Advertisment

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு! ரயில்வே போலீசார் விளக்கம்

விசாரணையின்போதே அவர் தப்பியோடி விட்டதாக கூறியுள்ள போலீசார், மாணவன் தப்பியோடும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோவையும் வெளியிட்டுள்ளனர்

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட மாணவர் சடலமாக மீட்பு

திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி சின்னகாவனம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி. இவரது மகன் மவுலீஸ்வரன் (வயது 22). பொன்னேரியில் உள்ள கல்லூரியில் 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவரை ரயில்வே பாதுகாப்பு படை போலீசார் குற்ற வழக்கு ஒன்றுக்கு விசாரணைக்காக அழைத்து சென்றனர். நேற்று முன்தினம் மாலையில் மவுலீஸ்வரன் கும்மிடிப்பூண்டி - எளாவூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தில் தலை துண்டிக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார்.

Advertisment

இது குறித்து தகவல் அறிந்த கொருக்குப்பேட்டை ரெயில்வே போலீசார் மவுலீஸ்வரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த நிலையில், நேற்று கல்லூரி மாணவர் மவுலீஸ்வரனின் சாவில் சந்தேகம் இருப்பதாக அவரது உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் பொன்னேரி ஆர்.டி.ஓ. அலுவலகத்தை முற்றுகையிட்டனர். பின்னர் பொன்னேரி ரயில் நிலையம் அருகே அந்த வழியாக வந்த மின்சார ரெயிலை மறித்து போராட்டம் நடத்தினர். இதனால் அந்த வழித்தடத்தில் ஒரு மணிநேரம் ரெயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு திருவள்ளூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு தில்லைநடராஜன், பொன்னேரி துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா மற்றும் ரெயில்வே போலீசார் வந்து போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது போராட்டக்காரர்கள், கல்லூரி மாணவர் மவுலீஸ்வரன் குடும்பத்தை சேர்ந்த ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும், இழப்பீடு வழங்க வேண்டும், சம்பந்தப்பட்ட ரெயில்வே பாதுகாப்பு படை போலீசாரை கைது செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

அப்போது அவர்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட ஆர்.டி.ஓ. முத்துசாமி, தாசில்தார் கார்த்திகேயன் மற்றும் பொன்னேரி போலீசார் இந்த வழக்கு சம்பந்தமாக கும்மிடிப்பூண்டி ரெயில்வே பாதுகாப்பு படை போலீஸ் இன்ஸ்பெக்டர் அங்கத்குமார், போலீஸ்காரர் வினய்குமார் ஆகியோரை ரெயில்வே நிர்வாகம் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பொன்னேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர் என்று தெரிவித்தனர்.

இந்த நிலையில், ரயில்வே போலீசார் தரப்பில் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. மவுலீஸ்வரன் தனது நண்பர்களுடன் சேர்ந்து ரயில்வேக்கு சொந்தமான வயர், கம்பி உள்ளிட்ட பொருட்களை திருட முயன்றதாகவும் அவர்களை பிடித்து விசாரணை நடத்தியதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். ஆனால் விசாரணையின்போதே அவர் தப்பியோடி விட்டதாக கூறியுள்ள போலீசார், மாணவன் தப்பியோடும் காட்சிகள் அடங்கிய சிசிடிவி வீடியோவையும் வெளியிட்டுள்ளனர். இந்த விவகாரம் வீட்டிற்கு தெரிந்தால் அவமானம் ஏற்படும் என கருதி, மவுலீஸ்வரன் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது.

Tamilnadu
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment