எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் பங்கேற்க விதிக்கப்பட்ட தடையை உறுதி செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு விழாக்களில், மாணவர்கள் பங்கேற்க தடை விதிக்க கேட்டு, மாற்றம் இந்தியா அமைப்பின் இயக்குனர் நாராயணன் தொடர்ந்த வழக்கில், அரசு நிகழ்ச்சியில் மாணவர்களை பங்கேற்க தடை விதித்து நேற்று நீதிபதிகள் எஸ்.வைதியநாதன், ஆர்.சுப்பிரமணியம் அமர்வு உத்தரவிட்டனர். இதனால், எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவுக்கு மாணவர்களை அழைத்து செல்ல தடை ஏற்பட்டதால், அந்த தடையை நீக்க கோரி தமிழக அரசு நேற்று மாலையை அவசர அவசரமாக பதில் மனு தாக்கல் செய்தது. இதனை அடுத்து வழக்கின் விசாரணை இன்றைக்கு எடுத்துக் கொள்வதாக நீதிபதிகள் அனுமதி அளித்தனர்.
இதனை அடுத்து இந்த வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி வாதிட்டார். அப்போது நீதிபதிகள் அரசுக்கு எதிராக, கடுமையான கருத்துக்களை தெரிவித்தனர். ஒரு கட்டத்தில், சேலத்தில் நடக்கும் நிகழ்ச்சியிலாவது, மாணவர்களை பங்கேற்கச் செய்யும் வகையில் விதிமுறைகளை வகுத்து, அனுமதிக்க வேண்டும் என்று அரசு தரப்பில் வேண்டுகோள் விடுத்தது.
நீதிமன்றத்தில் நடந்த வாதங்கள்:
நீதிபதிகள்:- நிகழ்ச்சியில் பேசும்போது மாணவர்களை ஊக்குவிக்கும் விதமான பேச்சுகள் எதுவும் இல்லை. பெருமையை பேசுவதுதான் உங்கள் நோக்கமாக இருக்கிறது. மாணவர்கள் படும் கஷ்டம் உங்களுக்கு தெரிவதில்லை. பள்ளி வேலை நேரத்தில் பிரிட்டன் ராணியும், பிரதமர் வந்தாலும் கூட மாணவர்களை பள்ளியை விட்டு அழைத்து செல்ல அதிகாரம் இல்லை. 2 மணி நேர நிகழ்ச்சியில் மாணவர்கள் பங்கேற்கும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்கும். மாணவர்களை அழைத்து செல்ல அரசு உத்தரவு ஏதும் இருக்கா? சிபிஎஸ்இ.மாணவர்களை ஏன் இந்த விழாவில் அனுமக்கவில்லை? அவர்களுக்கு எம்ஜிஆர் பற்றி தெரிய வேண்டாமா? சனிக்கிழமை தோறும் பள்ளிகளில் மின்னனு முறையில் நிகழ்ச்சிகள் நடத்தலாமே?
விவேகானந்தர் தற்போது உரையாற்றினால் கூட 100 பேர் அதை கேட்க வர மாட்டார்கள். சில ஆசியர்களால் அனைத்து மாணவர்களையும் எப்படி கட்டுப்படுத்த முடியும்? எத்தனை மணி நேரம் நடந்தாலும் 10 நிமிடத்திற்கு மேல் மாணவர்கள் கவனிக்க மாட்டார்கள். மாணவர்களை கட்டாயப்படுத்தி நிகழ்ச்சியில் பங்கேற்க வைக்கப் படுகின்றனர். மாணவர்கள் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுவது பெற்றோர்களுக்கு தெரிவிக்கப்படுகிறா?
சிபிஎஸ்இ பாடத்திடத்தை ஒப்பிடும்போது, மாநில பாடத்திட்டம் தரம் குறைவாக உள்ளதே. அதை மேம்படுத்த அரசு நடவடிக்கை எடுக்கலாமே.
அரசு வழக்கறிஞர்:- அரசு பாடத்திட்டத்தை மேம்படுத்த குழு அமைத்துள்ளது.
நீதிபதிகள்:- அதை முடிக்க 50 வருடம் ஆகுமே. சிபிஎஸ்இ ஆசிரியர்களை விட, அரசு பள்ளி ஆசிரியர்கள் அதிக சம்பளம் வாங்குகிறார்கள். கொண்டாட்டம் என்று சொல்கிறீர்கள். அதற்கு இலவசமாக புத்தகம், லேப்டாப், சீருடை வழங்கலாமே? தடை விதித்த ஒரு மணி நேரத்தில் பதில் மனு தாக்கல் செய்து இந்த வழக்கை விசாரிப்பதற்கு என்ன அவசரம் உள்ளது?
சேலம் மாவட்டத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் அதை சுற்றியுள்ள கிராமங்கள் மற்றும் மலை கிராமங்களில் 130 கிலோ மீட்டர் தொலைவில் இருந்து வருவது மாணவர்களுக்கு எவ்வளவு சிரமமாக இருக்கும்? இது கல்வி சார்ந்த நிகழ்ச்சி கிடையாது.
அரசு வழக்கறிஞர்:- மாணவர்களுக்கு உத்வேகம் அளிக்கக் கூடிய வகையில் தாம் நிகழ்ச்சிக்கு அழைத்து செல்லப்படுகிறார்கள். மாணவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து தரப்படுகிறது.
மாணவர்களுக்கு பயனுள்ள தகவல்கள் மட்டுமே இதில் வழங்கப்படுகிறது. மாணவர்களுக்கு பயன்பெறும் இந்த நிகழ்ச்சியை ஏன் நிறுத்த வேண்டும். இந்த நிகழ்ச்சியில் கட்டாயமாக பங்கேற்க வேண்டும் என எந்த அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட வில்லை. இந்த நிகழ்ச்சிக்கு விதிமுறைகளை நீதிமன்றம் வகுக்க விரும்பினால் வகுக்கலாம். அப்போது, நூற்றாண்டு விழா வீடியோ அரசு மற்றும் மனுதாரர் தரப்பில் நீதிபதிகளுக்கு காண்பிக்கப்பட்டது.
அரசு வழக்கறிஞர்:- மாணவர்கள் காலையில் 10 மணி முதல் 12 மணி வரை நடைபெறும் நிகழ்ச்சியில் மட்டுமே கலந்து கொள்கின்றனர்.
மனுதாரர்:- மாணவர்கள் ஊக்குவிப்பு தொடர் நடவடிக்கையாக இருக்க வேண்டும். ஆனால்,
அந்த நிகழ்ச்சி நடக்கும் இடத்தில் அரசியல் தலைவர்களின் பேனர்கள் வைக்கப்படுகின்றன. இது மாணவர்கள் மத்தியில் அரசியல் சூழ்நிலைதான் ஏற்படுத்தும்.
அரசு வழக்கறிஞர்:- சேலம் நிகழ்ச்சிக்கு மட்டும் மாணவர்களை அனுமதிக்க விதிகளை வகுக்க வேண்டும். அதற்கு பிறகு இந்த வழக்கின் விரிவான உத்தரவு வரும்வரை மற்ற நிகழ்ச்சிகளை தள்ளி வைத்து கொள்கிறோம்.
இவ்வாறு விவாதம் நடைபெற்றது.
நீதிபதிகள் மாலை தீர்ப்பளிப்பதாக கூறி வழக்கை ஒத்தி வைத்தனர். மாலையில் வழங்கிய தீர்ப்பின் விபரம் வருமாறு:
மாணவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டும் உரைகள் மற்றும் ஊக்குவிக்கும் நிகழ்ச்சிகள் அரச நடத்த கூடாது என்று கூற முடியாது. அதே சமயம், நிகழ்ச்சி நடத்தப்படும் இடங்களுக்கு மாணவர்களை அழைத்து செல்லும் விதத்தின் மீது தான் நீதிமன்றம் அக்கறை கொண்டுள்ளது. இதில் இருக்க கூடிய ஆபத்துகளை புறம் தள்ளிவிட முடியாது. வரும் 30-ம் தேதி சேலத்தில் நடக்கவிருக்கும் நிகழ்ச்சியின் அழைப்பிதழை கேட்டும் அரசு தலைமை வழக்குரைஞர் நீதிமன்றத்தில் சமர்பிக்கவில்லை. இந்த நிமிடம் வரை நிகழ்ச்சி நிரல் வழங்கப்படவில்லை. ஆகவே, தடையை நீக்குவதற்கு எந்த ஒரு காரணத்தையும் இந்நீதிமன்றம் காணவில்லை.
கலாச்சார நிகழ்ச்சிகளில் கலந்துக்கொள்ளவும், பரிசு பெறவும் இந்நிகழ்ச்சியில் கலந்துக்கொள்ளலாம். அவர்களுடன் பெற்றோரும் நண்பர்களும் செல்வதை தடுக்க கூடாது. சீருடையில் பள்ளி மாணவர்களை கட்டாயம் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்பதை தான் தடை செய்கின்றேம். பொது நிகழ்ச்சிகளில் பள்ளி மாணவர்களை பங்கேற்க செய்வது தொடர்பாக பள்ளி கல்வி துறை, காவல்துறை, பள்ளி நிர்வாகம் ஆகியோருக்கு விதிமுறை வகுப்பது தொடர்பான வழக்கின் விசாரணை பொங்கல் (2018) விடுமுறைக்கு பின் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அதே சமயம் பள்ளிக்கு வெளியே நடைபெறும் அரசு மற்றும் பொது நிகழ்ச்சிகளில் மாணவர்களை பங்கேற்பதை கட்டாயமாக்க கூடாது என நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.