ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க கோரிய வேதந்தா நிறுவனம் தொடர்ந்த வழக்கின் இறுதி விசாரணையை ஜூன் 27 ஆம் தேதி தொடங்கும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. .
தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22 -ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.
அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 அப்பாவி பொது மக்கள் பலியானார்கள்.
ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 2018 ஆம் ஆண்டு மே மாதம் 28 ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும் ஆலைக்கு வழங்கிய குடிநீர் இணைப்பு, மின் இணைப்பையும் துண்டித்தது.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டது.
தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நேரடி ஆய்வு செய்தது. அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ஆந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.
அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.
இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு மற்றும் ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்ட குழு சார்பில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யபட்டது. இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற கிளை தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் தற்போதைய நிலையே தொடரவேண்டும் எனவும் ஆலையை திறப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள கூடாது என உத்தரவிட்டது.
உயர்நீதிமன்ற கிளை உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம், தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.
ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.
இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் தெரிவிக்கபட்டது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி தீர்ப்பளித்தது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த விஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.
தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இதனையடுத்து, ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி முத்திரையிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உத்தரவு என்பது தவறானது எனவும் ஆலையால் மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்தவிதமான ஆதாரபூர்வமான தகவல்களும் அரசிடம் இல்லை. தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்பது முற்றிலும் தவறானது எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுவதாகவும் ஆலைக்கு அனுமதி அளித்த போது விதிக்கப்பட்ட விதிமுறைகளை ஆலை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆலையை மூடுவதற்கு உத்தரவிடுவதற்கு முன்னர் தங்கள் தரப்பில் எந்த விளக்கமும் அரசு பெறவில்லை ஒருதலை பட்சமாக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டும். ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் இடைக் காலமாக ஆலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் அதற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் ஆலை பராமரிப்புக்கு திறப்பது தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலை மனு தொடர்பாக தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இடைக்காலமாக ஆலையை பராமரிக்க திறக்க அனுமதிக்க முடியது என தெரிவித்தனர். மேலும் தற்போதைய நிலையில் எந்த ஒரு புதிய உத்தரவையும் அல்லது இடைக்கால பிறப்பிக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில் ஸ்டெர்லைட் ஆலை திறக்க அனுமதிக்க கோரிய வழக்கு கடந்த வாரம் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தபோது ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிர்ப்பு தெரிவித்து வைகோ, பேராசிரியர் பாத்திமா உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்றுக் கொண்டு இந்த வழக்கில் அவர்களை ஒரு தரப்பு வாதியாக சேர்க்க உத்தரவிட்டனர். மற்ற அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்புராயன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யபட்டது. அப்போது ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு ஆதரவாக அந்த நிறுவனத்தின் தொழிலாளர் சங்கத்தின் சார்பில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாக நாம் தமிழர் கட்சியை சார்ந்த இசக்கிதுரை சார்பில் இணைப்பு மனுக்கள் தாக்கல் செய்வதாகவும் அதனை விசாரணைக்கு எடுத்து கொள்ள வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆனால் இணைப்பு மனுகளை ஏற்க நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஏற்கனவே உள்ள மனுக்களை மட்டுமே விசாரணைக்கு அனுமதிக்க முடியும் என தெரிவித்தனர்.
அப்போது தமிழக அரசு சார்பில் ஆஜரான தலைமை வழக்கறிஞர், விஜய் நாராயண் தற்போது தமிழக அரசு வழக்கில் பதில் மனு தாக்கல் செய்துள்ளது. எனவே இதற்கு விளக்க மனுக்களை தாக்கல் செய்த பிறகு பிரதான வழக்கில் விசாரணை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவித்தார்.
இதனையடுத்து உத்தரவிட்ட நீதிபதிகள் தமிழக அரசின் பதில் மனு குறித்து ஸ்டெர்லைட் தரப்பில் பதில் அளிக்க வேண்டும் பிரதான வழக்கில் இறுதி விசாரணை ஜூன் 27 ஆம் தேதி முதல் தொடங்கும் என தெரிவித்த நீதிபதிகள் விசாரணை அன்றைய தேதிக்கு தள்ளிவைத்தனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.