தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்காலை எதிராக கடந்த 2018-ம் ஆண்டு நடத்தப்பட்ட போராட்டத்தையடுத்து நிறுவனம் தமிழ்நாடு அரசால் மூடப்பட்டது. இந்நிலையில், ஆலை மூடப்பட்ட விவகாரத்தில் வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் நேற்று (ஜன.2) மீண்டும் மேல்முறையீடு செய்த நிலையில்
உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு இந்த மாதம் 4-வது வாரத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்வதாக கூறியுள்ளது.
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டதற்கு எதிராக வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு மீதான இறுதி விசாரணை ஆகஸ்ட் 22, 23-ம் தேதிகளில் நடைபெறும் என உச்ச நீதிமன்றம் கடந்த ஜூன் 2-ம் தேதி தெரிவித்தது.
இதனிடையே அரசியல் அமைப்பு சட்டம் 370-வது பிரிவு ரத்து குறித்தான ரிட் மனுக்களை உச்ச நீதிமன்றம்
விசாரிக்க தொடங்கியதால் வேதாந்தா மேல்முறையீட்டு மனு விசாரிக்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், வேதாந்தா நிறுவனம் சார்பில் நேற்று மீண்டும் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இதனை ஏற்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு வேதாந்தா நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனு ஜனவரி 22-ம் தேதி வாக்கில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என்று தெரிவித்தார்.
மே 22, 2018 அன்று, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள வேதாந்தா நிறுவனத்தின் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தினர். ஆலையால் அதிக மாசு ஏற்படுவதாக கூறி மக்கள் போராட்டம் நடத்திய நிலையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 13 பேர் உயிரிழந்தனர் மற்றும் பலர் காயமடைந்தனர். போராட்டத்தை தொடர்ந்து, மே 28, 2018 அன்று தமிழ்நாடு அரசு ஆலையை "நிரந்தரமாக" மூட உத்தரவிட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“