கிருஷ்ணகிரி மாவட்ட வனப் பகுதியில் கல்குவாரி டெண்டர் நடவடிக்கைகளுக்கு தடை விதிக்க கோரிய வழக்கில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி வனப்பகுதியில் உள்ள காட்டு யானைகள் அவ்வப்போது மலை கிராம ஊருக்குள் புகுந்து விளை நிலங்களை சேதப்படுத்தி மக்கள் மற்றும் குடியுருப்புகளை சேதப்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கடந்த ஒரு வாரமாய் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியில் ஒற்றை காட்டு யானை அங்குள்ள ஊருக்குள் புகுந்து பெரும் அட்டகாசம் செய்து வந்தது. அங்குள்ள விளை நிலங்கள் மற்றும் வீடுகளை சேதப்படுத்தியது. அந்த ஒற்றை காட்டு யானையால் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊருக்குள் புகுந்து தாக்கியிதில் 3 பேர் பலியாகியுள்ளனர்.
இந்த நிலையில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி பகுதியைச் சேர்ந்த ஜெயசங்கர் அப்பையா என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த பொது நல வழக்கில், சூளகிரி பகுதியில் உள்ள காமன்தொட்டி, சானமாவு, துரைப்பள்ளி உள்ளிட்ட மலை கிராமங்களில் காட்டு யானைகள் நடமாட்டம் அதிகம் உள்ளது. யானைகள் மூலமாக இதுவரை 1200 க்கும் மேற்றப்பட்ட பயிர் சேத சம்பவங்கள் நடந்துள்ளது. இதுவரை ஏழுக்கும் மேற்பட்டோர் யானைகள் தாக்கி உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் யானைகள் அதிகம் உள்ள மலை கிராமங்களில் உள்ள வனப் பகுதிகளில் கருங்கல் குவாரிகளை அமைக்க தமிழக அரசு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றது. இது தொடர்பாக டெண்டர் அறிவிப்பை அரசு வெளியிட்டுள்ளது. அந்த பகுதியில் யானை வழித்தடம் உள்ளதாகவும் கல் குவாரிகள் அமைக்கப்பட்டால் யானைகள் தொடர்ந்து ஊருக்குள் நுழைந்து பயிர்களை சேதப்படுத்தும், மனித உயிரிழப்பு ஏற்பட வாய்ப்புகள் உள்ளது. எங்கள் பகுதியில் எனவே கல்குவாரிகள் அமைக்க தடை விதிக்கவேண்டும். இது தொடர்பாக வெளியிடப்பட்ட டெண்டர் நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்று மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் மணிக்குமார், பவானி சுப்பராயன் ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், தமிழக அரசு டெண்டர் நடவடிக்கைகளை தொடரலாம் என்றும் ஆனால் டெண்டர் ஒப்பந்தபுள்ளிகளை இறுதிசெய்யக்கூடாது என்று உத்தரவிட்டு மனு தொடர்பாக பதில் அளிக்க தமிழக அரசு, கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் ஆகியோருக்கு உத்தரவிட்டு வழக்கை அடுத்த வாரம் தள்ளிவைத்தனர்.