சென்னை பட்டரவாக்கம் ரயில் நிலையத்தில் அரிவாள், கத்தியுடன் கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்தச் சம்பவத்தைப் பார்த்த பயணிகள் ரயிலில் இருந்து இறங்கி ஓட்டம் பிடித்தனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து திருவள்ளூர் நோக்கி புறநகர் ரயில் ஒன்று பிற்பகல் 2.30 மணியளவில் சென்றுகொண்டிருந்தது.
அந்த ரயில் கொரட்டூர் - அம்பத்தூர் இடையே பட்டரவாக்கம் ரயில் நிலையம் வந்தபோது மாணவர்களுக்கிடையே மோதல் ஏற்பட்டது. சுமார் 15 மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் சென்று 3 மாணவர்களை விரட்டி வெட்டினர். ஆயுதங்களுடன் வந்த மாணவர்கள் முகத்தில் கர்சீஃப் அணிந்திருந்தனர். இதனை கண்ட பயணிகள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். மேலும், பயணிகள் மீதும் மாணவர்கள் கற்களைக் கொண்டு தாக்கினர்.
பட்டப்பகலில் மாணவர்கள் அரிவாளுடன் மோதிக்கொண்ட சம்பவத்தால் பட்டரவாக்கம் ரயில் நிலையம் பரபரப்புடன் காணப்பட்டது.
இதைத் தொடர்ந்து, காயம் அடைந்துள்ள மூன்று மாணவர்களும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். பெரியளவில் அவர்களுக்கு காயம் ஏற்படவில்லை. ஆயுதங்களுடன் வந்த மாணவர்கள் யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
சமீபத்தில், பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் கத்தி, அரிவாள்களுடன் ரயிலில் பயணம் செய்திருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.