/indian-express-tamil/media/media_files/2025/04/02/V1VNjHeOwehnJ5xVZwtt.jpg)
நீதித்துறை உள்கட்டமைப்பு அடிப்படை உரிமை: சாக்குப்போக்கு சொல்லக்கூடாது - ஐகோர்ட் கண்டனம்
தேவையான நீதித்துறை உள்கட்டமைப்பை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை என்றும், நிதி நெருக்கடி போன்ற சாக்குப் போக்குகளைக் காரணம் காட்டாமல் அதனை வழங்குவது மாநில அரசுகளின் கடமை என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த மனுவை விசாரித்த தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், நீதிபதி சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய முதல் டிவிஷன் பெஞ்ச், தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்துக்கு கூடுதலாக ஒரு உறுப்பினரை நியமிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டது. நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் பணிச்சுமை பலமடங்கு அதிகரித்ததால், 2022-ம் ஆண்டிலேயே கூடுதல் உறுப்பினரை நியமிக்கக் கோரி அரசுக்கு கோரிக்கை விடுத்திருந்ததை நீதிபதிகள் சுட்டிக்காட்டினர். இருப்பினும், அரசு நிதிப் பற்றாக்குறையை காரணம் காட்டி அந்தக் கோரிக்கையை நிலுவையில் வைத்திருந்தது.
நுகர்வோர் நீதிமன்றங்களில் உள்கட்டமைப்பு பற்றாக்குறை குறித்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, 2024-ம் ஆண்டில் உயர் நீதிமன்றம் தாமாகவே முன்வந்து பொதுநல வழக்கை விசாரித்தபோது, தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் (TNSCDRC) 2 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் இருந்த கோரிக்கையை முதல் அமர்வு தீவிரமாகக் கருத்தில் கொண்டது.
2025 பிப்.6 அன்று, தலைமை நீதிபதி மற்றும் நீதிபதி முகமது ஷஃபிக் ஆகியோர் அடங்கிய அமர்வு இடைக்கால உத்தரவைப் பிறப்பித்தது. அதில், நுகர்வோர் குறைதீர் ஆணையம் (TNSCDRC) ஊழியர்கள் பற்றாக்குறையால் எதிர்கொள்ளும் பிரச்னைகளை கையாள்வதில் அரசின் அலட்சியம் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டது.
அப்போது, கூடுதல் தலைமைச் செயலாளர் பதவிக்குக் குறையாத ஒரு அதிகாரி இந்த விவகாரம் குறித்து ஒரு பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அமர்வு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்றத்தின் இத்தகைய அவதானிப்பு இருந்தபோதிலும், அரசு தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்திற்கு (TNSCDRC) ஒரு கூடுதல் உறுப்பினரை நியமிக்கவில்லை என்று நீதிபதிகள் சுட்டிக்காட்டினர்.
நுகர்வோர் குறைதீர் ஆணையத்தின் கோரிக்கையை அரசு நிச்சயமாக மறுபரிசீலனை செய்யும் என்று கூறப்பட்டாலும், நீதிமன்றம் புதன் கிழமை, "இந்த கோரிக்கையை அரசு மீண்டும் நிராகரிக்க நாங்கள் சம்மதிக்கவில்லை. தேவையான நீதித்துறை உள்கட்டமைப்பை பெறுவது ஒவ்வொரு குடிமகனின் அடிப்படை உரிமை மற்றும் அதை வழங்குவது ஒவ்வொரு மாநிலத்தின் கடமை" என்று கூறியது.
"மாநில அரசு ஆணையத்திற்கு கூடுதல் உறுப்பினரை நியமிக்க வேண்டும் என்றும், இன்று முதல் 3 மாதங்களுக்குள் கூடுதல் உறுப்பினர் நியமிக்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும். கால அவகாசம் நீட்டிப்பு கோர எந்த கோரிக்கையும் ஏற்றுக்கொள்ளப்படாது என்பது தெளிவுபடுத்தப்படுகிறது. 2025 பிப்ரவரி 6 ஆம் தேதி பிறப்பித்த உத்தரவில் நாங்கள் குறிப்பிட்டிருந்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இந்த உத்தரவை பிறப்பிக்க நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." என்று நீதிபதிகள் உத்தரவில் குறிப்பிட்டனர்.
கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை செயலாளர் ஜூலை 25 ஆம் தேதிக்குள் ஒரு இணக்க உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்ய வேண்டும் என்றும், ஆக.1, 2025 அன்று தாமாக முன்வந்த பொதுநல வழக்கை (suo motu PIL) அடுத்ததாக விசாரிப்பதாகவும் நீதிபதிகள் தெரிவித்தனர். தமிழ்நாடு மாநில நுகர்வோர் குறைதீர் ஆணையத்தில் (TNSCDRC) உள்ள மற்ற அனைத்து ஊழியர் காலிப்பணியிடங்களும் நிரப்பப்பட்டுவிட்டதாக அரசு தெரிவித்ததை அவர்கள் பதிவு செய்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.