Advertisment

Sterlite Case: பராமரிப்பு பணிக்காக ஆலையை திறக்க சென்னை ஐகோர்ட் அனுமதி மறுப்பு

Thoothukudi Sterlite Copper Plant: நீதிபதிகள், ‘தற்போது இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது’ என கூறினர்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
Vedanta limited Sterlite industries donated rs 5 crore to CMPRF

Vedanta limited Sterlite industries donated rs 5 crore to CMPRF

Vedanta's Sterlite Copper Industries case at Madras High Court: ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளுக்கு திறக்க அனுமதியளித்து உத்தரவிட முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மூடி தமிழக அரசு பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதிக்க கோரி வேதாந்தா குழுமத்தின் மனுவிற்கு மார்ச் 27 ஆம் தேதிக்குள் பதில் அளிக்க தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியத்திற்கு நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

Advertisment

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகை நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22 -ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 பேர் பலியானார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி மே மாதம் 28-ந்தேதி (2018) ஸ்டெர்லைட் ஆலை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும் ஆலைக்கு வழங்கிய குடிநீர் இணைப்பு, மின் இணைப்பையும் துண்டித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நேரடி ஆய்வு செய்தது. அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15-ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும்’ என்று உத்தரவிட்டது.

இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.

இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும். எனவும் தமிழக அரசின் உத்தரவை ஏற்கக் கூடாது என்று அந்த நிறுவனத்தின் சார்பில் தெரிவிக்கபட்டது.

ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே நிலுவையில் இருந்த வழக்குகளும் இந்த மேல்முறையீட்டு வழக்குடன் சேர்த்து விசாரிக்கப்பட்டது.

இந்த வழக்கில் கடந்த 7 -ந்தேதி ( பிப்ரவரி) வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது. கடந்த 18 ஆம் தேதி உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி முத்திரையிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உத்தரவு என்பது தவறானது எனவும் ஆலையால் மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்தவிதமான ஆதாரபூர்வமான தகவல்களும் அரசிடம் இல்லை. தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்பது முற்றிலும் தவறானது, எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுவதாகவும் ஆலைக்கு அனுமதி அளித்த போது விதிக்கப்பட்ட விதிமுறைகளை ஆலை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலையை மூடுவதற்கு உத்தரவிடுவதற்கு முன்னர் தங்கள் தரப்பில் எந்த விளக்கமும் அரசு பெறவில்லை, ஒருதலை பட்சமாக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டும். ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் இடைக் காலமாக ஆலை பராமரிப்பு பணிகளுக்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் அதற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு இன்று நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் ஆலை நிர்வாகத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம், 1996-ம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலை தனது உற்பத்தியை துவங்கியது. அது முதல் அரசியல் கட்சிகள் பல போராட்டங்கள் நடத்தியுள்ளனர். ஆலையை மூட வேண்டும் என்கிற பல நீதிமன்ற உத்தரவுகளை ஸ்டெர்லைட் நிர்வாகம் சந்தித்துள்ளது. அதேபோல, மத்திய சுற்றுசூழல் அமைச்சகத்தின் அனுமதியுடன் தான் ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கம் செய்யப்பட்டது.

ஆலையை மூட வேண்டும் உள்ளிட்ட 11 உத்தரவுகளை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ஆலையை ஆய்வு செய்ய தேசிய பசுமை தீர்ப்பாயம் குழு அமைத்தது. அந்த குழு ஆய்வு முடிவுகளை அறிக்கையாக தாக்கல் செய்தது. அதில், ஆலையை திறக்கலாம் என தெரிவிக்கப்பட்டது. அதை தேசிய பசுமை தீர்ப்பாயமும் உறுதி செய்துள்ளது.

ஆலை அமைந்துள்ள பகுதியிலும் சுற்றியுள்ள பகுதியிலும் நிலத்தடி நீரை ஆய்வு செய்து அறிக்கை அளிக்கவில்லை, உப்பாறு நதியில் கழிவுகள் கலக்கவிடப்பட்டது, அபாயகரமான கழிவு மேலாண்மை வசதியை ஏற்படுத்தவில்லை, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய விதிகளை பின்பற்றவில்லை என்பன உள்ளிட்ட ஐந்து காரணங்களை கூறி ஆலை உரிமத்தை புதுப்பிக்க முடியாது என தமிழக அரசு உத்தரவிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

அபாயகரமான கழிவு மேலாண்மையை பொறுத்தவரை தூத்துக்குடியில் மட்டும் அனல் மின் நிலையம் உள்பட 7 தொழிற்சாலைகள் பின்பற்றவில்லை. அனல் மின் நிலையம் 70 சதவீத சல்பர் டை ஆக்ஸைடு வெளியேற்றுகிறது. ஆனால் ஸ்டெர்லைட் 1 சதவீதம் மட்டுமே வெளியேற்றுகிறது.

நாட்டின் தாமிர தேவையில் 38 சதவீதம் பூர்த்தி செய்யும் இந்த ஆலையில் 40 ஆயிரம் பேர் நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலை வாய்ப்பை பெறுகின்றனர். ஆண்டுக்கு 2 ஆயிரம் கோடி ரூபாய் வரியா செலுத்தப்படுகிறது.

ஆலையை நிரந்தரமாக மூட உத்தரவிட்டதை அடுத்து, பாய்லர் உரிமம், தொழிற்சாலை உரிமம், ஒப்பந்த பணியாளர்கள் நியமிக்கும் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன.

ஆலையை மாவட்ட ஆட்சியர் முறையாக பராமரிக்கவில்லை. அவருக்கு ஆலை பற்றிய தொழில்நுட்ப அறிவு இல்லை. எனவே இடைக்காலமாக ஆலையை பராமரிக்க தேவையான வசதிகளை அரசு ஏற்படுத்தி தரவேண்டும். பராமரிப்பு பணிகளுக்கு ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும்’ என்றார்.

