வேல்முருகன் தலைமையிலான தமிழக வாழ்வுரிமைக் கட்சியுடன் பச்சைத் தமிழகம் கட்சியை இணைப்பதாக சுப. உதயகுமாரன் அறிவித்துள்ளார்.
இதுதொடர்பாக சுப. உதயகுமாரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்து இருப்பதாவது;
பச்சைத் தமிழகம் கட்சி தோழர் தி. வேல்முருகன் தலைமையில் இயங்கும் தமிழக வாழ்வுரிமைக் கட்சியில் இணைந்து தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுக்க முடிவு செய்திருக்கிறது!
கூடங்குளம் அணு உலைக்கு எதிராக ஏறத்தாழ மூன்றாண்டு காலம் நீடித்த இடிந்தகரை போராட்டத்தைத் தொடர்ந்து, தமிழ்நாடெங்கும் தமிழர்களை ஆபத்துக்குள் தள்ளும் அழிவுத் திட்டங்களை எதிர்க்கவும், தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கவும், பசுமை அரசியலை முன்னெடுக்கவுமாக, கடந்த பிப்ரவரி 15, 2015 அன்று பச்சைத் தமிழகம் இயக்கத்தைத் தொடங்கினோம்.
பின்னர் டிசம்பர் 10, 2015 அன்று இயக்கத்தை அரசியல் கட்சியாக மாற்றி, 2016-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் முறைப்படி பதிவுசெய்து களமாடினோம்.
கடந்த எட்டு ஆண்டுகளாக ஓர் அரசியல் கட்சியாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டோம். ஆனாலும் தமிழ்நாட்டின் ஒரு சில இடங்களில் மட்டும் ஒரு சிறு கட்சியாக தனித்து இயங்கி எந்தவிதமான பெரும் மாற்றத்தையும் கொண்டுவர இயலாது என்பதை உணர்கிறோம்.
அதேபோல, தமிழ் தேசிய அரசியல் கட்சிகள் மற்றும் ஆளுமைகள் மற்றவர்களோடு கைகோர்த்து இயங்காமல் தனித்தே நின்று தவறு செய்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டும் நீண்டகாலமாக இருந்து வருகிறது.
இவ்விரண்டு குறைகளையும் களைந்திடும் பொருட்டு, ஒத்தக் கருத்துடைய இயக்கங்களோடு கைகோர்த்துக் களமாடுவது என்று பச்சைத் தமிழகம் கட்சித் தோழர்கள் முடிவு செய்திருக்கிறோம்.
தமிழ்நாடு நான்கு மாபெரும் ஆபத்துக்களை எதிர்கொண்டு நிற்கிறது. ஒருபுறம், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க போன்ற பாசிச சக்திகள் தமிழர்களை எப்படியாவது அடிமைப்படுத்தி, தங்களின் சனாதனத்தையும், வருணாசிரம (அ)தர்மத்தையும் நம் மீது திணித்து, நம்மை அடக்கியாள அனைத்து விதமான தகிடுதத்தங்களையும் செய்து வருகின்றன.
இன்னொருபுறம், திராவிடக் கட்சிகள் இன்னொரு மாதிரியான சனாதனத்தை நம் மீது திணிக்கின்றன. ஒரு கோட்பாடு இன்று ஒரு குடும்பமாகவும், ஒரு கும்பலாகவும், அவர்களுக்கிடையே நடக்கும் அதிகாரச் சண்டையாகவும் சுருக்கப்பட்டிருக்கிறது. தனது குடும்பத்தை வறுமையிலும், அனாதரவாகவும் விட்டுச்சென்ற அறிஞர் அண்ணாவின் வழித்தோன்றல்கள் என்று சொல்லிக்கொள்ளும் திராவிடக் கட்சிகளின் பெருந்தலைவர்கள் அனைவரும் கோடி கோடியாகச் சம்பாதித்து, குறுநிலமன்னர்கள் போல வாழ்கின்றனர். திராவிடத்தின் சிறுதலைவர்கள் பலரும்கூட சிற்றரசர்களாகவே வாழ்கின்றனர். பகுத்தறிவு, பார்ப்பனீய எதிர்ப்பு, சுயமரியாதை போன்ற முற்போக்குக் கொள்கைகள் அனைத்தையும் கைவிட்டுவிட்ட திராவிடக் கட்சிகள் தமிழர்களின் அடிப்படை அடையாளங்களையே அழித்து, அரசியல் ஈடுபாடுகளைக் குழப்பி, ஒரு திசைதிருப்பல் அரசியலில் ஈடுபட்டு வருகின்றன.
ஆரிய அடிமைத்தனம் மற்றும் திராவிடத் திசைதிருப்பல் போலவே, மற்றொரு புறம் வாழ்வழிக்கும் வளக்கொள்ளை தமிழகம் முழுவதும் தங்குதடையின்றி நடந்து வருகிறது. செம்மண், ஆற்றுமணல், கடல்மணல், கல் குவாரிகள் நாடெங்கும் இயங்கி நம் நல்வாழ்வின் அடிப்படைகளையே தகர்த்துக் கொண்டிருக்கின்றன.
