பொறியியல் படிப்புகளுக்கு மே 3ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என உயர்கல்வித்துறை அறிவித்துள்ளது. இன்று சென்னையில் அண்ணா பல்கலைக்கழகத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பொறியியல் குறித்த விவரங்களை செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் இந்த ஆண்டு பொறியியல் படிப்புக்கான மொத்த காலி இடங்கள் மே 15ல் தெரியும். பொறியியல் படிப்புக்காக இணையதளங்களில் விண்ணப்பம் செய்வதற்கான அறிவிப்பு வருகிற 29ஆம் தேதி வெளியிடப்படும். பொறியியல் கலந்தாய்வு இந்த ஆண்டு முதல் முறையாக ஆன்லைனில் நடைபெற உள்ளது.
அதேபோல, பொறியியல் படிப்புக்கான விண்ணப்ப படிவும் ஆன்லைனிலேயே நடைபெற உள்ளது. மாணவர்கள் ஆன்லைன் மூலமாக மே 3 முதல் 30ம் தேதி வரை பொறியியல் கலந்தாய்வுக்கான விண்ணப்பத்தை பதிவு செய்து கொள்ளலாம். ஆன்லைன் விண்ணப்பத்தின் ஒரிஜினல் சான்றிதழ்களை அனுப்ப தேவையில்லை. ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்ய கூடுதல் கட்டணம் இல்லை. ஆனால் விண்ணப்ப கட்டணம் உண்டு.
அசல் சான்றிதழ்கள் சரிபார்ப்பு, மற்றும் ஆன்லைன் கவுன்சிலிங்கில் மாணவ-மாணவிகள் பங்கேற்பதற்கு வசதியாக தமிழகம் முழுவதும் மாணவர்களுக்கு 42 இலவச கலந்தாய்வு மையங்கள் அமைக்கப்படும். அதற்கான பணி ஜூன் முதல் வாரத்தில் தொடங்குகிறது. இந்த உதவி மையங்களில் கணினிகள், அச்சுப்பொறிகள், குடிநீர் மற்றும் சிற்றுண்டி வசதிகள் செய்து தரப்படும். ஆன்லைனில் விண்ணப்பத்தை பதிவு செய்யும்போது அனைத்து மாணவர்களுக்கும் வழிகாட்டி புத்தகம் வழங்கப்படும். பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வெளியாக ஓரிரு நாட்கள் தாமதமானாலும் கலந்தாய்வில் எந்த பாதிப்பும் ஏற்படாது என்று அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.