உசிலம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளி ஒன்றில் தலித் பெண் சமைத்த காலை உணவை மாணவர்கள் சாப்பிட மறுத்த நிகழ்வு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அந்த பள்ளிக்கு வந்த தி.மு.க எம்.பி கனிமொழி மாணவர்களுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டார்.
தமிழ்நாட்டில் அரசு தொடக்கப் பள்ளிகளில் முதல் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்கு காலை உணவு இலவசமாக வழங்கப்படுகிறது. முதலமைச்சரின் கால உணவுத் திட்டம் மக்கள் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இந்நிலையில், முதலமைச்சரின் கால உணவுத் திட்டத்தில் உசிலம்பட்டியில் உள்ள அரசு தொடக்கப் பள்ளியில் சமையற்காரராக சுயஉதவிக்குழு உறுப்பினர் முனியசெல்வி என்ற தலித் பெண் நியமிக்கப்பட்டார்.
காலை உணவுத் திட்டத்திற்காக அளிக்கப்பட்ட உணவு பொருட்கள் பள்ளியில் அதிகமாக கையிருப்பு இருப்பது குறித்து முனியசெல்வியிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது, 11 மாணவர்களில் 9 பேர், தான் சமைத்த காலை உணவை சாதி காரணமாக சாப்பிடக் கூடாது என்று மாணவர்களின் பெற்றோர் கூறியதால் மாணவர்கள் சாப்பிட மறுத்ததாக அவர் கூறினார்.
“நான் மகளிர் சுயஉதவிக் குழுவில் உறுப்பினராக இருக்கிறேன். ஆனால், அவர்கள் இப்போது என்னைத் தவிர்க்கிறார்கள், நான் சமைத்த உணவை சாப்பிட்டால் கிராமத்தை விட்டு வெளியே அனுப்பிவிடுவார்கள் என்று ஒரு மாணவி கூறியதை நான் கேள்விப்பட்டேன். மாணவர்கள் சாப்பிட தயாராக உள்ளனர். ஆனால், பெற்றோர்கள், அவர்களை அனுமதிக்கவில்லை” என்று கூறினார்.
இந்த விவகாரத்தில், மாணவிகளை சாப்பிட கட்டாயப்படுத்த விரும்பாததால், இந்த பிரச்சினையை அதிகாரிகளிடம் முன்பு தெரிவிக்கவில்லை என்று அந்த பெண் கூறினார். அவரிடம் கண்காணிப்பு அதிகாரிகள் விசாரணை நடத்தியபோதுதான் அவரது நிலைமை தெரியவந்தது.
இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளும், காவல்துறையினரும் சேர்ந்து பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். பின்னர், மாவட்ட ஆட்சியர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
இந்நிலையில், திமுக எம்பி கனிமொழி, மாநில அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில் ராஜ் ஆகியோர் அரசுப் பள்ளிக்குச் சென்று குழந்தைகளுடன் காலை உணவை சாப்பிட்டனர்.
இது குறித்து அமைச்சர் கிதா ஜீவன் தனது எக்ஸ் பக்கத்தில், தி.மு.க எம்.பி கனிமொழி உடன் அந்த பள்ளிக்கு சென்று மாணவர்கள் உடன் காலை உணவு சாப்பிட்ட புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார். அதில், “தூத்துக்குடி மாவட்டம் - எட்டையபுரம் அருகே உள்ள உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளிக்கு இன்று கழக துணைப் பொதுச் செயலாளர் கனிமொழி எம்பி. அவர்களுடன் சென்று, அங்கு பயிலும் குழந்தைகளுக்கு காலை உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் அமர்ந்து உணவருந்தியபோது. உடன் மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் இஆப., விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன், தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி உள்ளிட்டோர்” இருக்கும் புகைப்படஞக்ளைப் பகிர்ந்துள்ளார்.
இந்த மாத தொடக்கத்தில், கரூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் தலித் பெண் ஒருவர் சமைத்த உணவை, 15 மாணவர்கள் சாப்பிட மறுத்துவிட்டனர். மாவட்ட ஆட்சியர் பள்ளிக்குச் சென்று ஜாதிப் பாகுபாடு காட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என பெற்றோரை எச்சரித்தார்.
தமிழகத்தில் உள்ள தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு அவர்களின் படிப்புக்கு உதவும் வகையில் சத்தான காலை உணவு வழங்கும் வகையில், முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் பயிலும் 15.75 லட்சம் மாணவர்களுக்கு இலவச காலை உணவை வழங்கப்படுகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“