திருப்பூரில், தந்தை-மகன்கள் தகராறை விசாரிக்கச் சென்ற போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர், தலை துண்டித்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரைச் சேர்ந்த மூர்த்தி (65) மற்றும் அவரது மகன்கள் மணிகண்டன் (30), தங்கபாண்டி (25) ஆகியோர் உடுமலை அருகே உள்ள சிக்கனூத்து கிராமத்தில் உள்ள தென்னந்தோப்பைப் பராமரித்து வந்தனர்.
இந்த தோட்டம், மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ. மகேந்திரனுக்குச் சொந்தமானது. கடந்த சில நாட்களுக்கு முன், மூர்த்தியின் மகன்களான மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி ஆகியோரிடையே குடும்பப் பிரச்சினை காரணமாக வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில், ஆத்திரமடைந்த மூத்த மகன் மணிகண்டன், தந்தை மூர்த்தியைத் தாக்கியுள்ளார். இதில் காயமடைந்த மூர்த்தி, காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்குத் தொடர்பு கொண்டு, தனது மகன்கள் தன்னைக் கொல்ல முயற்சிப்பதாகத் தகவல் அளித்துள்ளார்.
இதையடுத்து, ரோந்துப் பணியில் இருந்த சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேல் (57) மற்றும் போலீஸ்காரர் அழகுராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அங்கு தந்தை மற்றும் மகன்களிடம் விசாரணை நடத்தி அவர்களை சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால், அவர்கள் காவல்துறையின் பேச்சைக் கேட்காமல், “இது எங்கள் குடும்பப் பிரச்சினை, இதில் தலையிட உங்களுக்கு என்ன உரிமை?” என்று வாக்குவாதம் செய்தனர்.
அப்போது, ஆத்திரமடைந்த மணிகண்டன், அங்கிருந்த அரிவாளை எடுத்து அனைவரையும் வெட்ட முயன்றார். இதைக் கண்டு பயந்துபோன போலீஸ்காரர் அழகுராஜ் உட்பட நான்கு பேர் அங்கிருந்து தப்பி ஓடினர். ஆனால், தப்பிக்க முயன்ற சப்-இன்ஸ்பெக்டர் சண்முகவேலை அரிவாளால் வெட்டி, அவரது தலையைத் துண்டித்துக் கொடூரமாகக் கொலை செய்தார் மணிகண்டன்.
இந்தக் கொடூரச் சம்பவம் குறித்து தகவல் அறிந்த காவல்துறை, கொலையாளிகளான மூர்த்தி, மணிகண்டன் மற்றும் தங்கபாண்டி ஆகியோரைத் தேடத் தொடங்கியது. கொலை, கொலை முயற்சி, பொதுச் சொத்து சேதம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவர்களைப் பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.
இதற்கிடையில், மூர்த்தி மற்றும் தங்கபாண்டி ஆகியோர் திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் சரணடைந்தனர். ஆனால், முக்கியக் குற்றவாளியான மணிகண்டனை காவல்துறை தீவிரமாகத் தேடி வந்தது. கைது செய்ய முயன்றபோது, அவர் காவல்துறையினரை அரிவாளால் வெட்டிவிட்டுத் தப்ப முயன்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, போலீசார் மணிகண்டனை என்கவுண்டர் செய்தனர். என்கவுண்டரில் மணிகண்டன் உயிரிழந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.