தூத்துக்குடி விமான நிலையத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் உடன் வாக்குவாதத்தில் ஈடுப்பட்ட பெண் போலீசாரால் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
கோஷமிட்ட பெண்:
குற்றாலத்தில் நடைப்பெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் சென்னையிலிருந்து நேற்று தூத்துக்குடிக்கு விமானம் மூலம் வந்தார். அப்போது அதே விமானத்தில் பயணம் செய்ய வந்த மாணவி ஒருவர், தமிழிசையைப் பார்த்ததும், “பாஜக ஆட்சி ஒழிக, பாசிச ஆட்சி ஒழிக” என்று கோஷம் எழுப்பியுள்ளார்.
இதனால் விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. கோபம் அடைந்த தமிழிசை அந்த மாணவியுடன் விமான நிலையத்திலியே வாக்குவாதத்தில் ஈடுப்பட்டார். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வேகமாக பரவ தொடங்கியது.,
பாஜகவுக்கு எதிராக கோஷம் இட்ட மாணவியின் விவரங்கள் வெளிவரத் தொடங்கின.கோஷமிட்ட அந்த இளம் பெண், தூத்துக்குடியைச் சேர்ந்த மருத்துவரின் மகள் சோபியா என்பதும், தற்போது அவர் கனடாவில் படித்து வருவதும் தெரியவந்தது. சென்னையிலிருந்து தூத்துக்குடிக்கு அவர் விமானம் ஏறிய போது இந்த சம்பவம் நடந்ததும் தெரியவந்தது.
இந்நிலையில், விமானம் தரையிறங்கியதும் கோஷமிட்ட இளம்பெண்ணுக்கு எதிராக விமான நிலைய அதிகாரிகளிடம் தமிழிசை சவுந்தரராஜன் புகார் அளித்தார். தமிழிசை சவுந்தரராஜன் அளித்த புகாரை அடுத்து சோபியா கைது செய்யப்பட்டார். பின்னர், அவரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர்.
பொதுமக்களுக்கு இடையூறு அளித்தல் உள்ளிட்ட இரண்டு பிரிவுகளின் கீழ் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. விசாரணைக்கு பின்னர், சோபியா தூத்துக்குடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, பாஜகவுக்கு எதிராக தமிழிசை முன் முழக்கமிட்ட குற்றச்சாட்டில் சோபியாவுக்கு 15 நாள் நீதிமன்ற காவல் அளித்து நீதிபதி உத்தரவிட்டார். நீதிமன்ற உத்தரவை அடுத்து, சோபியா நெல்லை மகளிர் சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.