ஐ.ஜி. பொன். மாணிக்கவேல் : திருவாரூர் மாவட்டத்தில் இருக்கும் புகழ்பெற்ற தியாகராஜர் சன்னிதானத்தில் இருக்கும் சிலை பாதுகாப்பு மையத்தில் இரண்டாவது நாளாக ஆய்வு நடந்தது. அங்கு பாதுகாக்கப்பட்டு வரும் சிலைகளின் தொன்மை குறித்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல் துறையினர் மற்றும் தொல்லியல் துறையினர் ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
சிவபுரம் நடராஜர் சிலைப் பற்றி பேசிய ஐ.ஜி. பொன். மாணிக்கவேல்
பின்னர் செய்தியாளர்களை சந்தித்துப் பேசிய மாணிக்கவேல், லண்டனில் இருந்து மீட்கப்பட்ட சிலை ஒன்றின் வரலாற்றைப் பற்றி கூறினார். தஞ்சை சிவபுரத்தில் ஒருவரின் நிலத்தில் கிடைத்த நடராஜர் ஐம்பொன் சிலை எப்படி, மும்பை வழியாக லண்டன் சென்றது என்பதை விளக்கி கூறினார். மீட்கப்பட்ட நடராஜர் சிலையின் மதிப்பு மட்டும் சுமார் 75 கோடியாகும்.
மத்திய மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை
1969ம் ஆண்டு இந்த சிலை கடத்தப்பட்டதாகவும், அதனுடைய இறைவி சிலை மற்றும் சோமஸ்கந்தர் சிலை இன்றும் அமெரிக்காவில் இருக்கும் அருங்காட்சியகத்தில் இருப்பதாகவும் கூறினார். தமிழகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு கடத்தப்பட்ட சிலைகள் அனைத்தையும் மீட்க மத்திய மாநில அரசுகள் முன்வர வேண்டும் என ஐ.ஜி பொன்.மாணிக்கவேல் தெரிவித்திருக்கிறார்.
சிலை பாதுகாப்பு மையம் அமைத்துத் தர வேண்டுமென அரசிடம் கோரிக்கை வைத்து கிட்டத்தட்ட 400 நாட்கள் ஆகியும் ஒரு பாதுகாப்பு மையம் கூட உருவாக்கப்படவில்லை என்றும், திருவாரூர் கோவிலில் சுமார் 20 நாட்களுக்கு ஆய்வுகள் தொடரும் எனவும் குறிப்பிட்டிருக்கிறார்.