ஸ்டெர்லைட் எதிர்ப்பு வலுக்கிறது. தூத்துக்குடி அருகே அ.குமரெட்டியாபுரம் கிராமத்தை தொடர்ந்து, பண்டாரம்பட்டி கிராம மக்கள் தொடர் போராட்டத்தில் குதித்தனர்.
ஸ்டெர்லைட் தொழிற்சாலை, தாமிர உற்பத்தி செய்யும் நிறுவனம் ஆகும். தூத்துக்குடி அருகே சிப்காட் வளாகத்தில் இந்த ஆலை அமைந்திருக்கிறது. இங்கிருந்து வெளியாகும் நச்சு வாயுவால், சுற்று வட்டார கிராமங்கள் பாதிக்கப்படுவதாக இந்த ஆலை தொடங்கப்பட்ட 1996 முதல் எதிர்ப்பு குரல் இருந்து வருகிறது. நீதிமன்ற வழக்குகளையும் எதிர்கொண்டு அந்த ஆலை இயங்கி வருகிறது.
ஸ்டெர்லைட் ஆலை தற்போது ஆண்டுக்கு 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்தி செய்து வருகிறது. கூடுதலாக மேலும் 4 லட்சம் டன் தாமிரம் உற்பத்திக்காக ஆலையை விரிவாக்க ஸ்டெர்லைட் நிர்வாகம் முடிவு செய்து அதற்கான பணியை மேற்கொண்டது. இதற்கு ஸ்டெர்லைட் ஆலையின் அருகே உள்ள அ.குமரெட்டியாபுரம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஸ்டெர்லைட்டுக்கு எதிராக அ.குமரெட்டியாபுரம் கிராம மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் தொடர் போராட்டத்தை ஆரம்பித்தனர். அவர்கள் போராட்டம் தொடர்ச்சியாக 50 நாட்களாக நடைபெற்று வருகிறது. இப்போராட்டத்திற்கு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியில் இருந்து ஆதரவு குவிந்து வருகிறது. சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார் மக்களோடு மக்களாக உட்கார்ந்து போராட்டத்தில் கலந்து கொண்டார். நேற்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
ஸ்டெர்லைட் ஆலையில் இருந்து சுமார் 3 கி.மீ தொலையில் உள்ள பண்டாரம்பட்டி கிராம மக்களும் போராட்டத்தில் குதித்துள்ளனர். சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கும் இந்த கிராம மக்கள் நேற்று ஒன்று திரண்டு தர்ணா செய்தனர். ஸ்டெர்லைட் ஆலையை மூடும் வரை தங்கள் போராட்டம் தொடரும் என அவர்கள் கூறினர். இதேபோல மேலும் சில கிராமங்கள் அடுத்தடுத்து போராட்டத்தில் குதிக்க இருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்டெர்லைட் எதிர்ப்பு வலுப்பெற்று வருவதைத் தொடர்ந்து ஆலை நிர்வாகம் தங்கள் நிலையை விளக்கி நாளிதழ்களுக்கு விளம்பரங்களை அள்ளி இறைக்க ஆரம்பித்திருக்கிறது. 1996-ல் இந்த ஆலை தொடங்கப்பட்டபோது வெடித்த மக்கள் போராட்டத்தை இதேபோல பத்திரிகைகளுக்கு விளம்பரங்களை இறைத்தும், வேறு சில அணுகுமுறைகளிலுமே ஸ்டெர்லைட் நிர்வாகம் மட்டுப்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இப்போதும் அதே அணுகுமுறையை ஆரம்பித்துவிட்டதாக போராட்டக்காரர்கள் கூறுகின்றனர்.