கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் 39-ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில் தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி, உயர் கல்வித் துறை அமைச்சர் கோவி. செழியன் ஆகியோர் பங்கேற்று பட்டங்களை வழங்கினர். அப்போது, ஆங்கிலத்தில் முனைவர் பட்டம் பெற வந்திருந்த பிரகாஷ் என்ற மாணவர், பல்கலைக்கழகத்தில் உள்ள பிரச்சனைகள் குறித்து புகார் கடிதம் ஒன்றை ஆளுநர் ஆர்.என். ரவியிடம் வழங்கினார். மாணவரின் இச்செயலால் பட்டமளிப்பு விழா அரங்கில் சலசலப்பு நிலவியது.
இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய மாணவர் பிரகாஷ், பல்கலைக்கழகத்தில் ஆய்வு மேற்கொள்ளும் மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் மற்றும் ஏற்படும் பிரச்சனைகள் குறித்த புகார் கடித்தத்தை ஆளுநரிடம் சமர்ப்பித்ததாக தெரிவித்தார். குறிப்பாக, ஆராய்ச்சி மாணவர்களை வழிநடத்தும் பேராசிரியர்கள், தங்கள் வீட்டு வேலைகளுக்காக மாணவர்களை பயன்படுத்துவதாக குறிப்பிட்டார். குழந்தைகளை பராமரிப்பது, பாத்திரம் கழுவுவது போன்ற சொந்த வேலைகளுக்கு ஆராய்ச்சி மாணவர்கள் பயன்படுத்தப்படுவதாக குற்றஞ்சாட்டினார்.
மேலும், பல்கலைக்கழகத்தில் ஆதிதிராவிடர் வகுப்பைச் சேர்ந்த ஆராய்ச்சி மாணவர்களுக்கு இரண்டு விடுதிகள் இருக்கும் நிலையில், அவை பொது விடுதியாக பயன்படுத்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆதிதிராவிடர் விடுதிகள் இல்லையெனக் கூறி, அதற்காக அரசு வழங்கும் நிதியையும் பல்கலைக்கழக நிர்வாகம் பெறுவது இல்லை என கூறப்படுகிறது. மாணவர்கள் தங்கள் ஆய்வுக் கட்டுரையை சமர்ப்பித்த பின்னர், சுமார் 50 ஆயிரம் ரூபாய் முதல் 1 லட்ச ரூபாய் வரை செலவளிக்க பேராசிரியர்கள் நிர்பந்திப்பதாகவும் மாணவர் தெரிவித்துள்ளார்.
பல்கலைக்கழக விடுதி பராமரிப்புக்காக ஆண்டுக்கு ஒரு கோடி ரூபாய் செலவளிப்பதாக கூறப்படும் நிலையில், விடுதியின் கழிப்பறைகள் கூட முறையாக பராமரிக்கப்படுவதில்லை எனக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி, பல்கலைக்கழகத்தின் விளையாட்டு மைதானங்கள் அனைத்தும் தனியார் வசம் வாடகைக்கு விடப்படுவதாகவும், அவற்றை பயன்படுத்த மாணவர்களுக்கு அனுமதி மறுக்கப்படுவதாகவும் புகார் கடித்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், கடந்த 5 ஆண்டுகளாக விளையாட்டு தினம் நடத்தாமல், பணம் மட்டும் வசூலிக்கப்பட்டதாகவும், ஆளுநருக்கு எழுதிய புகார் கடித்தத்தில் முனைவர் பட்டம் பெற்ற பிரகாஷ் தெரிவித்துள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.