அப்போது நீதிபதிகள், ‘அரசின் கட்டுப்பாட்டில் உள்ளதால் ஆலையை பராமரிக்க முடியுமா? 2018 மார்ச் மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரிய உத்தரவின்படி, அரசு அறிக்கை அளித்ததா? சுற்றுச்சூழல் சேதம் ஏதேனும் நடந்தால் அதற்கு அரசு தான் பொறுப்பு’ என தெரிவித்தனர்.

அப்போது தமிழக மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ்.வைத்தியநாதன், ‘அரசுத்தரப்பு அறிக்கை உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. தற்போதைய ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்த இந்த மனுவுக்கு பதிலளிக்க போதிய கால அவகாசம் வேண்டும்’ என தெரிவித்தார்.

மேலும் ஆலை தொடங்க மொத்த முதலீடு 3000 கோடி ஆகும். அதற்கு அதிகமாக வருவாய் நிர்வாகம் ஈட்டிவிட்டனர். தொடர்ந்தது மாசு ஏற்படுத்தியதால் ஆலையை மூட உத்தரவிடப்பட்டது. ஸ்டெர்லைட் ஆலையால் 28 ஆயிரம் அடி ஆழத்துக்கு நிலத்தடி நீர் மாசடைந்துள்ளது. எனவே இதனை கருத்தில் கொண்டு தான் அரசு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. மேலும் அனைத்து விதிகளையும் சட்டத்தையும் அரசு முறையாக பின்பற்றி தான் ஆலையை மூட உத்தரவிட்டதாக தெரிவித்தார்.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக வழக்கு தொடர்ந்த பாத்திமா என்பவர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வைகை, ‘இந்த ஆலையால் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 10 ஆயிரம் கோடி கூட முதலீடு செய்யலாம். மக்கள் நலன் பாதுகாக்கப்பட வேண்டும். இது முக்கிய சுற்றுச்சூழல் பிரச்சினை’ என தெரிவித்தார்.

ஆலை நிர்வாகத்தின் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் ஆரியமா சுந்தரம், பி.எஸ்.ராமன் மற்றும் ஏ.ஆர்.எல்.சுந்தரேசன் ஆகியோர், ‘தற்போது ஆலையை இயக்கப் போவதில்லை. இப்போது அனுமதித்தாலும் ஆலையை இயக்க 2 முதல் 3 மாதங்கள் ஆகும். எனவே எங்கள் செலவில் ஆலையை கவனிக்கவும், பராமரிக்கவும் அனுமதி வழங்க வேண்டும். அதனை தான் நாங்கள் வலியுறுத்துகிறோம். பராமரிப்பு பணிகளை எங்களை தவிர வேறு எவரும் மேற்கொள்ள முடியாது. நீதிமன்ற அனுமதியின்றி ஆலையை இயக்க மாட்டோம்.

உற்பத்தி துவங்கும் நிலை தற்போது இல்லை. உற்பத்தி துவங்க மூன்று மாதங்களாகும். பராமரிப்பு பணிக்காகவும், நிர்வாக பணிகளுக்காகவும் மின் இணைப்பை திருப்பி வழங்க வேண்டும். பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள அரசு நிபுணத்துவம் பெற்றதல்ல. தூத்துக்குடி நகரத்தை சேர்ந்த 50 ஆயிரம் மக்கள் ஆலையை மீண்டும் திறக்க வேண்டும் என அகர்வால் குழுவிடம் மனு அளித்துள்ளனர். மற்ற தொழிற்சாலைகளாலும் தான் நீர் மாசு ஏற்பட்டுள்ளது. தூத்துக்குடியில் நூற்றுக்கணக்கான ஆலைகள் உள்ளன’ என வாதிட்டனர்.

நீதிபதிகள் - தற்போது ஆலை யார் கட்டுப்பாட்டில் உள்ளது?

தமிழக அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாரயணன் - தூத்துக்குடி

மாவட்ட ஆட்சியர் கட்டுப்பாட்டில் உள்ளது.

நீதிபதிகள் :- ஆலையை பராமரிக்க போதுமான நிபுணத்துவம் அரசுக்கு உள்ளதா?

அரசு தலைமை வழக்கறிஞர் :- சப் - கலெக்டர் தலைமையில், மாநகராட்சி ஆணையர், தொழிற்சாலை பாதுகாப்பு இயக்குனரக இணை இயக்குனர் அடங்கிய உள்ளூர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழு அபாயகரமான கழிவுகள் மேலாண்மையை மேற்பார்வையிடும்.

நீதிபதிகள் :-அபாயகரமான பொருட்கள் இருப்பதால் ஏதேனும் அசம்பாவித சம்பவம் ஏற்பட்டால் யார் பொறுப்பேற்பது என்பது தான் மனுதாரரின் கோரிக்கை.

அரசு தலைமை வழக்கறிஞர் : அப்படி எதுவும் நடக்காது. மாநில அரசு பொறுப்பேற்கும்.

மூத்த வழக்கறிஞர் வைகை - இந்த வழக்கில் தூத்துக்குடி மக்கள் நீதிமன்றத்தை அணுக வேண்டும். வழக்கை உயர்நீதிமன்ற மதுரை கிளைக்கு மாற்ற வேண்டும்.

இதனையடுத்து அனைத்து தரப்பு வாதங்களுக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், தற்போது இந்த வழக்கில் ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலை மனு தொடர்பாக தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் வழக்கின் அடுத்த விசாரணையை மார்ச் 27 ஆம் தேதிக்கு தள்ளிவைப்பதாக உத்தரவிட்டனர்.

 

Madras High Court Sterlite Copper Industries
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment