கோவை பந்தய சாலையில் உள்ள அரசு கலை அறிவியல் கல்லூரியில் 600 க்கும் மேற்பட்ட மாணவர்கள் ஆராய்ச்சி பட்டப்படிப்பை மிக ஆர்வத்துடன் படித்து வருகின்றனர்.
இச்சூழலில் கோவை மாவட்டத்தின் புறநகர் பகுதிகளில் இருக்கும் மற்ற மாணவர்களுக்கு ஆராய்ச்சி பட்டப்படிப்பு வாய்ப்பாக அமைவதில்லை.
இதனால் கோவை மாவட்டத்தில் கிராமப்புற பகுதிகளில் இருக்கும் மாணவர்களின் உயர்கல்வி தரம் குறைகிறது. அவர்களின் வளர்ச்சியும் மாநகரில் இருக்கும் மாணவர்களுடன் போட்டி போட முடியாத அளவிற்கு சூழல்களை ஏற்படுத்துகிறது. ஆகவே கோவை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் மற்ற ஐந்து கல்லூரிகளிலும் ஆராய்ச்சி பட்டப்படிப்பு என்ற பி.ஹெச்டி., யை கொண்டு வர வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி கூறுகையில், “தற்போது ஆராய்ச்சி படிப்பில் ஆர்வம் காட்டும் மாணவர்கள் அரசு கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பு இருந்தால் அதைத் தொடர தயாராக உள்ளனர்.
-
தமிழ்நாடு அரசு கல்லூரி ஆசிரியர் கழக மாநில தலைவர் வீரமணி
கிராமங்கள் தோறும் தொடங்கப்பட்டுள்ள தொகுதி கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பை கொண்டு வந்தால் அந்தந்த பகுதி மாணவர்களுக்கு வாய்ப்பாக அமையும்” எனத் தெரிவித்தார்.
இந்த நிலையில் ஆராய்ச்சி படிப்பிற்கு தனியார் கல்லூரிகளில் 40 ஆயிரம் ரூபாய் முதல் மூன்று லட்சம் ரூபாய் வரையும் மறைமுகமாக இன்னும் பல லட்சங்களும் செலவு ஆகின்றது. ஆனால் அரசு கல்லூரியில் 1000 ரூபாய் முதல் 3000 ரூபாய் வரையே செலவாகிறது.
இப்படி தனியார் கல்லூரியில் லட்சக்கணக்கான ரூபாய் செலவாகும் நிலையில் அரசு கல்லூரிகளில் சில ஆயிரங்களிலேயே செலவாவதால் ஏழை எளியவர்கள் கிராம புற மாணவர்களுக்கு பட்டய படிப்பு ஒரு வரப் பிரசாதமாக அமையும்.
ஆகவே அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரிகளில் ஆராய்ச்சி படிப்பை கொண்டு வர வேண்டும் என மாணவர் இயக்கங்களை சேர்ந்தவர்கள் வலியுறுத்துகின்றனர்.
இது குறித்து மாணவி பாண்டீஸ்வரி கூறுகையில், “ஆராய்ச்சி படிப்பு என்பது மாணவர்களுக்கு கனவாகவே உள்ளது. இந்த காலகட்டத்தில் 12ஆம் வகுப்பு முடித்து கல்லூரி செல்வது பீஸ் கட்டுவது என்பது சிரமமாக உள்ளது.
அதேபோல யு.ஜி. முடித்த பின்பு படித்ததற்கான கடன் கட்டவே சரியாக உள்ளது. பி.ஜி. பி.ஹெச்டி என வாழ்க்கையின் பாதி நாள்கள் கடன் கட்டவே சரி ஆகிவிடும்.
இந்த நிலையில் தமிழக அரசால் கொண்டுவரப்பட்டுள்ள கல்லூரிகளில் பி.ஹெச்டி கொண்டுவரப்பட்டால் ஏழை மாணவர்கள் பயன்பெறுவார்கள். தமிழ்நாட்டில் 20க்கும் மேற்பட்ட உறுப்பு பல்கலைக்கழக கல்லூரிகள் நிரந்தரமான அரசுக்கு கல்லூரிகளாக கொண்டுவரப்பட்டுள்ளன.
-
மாணவி பாண்டீஸ்வரி
அதேபோல கோவையிலும் கொண்டுவரப்பட்டுள்ளது. இந்த புதிய கல்லூரிகளில் பி.ஹெச்டி வரும்பொழுது மாணவர்கள் எளிமையாக கல்லூரிகளில் சேர்வார்கள்.
புதிதாக தொடங்கப்பட்ட கல்லூரிகளில் யு.ஜி பாடத்திட்டம் உள்ளது. இதை வரும் ஆண்டில் முடிக்க உள்ள மாணவர்கள் அங்கேயே பி.ஜி.,யும் படிக்க விரைவில் திட்டம் கொண்டு வர வேண்டும். அதேபோல ஐ.டி உள்ளிட்ட துறைகளில் வேலைக்கு சென்றால் யு.ஜி படிப்பதை விட பி.ஜி.யும் எதிர்பார்க்கின்றனர்.
ஆகவே விரைவாக கல்லூரிகளில் பி.ஜி., பி.ஹெச்டி ஆகியவை கொண்டு வந்தால் கோவை மாவட்ட மாணவர்கள் பயன்பெறுவர்” எனத் தெரிவித்தார்.
பி.ஹெச்டி என்பது கிராமப்புற ஏழை எளிய மாணவர்களுக்கு கனவாகவே இருந்து வரும் சூழலில் அரசு விரைவாக பி.எச்டி பட்டப்படிப்பை அனைத்து அரசு கலை அறிவியல் கல்லூரியிலும் கொண்டு வந்து மாணவர்களின் கனவை நிறைவேற்ற வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
செய்தியாளர் பி.ரஹ்மான்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil