மதுரை நாடாளுமன்ற தொகுதியின் உறுப்பினரான சு. வெங்கடேசன் நெஞ்சுவலி காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24-வது மாநில மாநாடு விழுப்புரத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3-ஆம் தேதி தொடங்கிய இந்த மாநாடு இன்றுடன் நிறைவுபெறுகிறது.
இந்த மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக சென்ற போது சு. வெங்கடேசனுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து, விழுப்புரம் - திருச்சி நெடுஞ்சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அனுமதிக்கப்பட்டார்.
அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அச்சம் கொள்ளும் அளவிற்கு பிரச்சனை இல்லை எனவும், ஒரு மணி நேரத்தில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சு.வெங்கடேசனை மாவட்ட ஆட்சியர் பழனி, கூடுதல் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் ஆகியோர் சந்தித்து நலம் விசாரித்தனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் எம்.பி. சு.வெங்கடேசன், தன்னை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நலன் சீராக இருப்பதை உறுதி செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
இது குறித்து மதுரை எம்.பி. சு. வெங்கடேசன் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது: “இன்று காலையில் எனது உடல்நலக்குறைவு ஏற்பட்டதும் உடனடியாகத் தோழர்கள் என்னை மருத்துவமனையில் அனுமதித்தனர்.
என்னை முழுமையாகப் பரிசோதித்த மருத்துவர்கள் உடல்நலன் சீராக இருப்பதை உறுதி செய்தனர்.
இச்செய்தியை அறிந்து அக்கறையுடன் அலைபேசி வாயிலாக நலம் விசாரித்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
மருத்துவமனைக்கு நேரில் வந்து நலம் விசாரித்த அமைச்சர்கள் பொன்முடி, சி.வெ. கணேசன், முன்னாள் எம்.பி. கௌதம சிகாமணி, அன்னியூர் சிவா எம்.எல்.ஏ மற்றும் விழுப்புரம் ஆட்சியர், தொலைபேசியில் அழைத்த அமைச்சர் பி.மூர்த்தி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தோழர்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.