சென்னையில் படூர் அருகே இயங்கிவரும் தனியார் கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை சரமாரியாகத் தாக்கிய கல்லூரி மாணவர்கள் அவரை போலீசாரிடம் புதன்கிழமை (19.03.2025) ஒப்படைத்தனர்.
சென்னை அடுத்த படூரில் ஒரு தனியார் கல்லூரி இயங்கி வருகிறது. இந்த தனியார் கல்லூரியில் சஞ்சு ராஜூ என்பவர் பேராசிரியராகப் பணிபுரிந்து வருகிறார். அதே கல்லூரியில் பணிபுரியும் பேராசிரியை ஒருவர், பேராசிரியர் சஞ்சு ராஜூ தனக்கு பாலியல் தொல்லை கொடுக்கிறார் என்று சக பேராசிரியர்களிடம் தெரிவித்துள்ளார்.
இதையடுத்து, பேராசிரியர் சஞ்சு ராஜூவைத் தட்டிக் கேட்ட சக பேராசிரியர்கள் அவரைத் தாக்கியுள்ளனர். இதைப் பற்றி தகவல் அறிந்த கல்லூரி மாணவர்கள், பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியர் சஞ்சு ராஜூவை சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.
இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற போலீசாரிடம், மாணவர்கள் அந்த பேராசிரியரை ஒப்படைத்தனர். போலீசார் பேராசிரியர் சஞ்சு ராஜூவைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரித்து வருகின்றனர்.
சென்னை படூர் அருகே தனியார் கல்லூரியில் பேராசிரியைக்கு பாலியல் தொல்லை கொடுத்த பேராசிரியரை கல்லூரி மாணவர்கள் சரமாரியாகத் தாக்கி அவரை போலீசாரிடம் ஒப்படைத்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.