/indian-express-tamil/media/media_files/wy7ISCj9FCTHZiBdTrAK.jpg)
தனது சொந்த காரில் அந்த மாணவியை தருமபுரிக்கு அழைத்துச் சென்று நீட் தேர்வு எழுத உதவிய அந்த காவலரின் மனிதாபிமான செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. (Representative image)
கிருஷ்ணகிரியைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளியின் மகள், நீட் தேர்வு எழுதுவதற்காக தருமபுரியில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட நிலையில், தவறுதலாக சேலத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு வந்துவிட்டார். என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்து கண்ணீர் விட்ட அந்த மாணவிக்கு, அங்கு பணியில் இருந்த காவலர் ஒருவர் உடனடியாக உதவினார். தனது சொந்த காரில் அந்த மாணவியை தருமபுரிக்கு அழைத்துச் சென்று நீட் தேர்வு எழுத உதவிய அந்த காவலரின் மனிதாபிமான செயல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் இளநிலை தேர்வு இன்று (04.05.2025) நாடு முழுவதும் ஒரே கட்டமாக நடைபெற்றது. தமிழகத்தில் மட்டும் சுமார் 1.5 லட்சம் மாணவர்கள் இந்த தேர்வை எழுதினர். இதற்காக தமிழகத்தின் 31 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த மாணவி ஒருவருக்கு தருமபுரியில் உள்ள ஒரு கல்லூரியில் நீட் தேர்வு மையம் ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், இன்று காலை அந்த மாணவி எதிர்பாராதவிதமாக சேலத்தில் உள்ள ஒரு கல்லூரிக்கு வந்துள்ளார். தேர்வு மைய எண்ணை சரிபார்த்தபோதுதான் அவருக்கு தருமபுரியில் மையம் ஒதுக்கப்பட்டது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த அந்த மாணவி செய்வதறியாது கண்ணீர் விட்டு அழுதார்.
தேர்வு எழுத வேண்டும் என்ற எண்ணத்தில் கலங்கியபடி நின்ற அந்த மாணவியை அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் கவனித்தனர். விசாரித்தபோது மாணவி நடந்தவற்றை தெரிவித்தார். மாணவியின் தந்தைக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொள்ள முடியுமா என்றும், அவர் என்ன வேலை செய்கிறார் என்றும் போலீசார் கேட்டனர். மாணவியின் தந்தை ஒரு கட்டிட மேஸ்திரி என்பது தெரியவந்தது.
இதையடுத்து, அந்த மாணவியின் நிலையை உணர்ந்த போலீசார், தாமதிக்காமல் அவருக்கு உதவ முன்வந்தனர். உடனடியாக ஒரு காரை ஏற்பாடு செய்து, அதில் ஒரு காவலர் அந்த மாணவியை பத்திரமாக தருமபுரியில் இருந்த நீட் தேர்வு மையத்திற்கு அழைத்துச் சென்றார். குறித்த நேரத்திற்குள் மாணவி தேர்வு மையத்தை அடைந்து தேர்வை எழுத முடிந்தது.
தவறுதலாக வேறு மையத்திற்கு வந்த மாணவிக்கு காவலர் ஒருவர் உதவிய சம்பவம், அங்கு இருந்த அனைவரையும் நெகிழ்ச்சி அடையச் செய்தது. காவலரின் இந்த மனிதாபிமான செயல் பலரது பாராட்டுகளையும் பெற்று வருகிறது.
அதே போல, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் நீட் தேர்வு மையத்திற்கு இடம் மாறி வந்த மோகனா ஸ்ரீ என்ற மாணவியை தனது காவல்துறை வாகனத்தில்
ஹால் டிக்கெட்டில் இருந்த சரியான தேர்வு மையத்திற்கு சரியான நேரத்தில் அழைத்துச் சென்று உதவினார். காவலர் தவமணிக்கும் பாராட்டுகள் தெரிவித்து வருகின்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.