தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினர். உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை மு.க.ஸ்டாலின், வைகோ உள்ளிட்ட அனைத்து தலைவர்களும் வரவேற்றுள்ளனர்.
தூத்துக்குடியில் வேதாந்தா குழுமத்துக்கு சொந்தமான ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலையில் இருந்து வெளியேறு நச்சுப் புகை மற்றும் கழிவுகளால் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுவதாகக் அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்தனர்.
இதனால், தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடக் கோரி 2018-ம் ஆண்டு மே 22-ம் தேதி பொதுமக்கள் மாபெரும் போராட்டமு பேரணியையும் நடத்தினர். இந்த பேரணி வன்முறையாக மாறியதைத் தொடர்ந்து போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 உயிரிழந்தனர். இதையடுத்து, பிரச்னைக்கு காரணமான ஸ்டெர்லைட் ஆலையை தமிழக அரசு மூட உத்தரவிட்டது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கிச்சூடு நடந்தது பற்றி விசாரிக்க தமிழக அரசு ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரிக்க ஒரு நபர் ஆணையம் அமைத்தது. இந்த ஆணையம் 19 கட்ட விசாரணைகளை நடத்தியுள்ளது.
இதனிடையே, வேதாந்தா நிறுவனம் தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்கக் கோரி தொடர்ந்த வழக்கில் இன்று தீர்ப்பு வெளியாகி உள்ளது. அதில், தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதி இல்லை என்றும் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு தொடரும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறபித்த ஆணை தொடரும் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை வரவேற்று தூத்துக்குடி மக்கள் மகிழ்ச்சியில் பட்டாசு வெடித்தும் இனிப்புகள் வழங்கியும் கொண்டாடினார்கள்.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள், ஆலையை திறப்பதற்கு எதிராக வழக்கு தொடர்ந்தவர்கள் என அனைவரும் தீர்ப்பை வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்தனர். ஒருவருக்கு ஒருவர் இனிப்பு வழங்கி கொண்டாடினர். மேலும், தூத்துக்குடி மக்கள் பட்டாசு வெடித்து தீர்ப்பின் வெற்றியைக் கொண்டாடினர்.
ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் தீர்ப்பு வெளியானதைத் தொடர்ந்து, அசம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க தூத்துக்குடி ஸ்டெர்லை ஆலை முன்பு பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்கு தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, அதிமுகவில் அமைச்சர் ஜெயக்குமார், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, திமுக எம்.பி. கனிமொழி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட தலைவர்கள் வரவேற்றுள்ளனர்.
பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பு - துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம்
ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழக அரசு பிறப்பித்த ஆணை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் அளித்த தீர்ப்பை துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வரவேற்றுள்ளார். இது குறித்து அவருடைய ட்விட்டர் பக்கத்தில், “தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தபடி, பல கோடி மக்களுடைய எண்ணங்களின் பிரதிபலிப்பாக "தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கான தடை தொடரும்" என சென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பினை மனதார வரவேற்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
வரவேற்கத் தக்க நல்ல தீர்ப்பு - அமைச்சர் ஜெயக்குமார்
இந்த தீர்ப்பு குறித்து அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், “வரவேற்கத் தக்க நல்ல தீர்ப்பு. ஏற்கனவே, அரசு எடுத்த நிலைப்பாட்டுக்கு உயர்நீதிமன்றம் வலு சேர்த்துள்ளது. ஆலையை மூட வேண்டும் என்று அரசின் நிலைப்பாடு என்பதே கொள்கை முடிவுதான். தூங்குபவர்களை எழுப்பலாம். தூங்குமாறு நடிப்பவர்களை எழுப்பமுடியாது. இந்த ஆலையே தேவையில்லை என்பதே அரசின் நிலைப்பாடு” என்று தெரிவித்துள்ளார்.
மனிதகுலத்தைக் காத்திடும் மகத்தான தீர்ப்பு - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்
தீர்ப்பு குறித்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவிக்கையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு மனிதகுலத்தை காத்திடும் மகத்தான தீர்ப்பு. இந்த தீர்ப்பை வரவேற்று அமைச்சரவைத் தீர்மானம் வெளியிட வேண்டும்” என்று தெரிவித்தார்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி - வைகோ எம்.பி
மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கூறுகையில், “ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு நீதிக்கு கிடைத்த வெற்றி, மக்களுக்கு கிடைத்த வெற்றி. துப்பாக்கி சூட்டில் உயிரிழந்த 13 பேருக்கும் நீதி கிடைத்துள்ளது” என்று கூறினார்.
தீர்ப்பு குறித்து திமுக எம்.பி. கனிமொழி தெரிவிக்கையில், “சுற்றுச்சுழலை விலையாக கொடுத்து கிடைக்கும் வளர்ச்சி ஆபத்தானது என்பதை இத்தீர்ப்பு உணர்த்துகிறது” என்று தெரிவித்தார்.
உயர் நீதிமன்றத் தீர்ப்பு முக்கிய மைல்கல் - பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ்
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், ஸ்டெர்லைட் ஆலை வழக்கில் உயர் நீதிமன்றம் அளித்துள்ள தீர்பு முக்கிய மைல்கல் என்று தெரிவித்துள்ளார். மேலும், “ஸ்டெர்லைட் ஆலையை திறக்க சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்து விட்டது என்பதாலேயே, அந்த ஆலைக்கு எதிரான மக்களின் போர் முடிவுக்கு வந்து விட்டதாக அர்த்தமல்ல. கடந்த காலங்களில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தமிழக அரசும், சென்னை உயர்நீதிமன்றமும் தடை விதித்த போதெல்லாம், உச்சநீதிமன்றத்தை அணுகி அந்த தடையை ஸ்டெர்லைட் தகர்த்தது மறக்கக்கூடாத வரலாறு ஆகும்.
எனவே, இந்த விஷயத்தில் தமிழக அரசு கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் நிர்வாகம் மேல்முறையீடு செய்யும்பட்சத்தில் அங்கு மிகவும் வலிமையான வாதங்களை முன்வைத்து, அழிவை ஏற்படுத்தும் ஆலை நிரந்தரமாக மூடப் படுவதையும், ஆலையின் கட்டமைப்புகள் அகற்றப்படுவதையும் தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும்.” என்று வலியுறுத்தியுள்ளார்.
சிந்திய ரத்தம் வீண் போகாது - விசிக தலைவர் திருமாவளவன் எம்.பி
ஸ்டெர்லைட் ஆலையை மூட சென்னை உயர்நீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பு, தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டில் பலியான 13 பேருக்கும் பாதிக்கப்பட்ட மக்கள் யாவருக்கும் அளிக்கப்பட்ட நீதி. சிந்திய இரத்தம் வீண் போகாது. வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தாலும் தமிழக அரசு மக்கள் சார்பாக கடுமையாக எதிர்க்க வேண்டும். மேலும், தூத்துக்குடி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களுக்கும் பாதிக்கப்பட்டவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
மக்களின் குரல் என்றும் வெல்லும் - கமல்ஹாசன்
மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கூறுகையில், “மக்களின் குரல் என்றும் வெல்லும் என்பதற்கு ஸ்டெர்லைட்டுக்கு எதிரான தீர்ப்பு ஒரு சான்று. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பு பல உயிர்களின் தியாகத்திற்கு கிடைத்த நீதி. தீர்ப்பின் அவசியத்தை, அவர்களின் வலியை அருகில் இருந்து உணர்ந்தவன் நான்” என்று தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.