/indian-express-tamil/media/media_files/2025/07/13/ranjith-2025-07-13-17-22-22.jpg)
பா.ரஞ்சித்தின் 'வேட்டுவம்' படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் மரணம்: போலீசார் விசாரணை
விக்ரம் நடிப்பில் வெளியான 'தங்கலான்' படத்தைத் தொடர்ந்து இயக்குநர் பா.ரஞ்சித் தற்போது 'வேட்டுவம்' படத்தை இயக்கி வருகிறார். நீலம் புரொடக்சன் தயாரிக்கும் இந்தப் படத்தில் ஆர்யா, தினேஷ் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தமிழகத்தின் பல இடங்களில் மும்முரமாக நடந்து வருகிறது. அந்த வகையில், கடந்த 10-ந்தேதி முதல் நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் அருகே விழுந்தமாவடி கிராமத்தில் அமைந்துள்ள அளப்பகுதியில் இந்தப் படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இந்தப் படத்தில் காஞ்சிபுரம் மாவட்டம் பூங்கண்டம், செல்லியம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த செல்வராஜ் மகன் மோகன்ராஜ் என்பவர் ஸ்டண்ட் மாஸ்டராக பணியாற்றி வந்தார். இந்நிலையில் இன்று சண்டைக் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது, காரிலிருந்து குதிக்கும்போது மோகன்ராஜ் தவறி விழுந்ததில் அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. உடனடியாக அவரை சக கலைஞர்கள் மீட்டு, நாகப்பட்டினம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே அவர் உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதையடுத்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக கீழையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். படப்பிடிப்பில் ஸ்டண்ட் மாஸ்டர் உயிரிழந்த சம்பவம் திரைக் கலைஞர்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இப்படத்தின் ஷூட்டிங் நாகை மாவட்டம் பகுதியில் நடந்து வந்த நிலையில், இந்த சோகம் அரங்கேறியுள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக இந்த வேட்டுவம் திரைப்படத்தின் ஷூட்டிங் தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டுள்ளது. ஸ்டண்ட் மாஸ்டர் மோகன்ராஜின் உயிரிழப்பு படக்குழுவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.