தமிழ்நாடு தன்னை ஒரு உலகளாவிய உற்பத்தி மையமாக நிலைநிறுத்த முற்படும் நேரத்தில், இந்தியாவில் சாம்சங் நிறுவனத்தின் மிக முக்கியமான ஆலைகளில் ஒன்றான, சென்னைக்கு அருகில் உள்ள வீட்டு உபயோகப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலை, ஆலையின் பெரும்பான்மையான நிரந்தர ஊழியர்களின் வேலை நிறுத்தத்தால் பாதிக்கப்பட்டுள்ளது.
ஆங்கிலத்தில் படிக்க: Strike by workers of key Samsung plant near Chennai enters 2nd week; their top demand – right to form a union
செப்டம்பர் 9 முதல் வேலைநிறுத்தம் செய்து வரும் தொழிலாளர்கள், நிறுவனம் தங்கள் தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய மறுசீரமைப்பு பேச்சுவார்த்தைகளை தொடங்க வேண்டும் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான கவலைகளை நிவர்த்தி செய்ய வேண்டும் என்று கோருகின்றனர்.
திங்கள்கிழமை, காஞ்சிபுரத்தில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு பேரணியாக செல்ல முயன்ற சுமார் 120 சாம்சங் தொழிலாளர்கள் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதற்காக தமிழக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
இந்த வேலைநிறுத்தத்திற்கு சி.பி.ஐ(எம்) (CPI(M)) உடன் தொடர்புள்ள தேசிய தொழிலாளர் அமைப்பான சென்டர் ஆஃப் இந்தியன் டிரேட் யூனியன்ஸ் (CITU) ஆதரவு அளித்துள்ளது. மேலும் பல தொழிலாளர் குழுக்கள் தற்போது தொழிலாளர்களுக்கு ஒற்றுமையாக சென்னையில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளன.
தமிழ்நாட்டின் ஆளும் தி.மு.க, தொழிலாளர்களுக்கு பெருகி வரும் ஆதரவு சாம்சங் நிறுவனத்திற்கும் அதன் பணியாளர்களுக்கும் இடையேயும், நிறுவனத்திற்கும் மாநில அதிகாரிகளுக்கும் இடையே பதட்டங்களை அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சுகிறது.
சென்னைக்கு அருகிலுள்ள ஸ்ரீபெரும்புதூரில் உள்ள ஆலையில் வேலைநிறுத்தம் நடைபெறுகிறது, அங்கு சாம்சங் நிறுவனம் குளிர்சாதன பெட்டிகள், வாஷிங் மெஷின்கள் மற்றும் தொலைக்காட்சிகள் உள்ளிட்ட பல்வேறு வகையான வீட்டு உபயோகப் பொருட்களை உற்பத்தி செய்கிறது, இது சாம்சங் நிறுவனத்தின் இந்தியா வருவாயில் மூன்றில் ஒரு பங்கைக் கொண்டுள்ளது.
அன்னிய முதலீட்டை தமிழகம் தீவிரமாக வலியுறுத்தி வரும் நேரத்தில் இந்த வேலைநிறுத்தம் நடைபெற்று வருகிறது. முதல்வர் மு.க.ஸ்டாலினின் சமீபத்திய அமெரிக்கப் பயணத்தின் போது, அமெரிக்க நிறுவனங்களிடமிருந்து 7,000 கோடி ரூபாய்க்கு மேல் முதலீடு செய்வதற்கான ஒப்பந்தங்களை தமிழக அரசு பெற்றது.
மாநில அரசு அதிகாரி ஒருவர் கூறும்போது, “இங்குள்ள அரசாங்கத்தின் முன் உள்ள சவால் என்னவென்றால், அரசாங்கம் தலையிட்டு தீர்க்கக்கூடிய முக்கிய பிரச்சினைகள் (ஊதிய உயர்வு கோரிக்கை போன்றவை) இல்லை. தொழிற்சங்கத்தை அனுமதிக்க வேண்டும் என்ற அவர்களின் (தொழிலாளர்களின்) முக்கிய கோரிக்கையை நிறுவனம் ஏற்கவில்லை, ஏனெனில் அதன் பின்னணியில் சதி இருப்பதாக நிறுவனம் சந்தேகிக்கிறது,” என்றார்.
2007ல் ஆலையை ஆரம்பித்ததில் இருந்து இதுவரை இதுபோன்ற பிரச்சினைகளை எதிர்கொள்ளாததால், சி.ஐ.டி.யு பிரச்சினைகளை சிக்கலாக்குவதாக சாம்சங் நிறுவனம் கருதுகிறது, என்று அந்த அதிகாரி கூறினார்.
சி.ஐ.டி.யு மாநிலத் தலைவர் சவுந்தரராஜன் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், தொழிற்சாலை தொடங்கப்பட்டு 16 ஆண்டுகளுக்குப் பிறகு ஜூன் மாதம் தொழிற்சங்கம் அமைப்பதாக தொழிலாளர்கள் அறிவித்தனர். இது, நிர்வாகத்தால் தொழிலாளர்கள் நெருக்கடிக்கு உள்ளாக்கப்பட்டதையே காட்டுகிறது என்றார்.
