோ… காலம் காலமாக எந்த கொள்கையை பேசி இன உணர்வு தீயை இன்ப தமிழகத்தில் ஏற்றி வைத்தேனோ, அந்த கொள்கை திரவியத்தை கொட்டி தீர்த்துவிட்டார், டிடிவி.தினகரன். பட்டப்பகலில் செய்த இந்த பச்சை படுகொலையை என்னால் ஏற்க முடியவில்லை. தீர்ந்து போகாத திராவிட இயக்கத்தை தீர்த்துக்கட்ட, சங்க்பரிவார் சதி செய்யும் இந்த காலகட்டத்தில் திராவிடமும், அண்ணாவும் இல்லாமல் கட்சியின் பெயரை அறிவித்ததை என்னால் ஏற்க முடியவில்லை. தலைகளை எண்ணிய தலைவர்களுக்கு மத்தியில் இதயங்களை எண்ணிய மகத்தான தலைவர் அறிஞர் அண்ணா. இருண்டு கிடக்கும் இதய கணக்குகள் விடிவதற்கு நாவினாலே விளக்கேறியவர் அண்ணா. அந்த நாலடி இதயத்தை புன்மை தேறையாய், பட்டுப்பூச்சியாய் கிடந்த தமிழனை, தொட்டு தூக்கி துலக்கி வைத்த மகோந்த சொல் திராவிடம். கற்கால தமிழனை பொற்காலத்துக்கு இட்டுச் சென்ற திராவிடத்தையும், அண்ணாவையும் என்னால் இழக்க முடியாது. என்னுடைய பொது வாழ்வில் நிறைய இழந்துள்ளேன். இதை என்னால் இழக்க இயலாது. என் இதயத்தில் திராவிடமும் அண்ணாவும் தான் ஒளியாக இருக்கிறார்கள். ஒளியை இழந்துவிட்டு என்னால் உரையாற்ற முடியாது. அதனால் இந்த தலைமையைவிட்டு
விலகுகிறேன். ஒரு பொது வெளியில் பயணம் செய்யலாம் என தீர்மானித்துவிட்டேன்’’ என்றார்.

கட்சியில் உங்களுக்கு முக்கியத்துவம் கிடைக்கவில்லை என்பதால் விலகுகிறீர்களா?

’’நான் பொது வாழ்வில் 30 வருடங்களாக டாக்டர் கலைஞர் தலைமை ஏற்று, அண்ணன் வைகோ தலைமை ஏற்று, ஜெயலலிதாவின் தலைமையை ஏற்று பயணம் செய்துள்ளேன். என்னை என்றைக்கும் முன்னிலை படுத்திக் கொண்டது இல்லை. கட்சியில் தரும் எந்த பொறுப்புக்காகவும் நான் பணியாற்றியதில்லை. என்னுடைய உலகம் மேடை. நான் கொண்டுள்ள கொள்கையை வானம் அதிர பேச வேண்டும் என்பதைத் தவிர வேறு கொள்கையில்லை.’’

அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்? வேறு கட்சியில் இணைவீர்களா?

’’தீவிர கட்சி அரசியலில் இருந்து விலகுகிறேன். தத்துவ அரசியலில் தடுமாறாமல் பயணம் மேற்கொள்வேன். பொது வெளிகளில், தமிழ் வெளிகளில் என் முகம் இனிமேல் தெரியும். அரசியல் இல்லாத ஒரு சம்பத்தை தமிழகம் இனி பார்க்கப் போகிறது. பூத்து வருகிற புதிய தலைமுறை மேடையிலே சுடர் விட வேண்டும் என்று, தாகமும் மோகமும் கொண்ட, ஆயிரக்கணக்கான தம்பிமார்களுக்கு, மேடைத்தமிழ் பயிற்சி பட்டறை ஒன்றை தொடங்கி, சோர்வில்லா சொல் வல்லாளர்களாக உருவக்க ஒரு பட்டறையை தொடங்கப் போகிறேன். அந்தப் பணியை இனி சத்தமில்லாமல் செய்வேன்.’’

இவ்வாறு நாஞ்சில் சம்பத் தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close