லேட்டாக வந்த மருத்துவ விண்ணப்பம்.. டாக்டர் படிக்க முடியாமல் தவிக்கும் மாணவன்!

தபால் துறையின் கவனக்குறைவால் தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது.

மருத்துவப் படிப்பிற்கான விண்ணப்பத்தை  தபால் துறையினர் காலதாமதமாக  வழங்கியதால்  ஏழை மாணவனின் மருத்துவ கனவு கேள்வி குறியாகியுள்ளது.

சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த மாணவர்  வசந்த்  சிறு வயது முதலே மருத்துவராக வேண்டும் என்ற கனவுடன் படித்து வந்துள்ளார்.  இவரின் தந்தை ஒரு ஓட்டுநர் ஆவர்.  மகனின் மருத்துவ கனவை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக , வசந்திற்கு  எல்லா விஷயத்திலும் பக்கபலமாக இருந்துள்ளார் வசந்தின் தந்தை.   தனது தந்தையின் ஏழ்மையை புரிந்துக் கொண்ட  வசந்த  படிப்பில் அதிகளவில் கவனம் செலுத்தி 12 ஆம் வகுப்பு பொது தேர்வில்  1125 மதிப்பெண்கள் எடுத்துள்ளார்.

மருத்துவக்கனவிற்கு அடுத்த கட்டமான நீட் தேர்விலும் கவனமாக படித்து  384 மதிப்பெண்கள் எடுத்தி தேர்ச்சியும் அடைந்துள்ளார். இந்நிலையில் கடந்த ஜூன் 14 ஆம் தேதி  மருத்துவப்படிப்பிற்கான விண்ணப்பத்தை   விரைவு தபால் மூலம் சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குநரகத்திற்கு வசந்த் அனுப்பியுள்ளார்.

விண்ணப்பம் பெறுவதற்கான கடைசி நாள் 19ம் தேதி என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்ததால் வசந்த முன்கூட்டியே விரைவு தபால் மூலமே விண்ணப்ப படிவத்தை அனுப்பி இருந்தார். இந்நிலையில்,  வசந்த அணுப்பிய விண்ணப்ப படிவம்  24ம் தேதி மருத்துவக் கல்வி இயக்குநரகத்திற்கு காலதாமதமாக சென்றடைந்தது.  இதனால் மாணவனின் விண்ணப்பத்தை சென்னை மருத்துவக்கல்லூரி இயக்குனரகம் நிராகரித்துள்ளது.

தபால்துறையின் அலட்சியமான போக்கினால் தான் இந்த தவறு நடந்துள்ளது என்ற உண்மையை உணர்ந்த மருத்துவக் கல்வி இயக்குனரகம் வசந்தின் விண்ணப்பத்தை ஏற்க மறுத்துள்ளது. இதனால் கவலையடைந்த வசந்த் தனது தந்தையுடன் நேரில் வந்து நடந்தவற்றை விவரித்துள்ளார். இருந்தபோதும் அவரின் கோரிக்கையை சென்னை மருத்துவ கல்லூரி நிராகரித்தது.

இந்நிகழ்வினால் வசந்தின் குடும்பம் சோகத்தில் ஆழ்ந்துள்ளது. இதுக்குறித்து பேசியுள்ள மாணவர் வசந்தின் குடும்பத்தார், “ 12 ஆம் வகுப்பு தேர்விலும், நீட் தேர்விலும்  வசந்த் கடினமாக படித்து தேர்ச்சி பெற்றதை நாங்கள் நேரில் இருந்து பார்த்துள்ளோம். மருத்துவர் ஆக வேண்டும் என்பதே வசந்தின் நீண்டகால கனவு. தபால் துறையின் கவனக்குறைவால் தான் இந்த தவறு நிகழ்ந்துள்ளது.

இதை புரிந்துக் கொண்டு மருத்துவக் கல்வி இயக்குனரகம் வசந்தின் விண்ணப்பத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்” என்று கோரிக்கை வைத்துள்ளனர். மேலும்,தமிழக அரசு தங்களுக்கு உதவ வேண்டுமென அவர்கள்  தெரிவித்துள்ளனர்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close