"சங்கத்தை உருவாக்கும் உரிமை, கூட்டு பேரம் பேசுவதற்கான உரிமை மற்றும் பெரும்பான்மையான தொழிற்சங்கத்துடன் அர்த்தமுள்ள விவாதம் ஆகியவை முக்கிய கோரிக்கையாகும். ஊதிய உயர்வு குறித்து பின்னர் விவாதிக்கலாம், ஆனால் நிர்வாகம் எந்த தொழிற்சங்கத்தையும் அனுமதிக்க மறுக்கிறது,'' என்று சவுந்தரராஜன் கூறினார்.
சாம்சங் இந்தியா ஊழியர் சங்கம் ஜூன் மாதம் உருவாக்கப்பட்டது, அதன் அங்கீகாரத்திற்கான கோரிக்கைகள் நிறுவனத்தின் நிர்வாகத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டன. தொழிற்சங்கம் அமைப்பதைத் தடுக்க, விடுமுறை மறுப்பது, ஊழியர்களை இடமாற்றம் செய்வது உள்ளிட்ட மிரட்டல் தந்திரங்களை நிறுவனம் பயன்படுத்தியதாக சவுந்தரராஜன் குற்றம் சாட்டினார். "ஒரு கட்டத்தில், நாங்கள் இதை இனியும் பொறுத்துக்கொள்ள முடியாது என்பதை உணர்ந்து வேலைநிறுத்தத்தை அறிவித்தோம்," என்று சவுந்தரராஜன் கூறினார்.
ஆலையின் 1,723 நிரந்தரத் தொழிலாளர்களில் சுமார் 1,350 பேர் கலந்துக் கொண்டுள்ள வேலைநிறுத்தம், சாம்சங் நிறுவனம் இந்தியாவில் எதிர்கொள்ளும் மிகப்பெரிய தொழிலாளர் இடையூறுகளில் ஒன்றாகும். ஆலையின் மொத்த பணியாளர்களில் கணிசமான பங்கான 5,000 பேர் கொண்ட ஒப்பந்தத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை, ஆனால் உற்பத்தி குறைந்துள்ளது.
அதிகாரிகளின் கூற்றுப்படி, சாம்சங் நிறுவனம் தொழிற்சங்கத்துடன் ஈடுபட தயங்குகிறது, சி.ஐ.டி.யு உடன் தொழிற்சங்கம் இணைந்திருப்பது நிறுவனத்திற்கு கவலையளிக்கிறது.
சாம்சங் அதிகாரி ஒருவர், பெயர் குறிப்பிட விரும்பாத நிலையில், சி.ஐ.டி.யு இணைப்பு மற்ற ஆலைகளிலும் இதுபோன்ற வேலைநிறுத்தங்கள் நடக்கலாம் என்ற அச்சம் உள்ளது என்றார். ஊழியர்களுடன் பேசத் தயாராக இருப்பதாக நிர்வாகம் ஏற்கனவே அரசுக்குத் தெரிவித்துள்ளதாகவும், ஆனால் சி.ஐ.டி.யு.,வுடன் பேச விரும்பவில்லை என்றும் அந்த அதிகாரி கூறினார்.
ஜூலை மாதம், சாம்சங் எலக்ட்ரானிக்ஸ் அதன் சொந்த நாடான தென் கொரியாவில் தொழிலாளர் அமைதியின்மையை எதிர்கொண்டது, அங்கு 6,500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிறந்த ஊதியம் மற்றும் மேம்பட்ட வேலை நிலைமைகளைக் கோரி மூன்று நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
அதைக் குறிப்பிட்டு, சவுந்தரராஜன், “தென்கொரியாவில், பதிவு செய்யப்பட்ட தொழிற்சங்கங்களையும் அவர்கள் அனுமதிக்கவில்லை, இங்கேயும் அதையே செய்கிறார்கள்... தொழிற்சங்கத்தைப் பதிவு செய்வதில் அரசாங்கம் கால தாமதம் செய்தும் பயனில்லை. இந்திய தொழிலாளர் சட்டத்தின்படி, தொழிற்சங்கத்தின் பதிவு கோரிக்கையை 45 நாட்களுக்குள் அரசாங்கம் செயல்படுத்த வேண்டும், ஆனால் 90 நாட்களுக்கு மேல் அரசாங்கத்திடமிருந்து எந்த பதிலும் இல்லாமல் இருக்கிறது,” என்று கூறினார்.
சாம்சங் நிறுவனம் கடந்த வாரம் ஒரு அறிக்கையை வெளியிட்டது, "அனைத்து சிக்கல்களையும் விரைவில் தீர்க்க உறுதிபூண்டுள்ளோம்" என்று கூறியது, மேலும் தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது. இருப்பினும், சிறிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.