ஹைட்ரோ கார்பன் திட்டம் வேதாந்தா குழுமம் ஒப்புதல் பெற்றது. பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் இந்தியாவில் 55 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க நேற்று (01/10/2018) ஒப்பந்தம் போடப்பட்டது. தமிழகத்தில் மூன்று பகுதிகளில் ஹைட்ரோ கார்பன் வாயுவினை எடுக்க வேந்தாந்தா குழுமம் மற்றும் ஒ.என்.ஜி.சிக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டிருக்கிறது.
ஏற்கனவே புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு பலத்த எதிர்ப்புகள் மக்களிடையே உருவானதால் அந்த திட்டம் கிடப்பில் போடப்பட்டது.
இந்தியாவில் இருக்கும் 55 முக்கியமான இடங்களில் ஹைட்ரோ கார்பன் வாயுவினை எடுக்க 9 குழுமங்களுக்குள் மத்தியில் போட்டி நிலவி வந்த நிலையில் 6 குழுமங்கள் அந்த போட்டியில் வெற்றி பெற்றன. இந்த நிறுவனங்களுடன் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவதற்காகவே நேற்று டெல்லியில் நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
தமிழகத்தில் எங்கே அமைய இருக்கிறது ஹைட்ரோ கார்பன் திட்டம்
காவேரி டெல்டா பகுதியில் அமைந்திருக்கும் நாகை மாவட்டத்தின் கமலாபுரத்தில் இரண்டு இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் பணியை வேதாந்தா குழுமம் பெற்றிருக்கிறது. இதில் ஒரு இடத்தில் 1,794 சதுர கி.மீ. பரப்பிலும், மற்றொரு இடத்தில் 2,574 சதுர கி.மீ. பரப்பிலும் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.
கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியில் ஹைட்ரோ கார்பன் திட்டத்தினை செயல்படுத்த ஓ.என்.ஜி.சிக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டிருக்கிறது. அங்கு 731 சதுர கி.மீ. பரப்பில் ஹைட்ரோ கார்பன் எடுக்கப்பட உள்ளது.
தலைவர்கள் கண்டனம்
மக்களின் போராட்டங்களையும் உணர்வுகளையும் மதிக்காமல் செயல்பட்டு வரும் மத்திய அரசின் கோட்பாடுகளுக்கு எதிராக தமிழகத்தின் பல்வேறு கட்சியைச் சேர்ந்த தலைவர்கள் எதிர்ப்புக் குரல்களை எழுப்பியுள்ளனர்.
அன்புமணி ராமதாஸ்
பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் ”ஏற்கனவே நெடுவாசலில் திட்டம் செயல்படுத்த முற்பட்டு பின் வாங்கியதைப் போல் தற்போதும் ஏற்பட உள்ளது” என்று கூறியிருக்கிறார். மேலும் நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் தமிழ்நாட்டில் 3 இடங்கள் உட்பட நாடு முழுவதும் மொத்தம் 55 இடங்களில் ஹைட்ரோகார்பன் வளங்களை எடுப்பதற்கான உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. தமிழகத்தில் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் எதிர்ப்புகளையும் மீறி இதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியிருப்பது கண்டிக்கத்தக்கது” என்று குறிப்பிடப்பட்டிருந்தது. அது தொடர்பான முழுமையான செய்தியைப் படிக்க
விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு
தமிழ்நாடு அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருவாரூரில் இத்திட்டம் பற்றி கூறிய போது “டெல்டா பகுதியினை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்”. மேலும் “காவிரி டெல்டா பகுதியில் இருந்து மூன்று இடங்கள் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்காக தேர்வு செய்யப்பட்டதற்கு விவசாயிகள் சார்பில் கண்டனமும், எதிர்ப்பும் தெரிவித்துகொள்கிறோம் என்றும் இதனால் காவிரி படுகைகள் பாலை வனமாக மாறிவிடும்” என்றும் அவர் கூறியிருக்கிறார்.
கம்யூனிஸ்ட் கட்சி
கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பாலக் கிருஷ்ணன் இது குறித்து பேசுகையில் “தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், தமிழகத்தில் போராட்டங்கள் தீவிரமடையும்” என்று கூறியுள்ளார்.