நாடு முழுவதும் நீட் தேர்வு இன்று காலை 10 மணிக்கு துவக்கம்!!!

மருத்துவ படிப்பின் மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு இன்று காலை 10 மணிக்கு நாடு முழுவதும் நடைபெறுகிறது. மொத்தம் 13 லட்சம் மாணவர்கள் எழுதுகின்றனர்.

இந்திய நாடு முழுவதும் அரசு, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், ஆயுர்வேதா, யோகா, இயற்கை மருத்துவம், சித்தா, ஹோமியோபதி (ஆயுஷ் – AYUSH) படிப்புகள், கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் மற்றும் வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கச் செல்வபவர்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (NEET – நீட்) கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இத்தேர்வை மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) நடத்தி வருகிறது.

மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கான நீட் நுழைவுத் தேர்வு நாடு முழுவதும் 2,255 மையங்களில், மொத்தம் 136 நகரங்களில் நடத்தப்படுகிறது. தமிழகத்தைச் சேர்ந்த 1.07 லட்ச மாணவர்கள் இந்தத் தேர்வு எழுதுகின்றனர். இவ்வாறு நாடு முழுவதும் 13.26 லட்சத்துக்கும் மேற்பட்டோர் எழுதுகின்றனர். தேர்வு எழுதும் மாணவ, மாணவிகளுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை சி.பி.எஸ்.இ விதித்துள்ளது. வெளி மாநிலங்களில் தேர்வு மையம் ஒதுக்கப்பட்ட தமிழக மாணவர்கள் முன்கூட்டியே புறப்பட்டுச் சென்றுள்ளனர். பிற மாநிலங்களில் தேர்வு எழுதச் செல்லும் மாணவர்களுக்குத் தமிழக அரசு மற்றும் கேரள அரசு சார்பில் உதவிகள் அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் நீட் தேர்வு நடைபெறாததால், மாணவர்கள் வெளி மாநிலங்களுக்கு சென்று தேர்வு எழுதும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் கடைசி நேரத்தில் தேர்விற்கு தயார் செய்யும் பரபரப்பான நிலை ஏற்பட்டுள்ளதாக மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

நீட் தேர்வு எழுதப்படும் மாணவர்களுக்கு கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள் குறித்து அறிவிக்கப்பட்டது. அதனைப் பின்பற்றாத மாணவர்கள் தேர்வு எழுதுவதில் இருந்து தடை செய்யப்படுவார்கள்.
விதிமுறைகள் குறித்த கண்ணோட்டம்:

1. தேர்வு மையம், காலை, 7:00 மணிக்கே திறக்கப்படும். தேர்வர்கள், ஹால் டிக்கெட்டை நகல் எடுத்து, அதை தேர்வறைக்கு எடுத்து வர வேண்டும். ஹால் டிக்கெட் இல்லாதவர்கள், தேர்வு மைய வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். தேர்வுக்கு விண்ணப்பிக்கும் போது அளித்த புகைப்படத்தை பின்பற்றி, அதேபோன்ற இரண்டு புகைப்படங்களை, தேர்வு மையத்துக்கு எடுத்து செல்ல வேண்டும்.

2. காலை, 9:30 மணிக்கு பின், தேர்வு மைய வளாகத்திற்குள் செல்ல அனுமதி இல்லை. 9:30க்கு, தேர்வுக்கான அறிவுரை வழங்குதல், ஹால் டிக்கெட் ஆய்வு போன்ற நடவடிக்கைகள் துவங்கும். 10:00 மணிக்கு தேர்வை எழுத துவங்க வேண்டும்; பகல் 1:00க்கு தேர்வு முடியும் தேர்வு மையத்தின் நேரம் என்பது, சி.பி.எஸ்.இ., நீட் தேர்வு இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ள, கடிகார நேரத்தின் அடிப்படையில் கடைபிடிக்கப்படும்.

3. தேர்வறையில், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் மட்டுமே, தேர்வர்கள் அமர வேண்டும். வேறு இடத்தில் அமர்ந்து தேர்வு எழுதினால், அந்த தேர்வரின் விடைத்தாள் ரத்து செய்யப்படும்.

4. தேர்வர்கள் யாரும், பேனா எடுத்து செல்ல அனுமதியில்லை. கணினி திருத்த விடைத்தாளில், சரியான விடையை எழுத, கறுப்பு அல்லது நீல நிற மை பேனா, தேர்வு மையத்திலேயே வழங்கப்படும்.

5. தேர்வு துவங்க உள்ள, 15 நிமிடங்களுக்கு முன், மூடி முத்திரையிட்ட உறையில், தேர்வுக்கான விடை எழுத வேண்டிய தாள் வழங்கப்படும். அதை வாங்கியவுடன், கவரின் மேல் பகுதியில் கேட்கப்பட்ட விபரங்களை பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கு, தேர்வு மையத்தில் தனியாக பேனா வழங்கப்படும்.

6. கண்காணிப்பாளர் கூறும் வரை, கவரை திறக்க கூடாது.தேர்வு துவங்குவதற்கு, ஐந்து நிமிடங்களுக்கு முன், கவரை பிரிக்க, கண்காணிப்பாளர் அறிவுறுத்துவார். விடை எழுத வேண்டிய தாளில், இரண்டாம் பக்கத்தில், குறியீட்டு எண் இருக்கும். அந்த எண், தேர்வருக்கு வழங்கப்பட்ட உறையில் சரியாக உள்ளதா என்பதை சரிபார்க்க வேண்டும். மாறியிருந்தால், கண்காணிப்பாளிரிடம் காட்டி, இரண்டு எண்ணும் சரியாக உள்ளதை பெற்று கொள்ள வேண்டும்.

7. கண்காணிப்பாளர் சொன்ன பிறகே, தேர்வு எழுத துவங்க வேண்டும்; அவர் அறிவுறுத்தியதும், தேர்வு எழுதுவதை முடித்துக் கொள்ள வேண்டும். விடைத்தாளில், கண்காணிப்பாளர் கையெழுத்திட்டிருப்பதை, தேர்வு முடிந்ததும் உறுதி செய்ய வேண்டும்.

8. விடைத்தாளின் ஒரு பக்கத்தில், பதிவு எண், தேர்வரின் பெயர், தந்தை பெயர், தேர்வு மையத்தின் எண், தேர்வு மையத்தின் பெயர் ஆகிய விபரங்களை, அதற்காக குறிப்பிட்ட இடத்தில் நிரப்ப வேண்டும்.

9.தேர்வரின் கையெழுத்தையும் பதிவு செய்ய வேண்டும். அடுத்த பக்கத்தில், பதிவு எண், தேர்வு மைய எண், விடைத்தாள் உறை எண், வினாத்தாள் குறியீடு ஆகியவற்றை நிரப்ப வேண்டும். இவ்வாறு தகவல் தொகுப்பில் கூறப்பட்டு உள்ளது.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close