திருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா? குஷ்பூ ஆதரவாளர்கள் கண்டனம்

திருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா? என குஷ்பூ ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சியில் புகைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது.

திருநாவுக்கரசர் இப்படி வசை பாடலாமா? என குஷ்பூ ஆதரவாளர்கள் கண்டனம் தெரிவித்தனர். இது காங்கிரஸ் கட்சியில் புகைச்சலை அதிகப்படுத்தியிருக்கிறது.

திருநாவுக்கரசர் – குஷ்பூ இடையிலான மோதல் காங்கிரஸ் கட்சியில் ஹாட் டாக்! காங்கிரஸ் கட்சியின் தேசிய செய்தி தொடர்பாளரான குஷ்பூ ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், ‘திருநாவுக்கரசரை 2 மாதங்களில் மாநிலத் தலைவர் பதவியில் இருந்து அகில இந்தியத் தலைமை மாற்றிவிடும்’ என கூறியிருந்தார்.

திருநாவுக்கரசர், கட்சிப் பொதுக்கூட்டம் ஒன்றில் இதற்கு காரசாரமாக பதில் அளித்தார். ‘திமுக.வில் இருந்து அழுகிய முட்டை, செருப்பால் அடித்து விரட்டப்பட்டவர் குஷ்பூ. காங்கிரஸிலும் அப்படி ஒரு நிலையை ஏற்படுத்திவிட வேண்டாம்’ என எச்சரிக்கை விடுத்தார் திருநாவுக்கரசர். குஷ்பூவின் பேட்டி குறித்து சென்னை விமான நிலையத்தில் பத்திரிகையாளர்கள் கருத்து கேட்டபோது, ‘லூசுத்தனமான கருத்துகளுக்கு பதில் சொல்ல முடியாது’ என பாய்ந்தார் அரசர்.

திருநாவுக்கரசரின் இந்த சாடல்களுக்கு குஷ்பூ ஆதரவாளர்கள் பதிலடி கொடுத்திருக்கிறார்கள். இது தொடர்பாக தமிழக காங்கிரஸ் சிறுபான்மை பிரிவு மாநில ஒருங்கிணைப்பாளர் முகமது இஸ்மாயில், காஞ்சீபுரம் வடக்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் பொதுச் செயலாளர் மணிகண்டன், காஞ்சீபுரம் தெற்கு மாவட்ட சிறுபான்மை துறை மாவட்ட தலைவர் அப்துல் ரஜாக் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:

‘அகில இந்திய காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் குஷ்பு சமீபத்தில் அளித்த பேட்டி சம்மந்தமாக காஞ்சீபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டத்தில் மாநில தலைவர் திருநாவுக்கரசர் நாகரீகமில்லாத மிகவும் தரக்குறைவான கடுமையான வார்த்தைகளால் குஷ்புவை பேசியுள்ளார். தனது தகுதியை மறந்து பேசியுள்ளார்.

பெண்களை தெய்வமாக போற்றும் நமது நாட்டில் பெண்களைப் பற்றி கீழ்த்தரமான வார்த்தைகளால் பேசுவது இரும்பு மங்கை எனப்போற்றப்படும் இந்திரா காந்தியின் உருவமாக காங்கிரசாரால் கொண்டாடப்படும் சோனியா காந்தியின் வழிகாட்டுதலால் நடைபெற்றுக் கொண்டிருக்கும் காங்கிரஸ் பேரியக்கத்திற்கு இழுக்கு என்பதை தாங்கள் ஏன் உணரவில்லை?

பெண்களை கேவலமாக பேசி ஜாமீன் கூட பெற முடியாமல் ஊர் ஊராக மாறு வேடத்தில் சுற்றித் திரியும் பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த எஸ்.வி. சேகரின் பேச்சுக்கும் உங்களின் பேச்சுக்கும் என்ன வித்தியாசம்? சிறுபான்மை சமுதாயத்தை தாங்கள் இழிவு படுத்துவது புதிதல்ல. தாங்கள் தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவராக வந்த பிறகு காங்கிரஸ் தலைமையகமான சத்தியமூர்த்தி பவனிலேயே அகில இந்திய மகளிர் காங்கிரஸ் செயலாளர் ஹசீனா தங்கள் முன்னிலையிலேயே தாக்கப்பட்டார்.

பெண்கள் பாதுகாப்பிற்காகவும், சிறுபான்மையினர் பாதுகாப்பிற்காகவும், போராட்டங்களும், மக்கள் இயக்கங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற இந்த காலகட்டத்தில் ஆணாதிக்க அரசியலில் தன்னாலும் சாதிக்க முடியும் என்ற மன உறுதியோடு, குறிப்பாக சிறுபான்மை சமுதாயத்திலிருந்து அரசியலுக்கு வந்து தேசிய அளவில் பதவியை பெற்று பணியாற்றி வரும் குஷ்புவை பெண் என்றும் பாராமல் தாங்கள் பேசியிருப்பது சிறுபான்மை மக்களின் மீது தாங்கள் கொண்டிருக்கும் மனநிலையை உணர்த்துகிறது.

இதை வன்மையாக கண்டிக்கிறோம். சொந்த கட்சிக்காரர்களின் சரமாரி கேள்வி கணைகளாலும், மாற்று கட்சி நண்பர்களின் ‘ஒரு கட்சித் தலைவர் இப்படி பேசலாமா?’ எனும் தொடர் கேள்வியாலும் இக்கோரிக்கையை வைக்கிறோம்.

ராகுலின் கரத்தை வலுப்படுத்தி ராகுலால் நியமிக்கப்பட்ட எங்கள் மாநில தலைவர் உங்கள் தலைமையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி வீறு கொண்டு எழ ராகுலால் நியமிக்கப்பட்ட குஷ்புவை நீங்கள் மதித்து பேசும் பேச்சு ராகுலை பெருமை படுத்தும் என்பது மட்டும் நிச்சயம்.’ இவ்வாறு அவர்கள் அறிக்கையில் கூறியிருக்கிறார்கள்.

 

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Tamilnadu news in Tamil.

×Close
×Close