மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% உள் ஒதுக்கீடு வழங்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. நீட் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு மருத்துவ கல்லூரிகளில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறைந்ததால் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அரசியல் கட்சிகள் இதை வரவேற்கின்றன.
சென்னை தலைமை செயலகத்தில் தமிழக முதல்வர் பழனிசாமி தலைமையில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று(ஜுலை.14) மாலை நடைபெற்றது. இதில் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமைச்சர்களான எஸ்.பி.வேலுமணி, விஜயபாஸ்கர், ஆர்.பி.உதயகுமார், சம்பத், ஜெயக்குமார், ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
ஆன்லைன் கிளாஸ் – வகுப்பு வாரியாக ‘டைமிங்’ அறிவித்த மத்திய அரசு
மருத்துவ படிப்பில் சேருவதற்காக நடத்தப்படும், 'நீட்' தேர்வில் இருந்து, தமிழகத்திற்கு விலக்கு அளிக்கக் கோரி, தமிழக அரசு சார்பில், சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து, நீட் தேர்வில் தேர்ச்சி பெறும் அரசு பள்ளி மாணவர்களுக்கு, மருத்துவ மாணவர் சேர்க்கையில், உள் இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக ஆலோசித்து, அரசுக்கு அறிக்கை அளிப்பதற்காக ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையில், குழு கடந்த மார்ச் 21ம் தேதி அமைக்கப்பட்டது.
இக்குழு, கல்வியாளர்களுடன் ஆலோசனை நடத்தி, அவர்கள் கூறிய கருத்துக்கள் அடிப்படையில் அறிக்கை தயார் செய்து, உள் இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான அறிக்கையை முதல்வரிடம் சமர்பித்தது.
இந்நிலையில், இன்றைய அமைச்சரவைக் கூட்டத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்க ஒப்புதல் வழங்கப்பட்டது. உள் ஒதுக்கீடு மூலம் சுமார் 500 இடங்கள் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும் 5 ஆயிரம் கோடி ரூபாயில் முதலீடு செய்யும் 6 தொழில் நிறுவனங்களை தமிழகத்தில் அனுமதிக்கவும் அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. அனைவருக்குமான கட்டாய கல்வி உரிமை சட்டத்தில் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கும் 7.5% உள் ஒதுக்கீடு வழங்கவும் அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
எனினும், 7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அளிக்க ஒப்புதல் அளிக்கப்பட்டதற்கு ஆங்காங்கே எதிர்ப்புகளும் பதிவாகி வருகின்றன.
இதுகுறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆளூர் ஷாநவாஸ், "மருத்துவ மாணவர் சேர்க்கையில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க அமைச்சரவை ஒப்புதல் அளித்திருப்பது நல்ல முடிவு.
ஆனால், நீதிபதி கலையரசன் குழு 10% வழங்க பரிந்துரைத்த நிலையில், அரசு அதிலும் குறைத்து 7.5% அறிவித்துள்ளது. இது மிகவும் குறைவு.
அதிகம் வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற t.me/ietamil