Subashree death factor Banner fall case, Jayagopal arrested: பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் பேனர் விழுந்து விபத்தில் உயிரிழந்த வழக்கில், பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபாலை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர்.
பள்ளிக்கரணையில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது சாலையின் மையத்தில் வைக்கப்பட்டிருந்த பேனர் திடீரென விழுந்ததால் நிலை தடுமாறி கீழே விழுந்ததால் லாரி மோதி பலியானார். இந்த விபத்துக்கு சாலையில் அனுமதியின்றி வைக்கப்பட்ட பேனர்தான் காரணம் என்று குற்றம் சாட்டப்பட்டது. இந்த சம்பவம் தமிழகத்தில் பேனர் கலாச்சாரம் மீது பொதுமக்களின் கோபத்தை திருப்பியது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள், சினிமா நட்சத்திரங்கள் பலரும் இனி பேனர் வைக்கக் கூடாது என்று அறிவுறுத்தினர்.
விபத்தில் சுபஸ்ரீ உயிரிழப்பதற்கு காரணமான பேனர் பள்ளிகரணையில் அதிமுக நிர்வாகி ஜெயகோபால் தனது மகனின் திருமணத்துக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக வைக்கப்பட்ட பேனர் என்பதால் அவரைக் கைது செய்ய வேண்டும் என்று அரசியல் கட்சிகள் வலியுறுத்தினர். விபத்தை ஏற்படுத்திய லாரி டிரைவரும் கைது செய்யப்பட்டார். இந்த விவகாரத்தில் நீதிமன்றத்தின் தலையீட்டுக்குப் பிறகு, கடந்த 14 ஆம் தேதி ஜெயகோபால் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அனுமதியில்லாமல் வைக்கப்பட்ட பேனரை அகற்ற நடவடிக்கை எடுக்காத அப்பகுதி உதவி காவல் ஆய்வாளர், மாநகராட்சி அலுவலர்கள் ஆகியோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் பூதாகரம் ஆனதால், அதிமுக நிர்வாகி ஜெயகோபால் தலைமறைவானார். அவரைக் கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்ட பலரும் வலியுறுத்தினர். இதனைத் தொடர்ந்து தமிழக காவல்துறை ஜெயகோபாலைக் கைது செய்ய 5 தனிப்படைகளை அமைத்து வலைவீசி தேடிவந்தனர்.
இந்நிலையில், தேன்கனிக்கோட்டையில் பதுங்கியிருந்த அதிமுக நிர்வாகி ஜெயகோபால் தனிப்படை லைபோலீஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இதன் மூலம், பேனர் விழுந்து விபத்தில் சுபஸ்ரீ உயிரிழந்த வழக்கு முக்கிய கட்டத்தை அடைந்துள்ளது. ஜெயகோபால் விரைவில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.