இந்தியாவில் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதையொட்டி அரசியல் கட்சிகள் தீவிர பரப்புரையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி தலைவருமான ஜெகன் மோகன் ரெட்டி நேற்று (ஏப்ரல் 13) தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்தார். திறந்தவெளி வாகனத்தில் நின்றபடி ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது தூரத்தில் இருந்து அடையாளம் தெரியாத மர்ம நபர் ஜெகன் மீது கல்வீசி தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் அவரது புருவத்திற்கு சற்று மேல் ரத்தக் காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கிருந்த அதிகாரிகள் ஜெகனுக்கு முதலுதவி செய்தனர். இந்த சம்பவம் அங்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி மீது கல்வீசி தாக்குதல் நடத்தியது யார் என்பது குறித்து
காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
தொடர்ந்து இந்த சம்பவத்திற்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "அரசியல் வேறுபாடுகள் வன்முறையாக மாறக் கூடாது. ஜனநாயக செயல்பாட்டில் நாகரீகத்தையும் பரஸ்பர மரியாதையையும் நிலை நாட்டுவோம். அவர் விரைவில் குணமடைய வேண்டுகிறேன்" என்று கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“