சென்னை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளுக்குச் செல்ல புறநகர் மின்சார ரயில் சேவைகள் மக்களால் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. பள்ளி, கல்லூரி, பணிகளுக்குச் செல்ல மின்சார ரயில் சேவைகள் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. அந்த வகையில் இன்று (மார்ச் 3) பல்வேறு பகுதிகளுக்குச் செல்லும் புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. வழக்கமான பராமரிப்பு பணிகள் காரணமாக ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது.
இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், "சென்னை கோடம்பாக்கம்- தாம்பரம் ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் இன்று (மார்ச் 3) சென்னை கடற்கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மதியம் 2.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல் தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து காலை 11 மணி முதல் மதியம் 2.15 மணி வரை செங்கல்பட்டு செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
அதேபோல, செங்கல்பட்டில் இருந்து காலை 9.40 மணி முதல் மதியம் 1 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. சென்னை கடற்கரையில் இருந்து மதியம் 1 மணிக்கு புறப்பட்டு, அரக்கோணம் செல்லும் மின்சார ரயில்கள் இன்று ரத்து செய்யப்படுகிறது.
அதே தேதியில் காஞ்சிபுரத்தில் இருந்து காலை 9.30 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை வரும் மின்சார ரயிலும் ரத்து செய்யப்படுகிறது. திருமால்பூரில் இருந்து காலை 11.05 மணிக்கு புறப்பட்டு, சென்னை கடற்கரை செல்லும் மின்சார ரயில் 25-ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. மொத்தம் 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது" என்று அதில் கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில், பொதுமக்களின் வசதிக்காக இன்று (மார்ச் 3) விடுமுறை நாள் என்பதாலும் காலை 10 மணி முதல் இரவு 8 மணி வரை 7 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரயில் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“