பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையை சென்னை இயக்குநரக டாக்டர்கள் கொண்ட மாநில மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு செய்தனர்.
பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனை நவீன வசதிகளுடன் செயல்பட்டு வருவதால், கடந்த 2019ம் ஆண்டு தேசிய தரச்சான்றிதழ் விருது பெற்றது. இதையடுத்து மீண்டும் தேசிய தரச்சான்றிதழ் விருது வழங்குவதற்காக பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையினை பார்வையிட்டு ஆய்வு செய்வதற்காக மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநரகம் தர முதன்மை அலுவலர் டாக்டர் அசோக், டாக்டர் பாவேந்தன், ஸ்டாப் நர்ஸ் அனுஷா ஆகியோர் கொண்ட மாநில மதிப்பீட்டு குழுவினர் வருகை தந்து கடந்த 3 நாட்களாக ஆய்வு செய்தனர்.
இந்த ஆய்வின்போது மருத்துவமனையின் செயல்பாடுகள், செயல்படும் பிரிவுகள், அவசர சிகிச்சை பிரிவு, மகப்பேறு பிரிவு, உள்நோயாளிகள் பிரிவு, புற நோயாளிகள் பிரிவு, அளிக்கப்படும் சிகிச்சைகள், செவிலியர் செயல்பாடு, மருந்து துறை போன்ற பல்வேறு பிரிவுகளை பார்வையிட்டும், பதிவேடுகளை பார்வையிட்டும் ஆய்வு செய்தனர்.
பின்னர் மருத்துவமனையின் கழிவறை, குடிநீர்,தூய்மை போன்ற பணிகளை பார்வையிட்டு, நோயாளிகளிடம் குறைகளை கேட்டறிந்ததோடு நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு தரம் குறித்தும் கேட்டறிந்தனர். கர்ப்பிணி தாய்மார்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துதல், சம பாலின விகிதத்தை பராமரித்தல் மற்றும் இரண்டாவது மூன்று மாத கருக்கலைப்பைத் தடுப்பது, நிரந்தர கருத்தடை செய்வதை மேம்படுத்துதல், சிறந்த சேவைக்காக கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக் வழிமுறைகளை பயன்படுத்துவதை தவிர்ப்பது போன்றவைகள் குறித்தும் ஆய்வு செய்தனர்.
மாநில மதிப்பீட்டு குழுவினர் ஆய்வின் மதிப்பீட்டு அறிக்கையை டெல்லிக்கு அனுப்பிவைப்பார்கள். பின்னர் அறிக்கையின் மதிப்பீட்டை வைத்து தேசிய தரச்சான்றிதழ் வழங்க பரிந்துரை செய்யப்படும். ஆய்வின்போது மருத்தும் மற்றும் ஊரக நலப்பணிகள் இணை இயக்குநர் மாரிமுத்து மற்றும் கண்காணிப்பாளர், இருக்கை மருத்துவர் மற்றும் டாக்டர்கள் உடனிருந்தனர்.
க.சண்முகவடிவேல்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“