விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகளுக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை!

12ம் தேர்வு முடிவுகளில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து தடையை மீறி விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் வெளியிடப்படும் +2 தேர்வுகளைக் கொண்டு தனியார் பள்ளிகள் பல்வேறு விளம்பரங்களைச் செய்து வருகிறது. முதல் மதிப்பெண் மற்றும் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களின் புகைப்படங்களை வைத்து பொது தளத்தில் தனியார் பள்ளிகள் விளம்பரம் செய்து வந்தன. இதனால் குறைந்த மதிப்பெண் பெற்ற மாணவர்கள் மன உளைச்சலுக்கு ஆளாகி வந்தனர். இதனால் சில மாணவர்கள் தற்கொலை செய்துகொள்ளும் அளவிற்கு விபரீத முடிவுகளில் ஈடுபட்டனர்.

மாணவர்களின் நலன் மற்றும் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு ரேங்க் அறிவிக்கும் முறையைத் தடை செய்ததது. இந்த விதிமுறைப்படி, அதிக மதிப்பெண்களின் விவரங்கள் மட்டுமே அறிவிக்கப்படும் என்றும், முதல் மூன்று மதிப்பெண்கள் அறிவிக்கப்படாது என்றும் திட்டவட்டமாக தெரிவிக்கப்பட்டது. இந்த புதிய திட்டத்தினால் மாணவர்களுக்கு ஏற்படும் மன அழுத்தம் குறையும் என்றும் கூறப்பட்டது.

இதில் முக்கியமாகக் கூறப்பட்ட மற்றொன்று தனியார் பள்ளிகளின் சேர்க்கை தான். அதிக மதிப்பெண்கள் மற்றும் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களை வைத்து அவர்கள் விளம்பரம் செய்து வந்தனர். இதனால் அரசுப் பள்ளிகளின் சேர்க்கை குறைந்தது. இதனைத் தடுக்கும் வகையிலும் இந்தத் தேர்வு முடிவு அறிவிப்பு புதியதாக அறிமுகம் செய்யப்பட்டது.

2018ம் ஆண்டின் +2ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை பள்ளிக் கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் இன்று அறிவித்தார். இந்த அறிவிப்பின்போது, “+2 தேர்வில் மாணவர்களின் மதிப்பெண்களை வைத்து விளம்பரம் செய்யும் தனியார் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். விதிமுறையை மீறி எந்தத் தனியார் நிறுவனமும் பள்ளி மாணர்வகள் மதிப்பெண்கள் அல்லது அவர்கள் புகைப்படம் வைத்து விளம்பரத்தில் ஈடுபடக் கூடாது.” என்று அறிவித்தார்.

இந்த அறிவிப்பை அமைச்சர் தனது ட்விட்டர் பக்கத்திலும் வெளியிட்டுள்ளார்.

×Close
×Close