scorecardresearch

தமிழக அரசு நூலகக் குழு அமைத்து உத்தரவு: கோபண்ணா, மனுஷ்ய புத்திரனுக்கு பதவி

பள்ளிக்கல்வித்துறை சார்பில், மாநில நூலகக் குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

தமிழக அரசு நூலகக் குழு அமைத்து உத்தரவு: கோபண்ணா, மனுஷ்ய புத்திரனுக்கு பதவி

தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் சார்பில், மாநில நூலகக் குழு மற்றும் சென்னை மாநகர நூலக ஆணைக்குழு மீண்டும் அமைத்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதில் கோபண்ணா, மனுஷ்ய புத்திர ஆகியோர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் கீழ் மாவட்டங்கள்தோறும் பொது நூலகங்கள் இயங்கி வருகின்றன.

தமிழ்நாடு பொது நூலகச் சட்டம், 1948ன் பிரிவு 5 (2) ன்படி மாநில நூலகக் குழு அமைக்கப்பட வேண்டும். இக்குழு 2004-ம் ஆண்டு அமைக்கப்பட்டதற்குப் பின்னர் இதுவரை மாற்றி அமைக்கப்படவில்லை. மேலும் சென்னை மாவட்ட நூலகங்களை நிர்வகிக்க, சென்னை மாநகர நூலக ஆணைக்குழு அமைப்பு இறுதியாக 2010-ம் ஆண்டு அமைக்கப்பட்டது. மேற்படி குழுவின் தலைவர் மற்றும் துணைத்தலைவர் ஆகியோர் 16.05.2011 அன்று பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதைத் தொடர்ந்து, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை மாற்றியமைக்கப்பட வேண்டிய இக்குழு 2011-ம் ஆண்டிற்குப் பின்னர் சென்னை மாநகரத்திற்கு நூலக ஆணைக்குழு அமைப்பு ஏற்படுத்தப்படவில்லை.

இந்நிலையில் மாநில நூலகக் குழு. பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர், துறை செயலாளர்கள் மற்றும் மூன்று சட்டமன்ற உறுப்பினர்களுடன் நூலகத் துறையில் அனுபவம் உள்ள கே. கோபண்ணா, தமிழ்நாடு நூலகச் சங்கத்தைச் சார்ந்த ஜி. ரத்தினசபாபதி, சென்னை நூலகச் சங்கத்தைச் சார்ந்த கே.நித்யானந்தம், சென்னை மாநகர நூலக ஆணைக்குழு உறுப்பினர் சார்பாக ரோஜா முத்தையா ஆராய்ச்சி நூலக இயக்குநர் ஜி.சுந்தர் உட்பட 15 உறுப்பினர்களைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் கவிஞர், எழுத்தாளர் மற்றும் பதிப்பாளரான மனுஷ்யபுத்திரன் என்கிற அப்துல்ஹமீது மற்றும் கவிஞர், எழுத்தாளர் தமிழ்தாசன் உள்ளிட்ட 11 உறுப்பினர்களைக் கொண்ட சென்னை மாநகர நூலக ஆணைக் குழுவையும் அமைத்து தமிழ்நாடு அரசு ஆணை வெளியிட்டுள்ளது. இக்குழுக்கள் மாநில பொது நூலகங்கள் மற்றும் சென்னை மாநகர பொது நூலகங்களின் வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ளும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/

Stay updated with the latest news headlines and all the latest Tamilnadu news download Indian Express Tamil App.

Web Title: State and chennai district library council formed