தமிழ் கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்றும் முயற்சியைத் தடுக்க தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் வெளியிட்டுள்ளார்.
பல ஆண்டுகால போராட்டம், மற்றும் நீதிமன்ற உத்தரவின் பேரில் கொண்டுவரப்பட்ட தமிழ்கல்வெட்டுகளை மீண்டும் மைசூருக்கு மாற்ற திரைமறைவு பணிகள் துவங்கிவிட்டன.
— Su Venkatesan MP (@SuVe4Madurai) November 14, 2024
இதனை தடுக்க தமிழக அரசு அனைத்து முயற்சியும் செய்ய வேண்டும்.
சரஸ்வதி நாகரிகம் என்றால் கோடிகளை அள்ளித்தருவார்கள். தமிழ்நாகரிகம்… pic.twitter.com/2kiJTJmZAi
அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, “தமிழ்நாட்டு மக்களின் பெரும்வரலாற்று ஆவணங்களாகிய கல்வெட்டுகள் ஆங்கிலேயர்களின் காலத்திலிருந்து மைப்படி எடுக்கப்பட்டன. அந்த மைப்படிகள் 1961-ம் ஆண்டுவாக்கில் மைசூருக்கு மாற்றப்பட்டு, அங்குள்ள அலுவலகத்தில் வைக்கப்பட்டன. அவை பராமரிப்பு இன்றியும், தமிழ்நாட்டு மாணவர்கள் ஆய்வுக்குகூட அணுகமுடியாத நிலையிலும் இருந்தன. எனவே, அவற்றைத் தமிழ்நாட்டுக்குக் கொண்டுவரவேண்டும் என்று தமிழ் ஆர்வலர்கள் தொடர்ந்து குரல்கொடுத்தோம்.
கடந்த 2021-ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை நீதியரசாக இருந்த கிருபாகரன் அமர்வு மைசூரில் சிதைந்துக்கொண்டிருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளை தமிழ்நாட்டுக்கு கொண்டு வந்து பாதுகாக்குமாறு தீர்ப்பளித்தது. அதனைத் தொடர்ந்து 2022 நவம்பர் மாதத்தில் மைசூரில் இருந்த தமிழ் கல்வெட்டு மைப்படிகளில் பாதியளவுக்கும் குறைவான படிகள் சென்னை புனித ஜார்ஜ் கோட்டையின் இந்திய தொல்லியல் துறை அலுவலகத்திற்கு வந்து சேர்ந்தன.
தற்பொழுது, "பராமரிக்க முடியாத தட்பவெப்ப சூழ்நிலை, கட்டிடம் இன்மை" என்று காரணங்கள்கூறி அவற்றை மீண்டும் மைசூருக்கே மாற்றுவதற்கான முயற்சி திரைமறைவில் தொடங்கிவிட்டது. இதை தடுக்கத் தவறினால் இவ்வளவு காலமும் எடுத்த முயற்சிகள் அனைத்தும் பலனற்றுப் போகும்.
எனவே இந்தப் பிரதிகளைப் பாதுகாக்கும் பொறுப்பைக் கேட்டுப்பெற தமிழ்நாடு அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இன்றுவரை மின்னுருவாக்கம் செய்யப்படாமல் இருக்கும் இந்தப் பிரதிகளை மின்னுருவாக்கம் செய்யும் பொறுப்பையும் தமிழ்நாடு அரசு ஏற்க வேண்டும்.
சரஸ்வதி நாகரிக ஆய்வுக்கு எத்தனை கோடி ரூபாயையும் ஒதுக்கத் தயங்காத ஒன்றிய அரசு, தமிழ்க் கல்வெட்டுகளைப் பாதுகாக்க நல்ல கட்டிடங்களை உருவாக்கவோ, மின்னுருவாக்கவோ எந்த நிதியும் ஒதுக்கத் தயாராக இல்லாத நிலை தொடர்கிறது.
நமது சான்றாவணங்களை நமது வரலாற்றுக்கும் தத்துவத்துக்கும் எதிரானவர்கள் பாதுகாப்பார்கள் என்று நம்புவது அறியாமை. எனவே, கல்வெட்டுகள் என்னும் நமது காலப்பெட்டகத்தை நாமே பாதுகாப்போம்.” என்று சு.வெங்கடேசன் எம்.பி தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.