பராமரிப்பு பணிக்கு தனிக் குழு கோரிய ஸ்டெர்லைட்: கோரிக்கையை நிராகரித்த ஐகோர்ட்

எந்த ஒரு புதிய உத்தரவையும் அல்லது இடைக்கால பிறப்பிக்க முடியாது

Latest political news live updates
Latest political news live updates

ஸ்டெர்லைட் ஆலையை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள புதிதாக தனி குழுவை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை ஏற்க மறுத்தது சென்னை உயர்நீதிமன்றம்.

தூத்துக்குடியில் செயல்பட்டு வரும் ஸ்டெர்லைட் தாமிர ஆலையில் இருந்து வெளியேறும் நச்சு புகையால் நோய் பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு (2018) மே மாதம் 22 -ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள்.

அப்போது போராட்டம் நடத்தியவர்கள் மீது காவல்துறையினர் துப்பாக்கி சூடு நடத்தினார்கள். இதில் 13 அப்பாவி பொது மக்கள் பலியானார்கள்.

ஸ்டெர்லைட் ஆலை விவகாரம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதால் அந்த ஆலையை உடனே மூடுமாறு தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி 2018 ஆம் ஆண்டு மே மாதம் தேதி ஸ்டெர்லைட் ஆலை மூடி தமிழக அரசு சீல் வைத்தது. மேலும் ஆலைக்கு வழங்கிய குடிநீர் இணைப்பு, மின் இணைப்பையும் துண்டித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த ஸ்டெர்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் டெல்லியில் உள்ள தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற தலைமை நீதிபதி தருண்அகர்வால் தலைமையில் குழு ஒன்றை நியமித்து உத்தரவிட்டது.

தேசிய பசுமை தீர்ப்பாய உத்தரவின் படி ஸ்டெர்லைட் ஆலையில் தருண் அகர்வால் குழு நேரடி ஆய்வு செய்தது. அதன் அறிக்கையை தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் தாக்கல் செய்தனர். அந்த அறிக்கையின் அடிப்படையில் தேசிய பசுமை தீர்ப்பாயம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 15 ந்தேதி தீர்ப்பு ஒன்றை வெளியிட்டது.

அதில், “ஸ்டெர்லைட் ஆலையால் பொதுமக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்று தெரியவந்துள்ளது. ஆலை நிர்வாகத்தால் வெளியேற்றப்படும் கழிவுகளால் நிலத்தடி நீர் பாதிப்பது பற்றி ஆய்வு செய்ய வேண்டும். 15 நாட்களுக்குள் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதையடுத்து தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மனு செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்கும் பசுமை தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு தடை விதிக்க வேண்டும் என்று தமிழக அரசு தனது மனுவில் கூறி இருந்தது.

இதற்கிடையே வேதாந்தா நிறுவனமும் உச்ச நீதிமன்றத்தில் தனியாக ஒரு மனு தாக்கல் செய்தது. ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க வேண்டும் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம் கடந்த பிப்ரவரி 7 ஆம் தேதி இந்த வழக்கில் வக்கீல்கள் வாதம் அனைத்தும் முடிவடைந்தது. இதையடுத்து தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஸ்டெர்லைட் வழக்கில் கடந்த பிப்ரவரி 18 ஆம் தேதி உச்ச நீதிமன்ற
நீதிபதிகள் ஆர்.பாலிநாரிமன், நவீன்சின்கா ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. அதில் தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க அனுமதிக்க இயலாது. அந்த ஆலையை திறக்க தடை விதிக்கப்படுகிறது. இந்த வி‌ஷயத்தில் தமிழக அரசு அடுத்தடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ள உரிமை உள்ளது.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க உத்தரவிடும் அதிகாரம் தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு கிடையாது. எனவே தீர்ப்பாயம் வெளியிட்ட உத்தரவுக்கு தடை விதிக்கப்படுகிறது.

தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் வேதாந்தா நிறுவனம் அனுமதி பெற்றதை ஏற்க இயலாது. இந்த விவகாரத்தில் வேதாந்தா நிறுவனத்தின் கோரிக்கைகள் நிராகரிக்கப்படுகிறது. தேவைப்பட்டால் வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தை அணுகி நிவாரணம் பெற்றுக் கொள்ளலாம் என நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.

இதனையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனமான வேதாந்தா நிறுவனத்தின் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யபட்டது. அந்த மனுவில், ஸ்டெர்லைட் ஆலையை மூடி முத்திரையிட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தில் உத்தரவு என்பது தவறானது எனவும் ஆலையால் மாசு பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்பது தொடர்பாக எந்தவிதமான ஆதாரபூர்வமான தகவல்களும் அரசிடம் இல்லை. தங்கள் நிறுவனத்திற்கு எதிராக அரசு தரப்பில் கூறும் குற்றச்சாட்டுக்கள் என்பது முற்றிலும் தவறானது எந்த விதமான ஆதாரங்களும் இல்லை. அனைத்து விதிமுறைகளையும் பின்பற்றியே ஸ்டெர்லைட் நிறுவனம் செயல்படுவதாகவும் ஆலைக்கு அனுமதி அளித்த போது விதிக்கப்பட்ட விதிமுறைகளை ஆலை நிர்வாகம் கடைபிடித்து வருவதாகவும். தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆலையை மூடுவதற்கு உத்தரவிடுவதற்கு முன்னர் தங்கள் தரப்பில் எந்த விளக்கமும் அரசு பெறவில்லை ஒருதலை பட்சமாக அரசு செயல்பட்டுள்ளது. எனவே ஆலையை மூடி சீல் வைத்த மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் உத்தரவு சட்ட விரோதமானது எனவும் அதனை ரத்து செய்ய வேண்டும். ஆலைக்கு மீண்டும் மின் இணைப்பு மற்றும் குடிநீர் இணைப்புகளை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் இடைக் காலமாக ஆலை பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள ஆலை நிர்வாகத்திற்கு நீதிமன்றம் அனுமதிக்க வேண்டும் அதற்கு தேவையான வசதிகளை தமிழக அரசு ஏற்படுத்தி தர வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கை கடந்த முறை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு. ஆலை பராமரிப்பு தொடர்பாக எந்த விதமான இடைக்கால உத்தரவும் பிறப்பிக்க முடியாது. ஸ்டெர்லைட் ஆலை மனு தொடர்பாக தமிழக அரசு, மாசு கட்டுப்பாட்டு வாரியம் ஆகியோர் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனர். மேலும் இடைக்காலமாக ஆலையை பராமரிக்க திறக்க அனுமதிக்க முடியது என தெரிவித்தனர்.

இந்நிலையில் இந்த வழக்கு இன்று மீண்டும் நீதிபதிகள் எம்.சத்தியநாரயணன், எம்.நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது ஸ்டெர்லைட் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆரியமா சுந்தரம் ஸ்டெர்லைட் ஆலை பராமரிப்பு பணிகளுக்கு என புதிதாக தனியாக குழு அமைக்க வேண்டும் எனவும் அந்த குழுவில் ஆலை நிர்வாகத்தின் சார்பில், உறுப்பினர் இணைக்க வேண்டும் என வாதிட்டார். மேலும் இடைமனுதரார் ஆக உள்ள ம.தி.மு.க பொதுச் செயலாளர் உள்ளிட்டோர் வாதங்களை ஏற்க கூடாது எனவும் அவர்களின் மனுகளை நிராகரிக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.

அப்போது தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் சி.எஸ். வைதியநாதன், தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயணன் ஆகியோர் ஏற்கனவே பராமரிப்பு பணிகளை கண்காணிக்க ஏற்கனவே குழுக்கள் உள்ளதாகவும் புதிதாக குழு தேவையில்லை எனவும் தெரிவித்தனர். பின்னர் தமிழக அரசின் அறிக்கையை தாக்கல் செய்தனர்.

இதையடுத்து நீதிபதிகள், ஏற்கனவே இந்த வழக்கில் ஏற்கனவே ஒரு நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அந்த குழுவில், மத்திய வனத்துறை அமைச்சகம், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவற்றையும் உறுப்பினர்களாக சேர்க்கின்றோம். மேலும், இந்த வழக்கில் ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராகவும், ஆதரவாகவும் பல இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்த மனுக்களை எல்லாம் விசாரணைக்கு ஏற்ப குறித்து முடிவு செய்த பின்னரே, பிரதான வழக்கை விசாரணைக்கு எடுக்க முடியும். எனவே, இந்த வழக்கு விசாரணையை வருகிற ஜூன் 11-ந்தேதிக்கு தள்ளிவைக்கிறோம்’ என்று உத்தரவிட்டனர்.

இதையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தின் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஆலையை மூடி ஓர் ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. அங்கு பணியாற்றும் ஊழியர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே, இந்த வழக்கை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். ஆனால், அவரது கோரிக்கையை நீதிபதிகள் ஏற்கவில்லை.

இதைதொடர்ந்து, ஸ்டெர்லைட் ஆலையில் பராமரிப்பு பணி ஒரு தனிக்குழுவை அமைக்க வேண்டும் என்ற ஆலை நிர்வாகத்தின் கோரிக்கை நீதிபதிகள் ஏற்க மறுத்தனர். தற்போதைய நிலையில் எந்த ஒரு புதிய உத்தரவையும் அல்லது இடைக்கால பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள் வழக்கை ஜூன் 11 ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Sterlite factory plea dismissed chennai high court

Next Story
தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடிsenthil balaji plea dismissed against karur EC Officer - தேர்தல் அதிகாரி மீது நடவடிக்கைக் கோரி செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனு தள்ளுபடி
The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express