சுபஸ்ரீ மரணம் : அதிமுக நிர்வாகி ஜெயகோபாலின் ஜாமின் மனு விசாரணை ஒத்திவைப்பு

Subasri death : பேனர் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

By: Updated: October 10, 2019, 02:47:59 PM

பேனர் விழுந்து இளம்பெண் பலியான வழக்கில் கைது செய்யப்பட்ட அதிமுக நிர்வாகி ஜெயகோபால் மற்றும் அவரது உறவினர் மேகநாதன் ஆகியோரின் ஜாமீன் மனு மீதான விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்துள்ளது.

சென்னை பள்ளிக்கரணையில் கடந்த செப்டம்பர் மாதம் இரண்டாம் தேதி சாலை நடுவே வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்து இரு சக்கர வாகனத்தில் வந்த சுபஸ்ரீ என்ற பெண் கீழே விழுந்ததில் பின்னால் வந்த லாரி ஏறி உடல் நசுங்கி பலியானார்.
இந்த சம்பவம் தொடர்பாக அதிமுக நிர்வாகி ஜெயகோபால் அவரது உறவினர் மேகநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் கடந்த 27ம் தேதி இவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். கடந்த 12 நாட்களாக சிறையில் இருக்கும் இவர்கள் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

அந்த மனுவில், தனது மகனின் திருமணத்திற்காக வாழ்த்து கூறி கட்சியினர் பேனர் வைத்ததாகவும், வேண்டுமென்றே, உள்நோக்கத்தோடு சாலையில் பேனர் வைத்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் எண்ணம் ஏதும் தங்களுக்கு இல்லை எனவும் மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் கட்சியினர் பேனர் வைத்ததற்கும் தனக்கும் எந்த தொடர்பும் இல்லை என தெரிவித்துள்ள மனுதாரர்கள், முறையான விசாரணை நடத்தாமல் காவல்துறையினர் இயந்திரத்தனமான வழக்கு பதிவு செய்துள்ளதாகவும், பெரும்பான்மையான விசாரணை முடிந்துவிட்ட நிலையில் தங்களை சிறையில் வைத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும் குறிப்பிட்டு உள்ளனர்.
இந்த மனு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் ஆஜராக இருப்பதால் கால அவகாசம் வழங்க வேண்டும் என அரசுத்தரப்பில் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதி, விசாரணையை வரும் 15ம் தேதிக்கு தள்ளிவைத்தார்.

ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரி சுபஸ்ரீயின் தந்தை வழக்கு

பேனர் விழுந்து பலியான சுபஸ்ரீ மரணத்திற்கு ஒரு கோடி ரூபாய் இழப்பீடு வழங்க கோரிய வழக்கை, நீதிபதி சத்தியநாரயணன் அமர்வில் விசாரணையில் உள்ள வழக்குடன் சேர்த்து பட்டியலிட பதிவு துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை பள்ளிகரணை பகுதியில் கடந்த மாதம் 12 ம் தேதி சாலையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த பேனர் காற்றில் பறந்து, இருசக்கர வாகனத்தில் சென்ற சுபஸ்ரீ மீது விழுந்தால் அவர் சாலையில் தடுமாறி விழுந்தார்.

இதில் பின்னால் வந்த தண்ணீர் லாரி சுபஸ்ரீ மீது ஏறியதில் அவர் சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி உயிரிழந்தார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை, பேனர் வைத்த ஜெயகோபலை12 நாட்கள் கழித்து கைது செய்தது.

இந்நிலையில், சுபஸ்ரீயின் தந்தை ரவி, தன் மகளின் மரணத்திற்கு இழப்பீடாக ஒரு கோடி ரூபாய் வழங்க அரசுக்கு உத்தரவிட கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்காத காரணத்தாலும், பேனர் வைப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தினாலும் தான் தனது மகள் இறந்து விட்டதாக குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தனது மகளின் உயிரிழப்பு தொடர்பாக சிறப்பு புலானாய்வு குழு அமைத்து விசாரிக்க உத்தரவிட வேண்டும் என்றும், சட்டவிரோதமாக பேனர் வைப்பதை தடுக்க சிறப்பு சட்டம் கொண்டு வர தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரியிருந்தார்.

இந்த மனு நீதிபதிகள் வைத்தியநாதன், சரவணன் அமர்வில் விசாரணைக்கு வந்தது, சுபஸ்ரீ உயிரிழப்பு தொடர்பான வழக்கு வேறு அமர்வில் விசாரணையில் இருக்கும் நிலையில் இந்த வழக்கில் எந்த உத்தரவையும் பிறப்பிக்க முடியாது என தெரிவித்த நீதிபதிகள், இந்த வழக்கை நீதிபதி சத்தியநாரயணன் அமர்வில் பட்டியலிட நீதிமன்ற பதிவுத்துறைக்கு உத்தரவிட்டார்.

மேலும் உயிருடன் இருப்பவர்களுக்கு பேனர் வைக்க தடை விதிப்பது தொடர்பாக நீதிமன்றம் மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்றும், பேனர் வைக்க அனுமதி கோரி விண்ணபிப்பவர்கள், அனுமதி அளிக்கும் அதிகாரிகள், அச்சிடுவோர் ஆகியோரின் ஆதார் விவரங்களை தெரிவிக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the Tamilnadu News by following us on Twitter and Facebook

Web Title:Subasri death chennai high court defers bail plea of jeyagopal

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Advertisement

விடைபெற்ற எஸ்.பி.பி.
X