2018-ம் ஆண்டு தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சம்பவத்தில் காவல்துறை மற்றும் அரசு அதிகாரிகளின் சொத்துக்கள் குறித்து விசாரணை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தடை விதித்தது.
கடந்த 2018-ம் ஆண்டு மே 22ம் தேதி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. அப்போது போலீசார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்ட பொதுமக்கள் காயமடைந்தனர்.
இந்நிலையில், தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாகத் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்த வழக்கை தேசிய மனித உரிமை ஆணையம் முடித்து வைத்ததை எதிர்த்த வழக்கில், துப்பாக்கிச் சூடு சம்பவம் நடைபெற்ற காலத்தில் பணியாற்றிய காவல் துறை, வருவாய்த் துறை அதிகாரிகளின் சொத்து விவரங்களைச் சேகரிக்கும்படி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறைக்குச் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இதை எதிர்த்து அதிகாரிகள் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய் சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் ஜே.பி பர்திவாலா மற்றும் மனோஜ் மிஸ்ரா ஆகியோர் அடங்கிய மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வில், நேற்று விசாரணைக்கு வந்தது. உயர் நீதிமன்றத்தின் ஜூலை 15 ஆம் தேதி உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுவில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
மேலும், அதிகாரிகளின் சொத்து விவரங்களை விசாரிப்பது தொடர்பாக உயர் நீதிமன்ற பிறப்பித்த உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“