சேலம் மற்றும் திருவண்ணாமலை மாவட்டங்களில் இரும்புத் தாது, மதுரை மேலூர் பகுதியில் டங்ஸ்டன், குமரியில் அணுக்கனிமங்கள், சாத்தான்குளம் பகுதியில் தேரிமண் கொண்டிருக்கும் டைட்டானியம், காவிரி டெல்டா மாவட்டங்களில் (திட, திரவ, வாயு வடிவிலான) ஹைட்ரோகார்பன், குமரிக் கடலில் எண்ணெய், எரிவாயு என ஒட்டுமொத்த தமிழ்நாட்டையும் கபளீகரம் செய்யும் திட்டங்கள் நம் மீது ஏவப்படுகின்றன.
நீர்நிலைகள் ஆக்கிரமிப்பு, மீனவர்களை கடலோரத்திலிருந்து வெளியேற்றுதல், அபாயகரமான வேதியியல் தொழிற்சாலைகள் நிறுவுதல், கட்டற்ற வெளிமாநிலத்தவர் வருகை என தமிழர் நாம் எதிர்கொள்ளும் பிரச்சினைகளின் பட்டியல் மிக நீளமானது.
ஒன்றிய அரசு தமிழர் எதிர்ப்பு மனநிலையில் இருக்கும்போது, மாநில அரசும் நமக்கானதாக இல்லை. ஒரு குறிப்பிட்டத் திட்டத்தை எதிர்க்கிற மாநில அரசு மற்றத் திட்டங்களில் நிலைப்பாடு எடுக்க மறுக்கிறது. பரந்தூர், மேல்மா உள்ளிட்டப் பகுதிகளில் விவசாய விளைநிலங்களை அழித்து, விவசாயிகளை வஞ்சிக்கிறது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தொடர்ந்து விளைநிலங்களைக் கையகப்படுத்துவதை கண்டுகொள்ளாமல் கடந்து செல்கிறது.
வேறொருபுறத்தில் தமிழ்ப் பண்பாடுச் சிதைப்பு திட்டமிட்டு நடத்தப்படுகிறது. தமிழ் மொழி பல்வேறு துறைகளில் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது. சினிமாவைத் தவிர எந்தவொரு நுண்கலையும் தமிழ்நாட்டில் வளர்த்தெடுக்கப்படவில்லை. ஒரு தேக்கநிலையில் சிக்கித் தவிக்கும் தமிழினத்தை மேலும் சிதைக்க மதுவும், போதைப்பொருட்களும், மதவாதம் தோய்ந்த மூடநம்பிக்கைச் செயல்பாடுகளும் தாராளமாய் திறந்துவிடப்பட்டிருக்கின்றன.
இப்படியாக நாலாபுறமும் நாலாவிதமான நயவஞ்சகங்களும் நம்மைச் சூழ்ந்து நிற்கும் நிலையில், நம்முடைய தமிழ் மொழியை, தமிழ் மண்ணை, தமிழ் மக்களைக் காத்துக்கொள்ளும் பெரும் பொறுப்பும், கடமையும் நம் அனைவருக்கும் இருக்கின்றன. குறிப்பாக, தமிழ்த் தேசிய அரசியலைப் பரவலாக்கி, உண்மை, நேர்மை, உறுதி, ஒழுக்கம் போன்ற விழுமியங்களோடு அதனை முன்னெடுத்து இயங்குவது காலத்தின் கட்டாயமாக மாறியிருக்கிறது.
தமிழ்த் தேசியத்தைக் கண்டுபிடித்தவர்கள் தாங்களே, ஒட்டுமொத்த உலகத்தின் ஒரே ஸ்டாக்கிஸ்ட்களும் நாங்களே என்றெல்லாம் கதைசொல்லித் திரியும் சிலர், ஒற்றையாளாக உங்களை சுபிட்சத்துக்கு அழைத்துச் செல்கிறேன்; எனக்கு பணம் தாருங்கள்; என்னை முதல்வராக்குங்கள் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
பொய், புரட்டு, புனைகதைகள், நாடகம், நடிப்பு அனைத்தையும் புறந்தள்ளி; சாதி மதம் பாராது; சினிமாத்தனங்களைக் கைக்கொள்ளாது; தமிழர் விடிவுக்கு புதிய வழிகள் காணப் புறப்படுகிறோம்.
இனிமேல் "பச்சைத் தமிழகம் கட்சி" "பச்சைத் தமிழகம்" எனும் பெயரில் ஒரு சுற்றுச்சூழல் இயக்கமாகச் செயல்படும். "பசுந்தமிழம்" இவ்வியக்கத்தின் இதழாகத் தொடர்ந்து வெளிவரும். "இனியொரு விதி செய்வோம்" - என்றும் தமிழ், தமிழர், தமிழ்நாடு காப்போம்!
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.