தி.மு.க-வின் இணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகிய சுப்புலட்சுமி ஜெகதீசன், அ.தி.மு.க-வில் இணையப்போவதாக வெளியான தகவலுக்கு அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். மேலும், அ.தி.மு.க-வும் பா.ஜ.க-வும் தான் சேரும் அளவுக்கு தகுதியான கட்சிகள் இல்லை. பா.ஜ.க-வை விமர்சிக்கவே தான் தி.மு.க-வில் இருந்து விலகியதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில், தி.மு.க-வின் துணைப் பொதுச் செயலாளர் பதவியில் இருந்து விலகுவதாக சுப்புலட்சுமி ஜெகதீசன் அறிவித்தார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருந்த அறிக்கையில், தான் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் என விரும்புவதாகவும், ஆகஸ்ட் 29 ஆம் தேதியே விலகல் கடிதத்தை முதலமைச்சரிடம் அளித்துவிட்டதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில், அ.தி.மு.க வழக்கறிஞர் பாபு முருகவேல் இன்று மாலை தரமான சம்பவம் என்றும், தெறி மாஸ் எடப்பாடியார் என்றும் அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார். இந்த ட்வீட்டை தொடர்ந்து, சுப்புலட்சுமி ஜெகதீசன் இன்று மாலை அ.தி.மு.க-வில் இணையவுள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, சுப்புலட்சுமி ஜெகதீசன் சுப்புலட்சுமி அ.தி.மு.க-வில் இணையவுள்ளதாக வெளியான தகவல் குறித்து ஊடகங்கள் கருத்து கேட்டதற்கு எந்த கட்சியிலும் இணைய திட்டமில்லை என்று கூறியுள்ளார். அப்போது அவர் கூறியதாவது: 40 ஆண்டுகளாக தி.மு.க-வில் இருந்துள்ளேன். நிச்சயமாக அ.தி.மு.க-வில் இணையமாட்டேன். நான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுகிறேன் என்று ஏற்கெனவே தெளிவாக சொல்லிவிட்டேன். நான் தி.மு.க-வில் இருந்து விலகி இன்னொரு கட்சியில் போய் சேர்கிற அளவுக்கு எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. பா.ஜ.க-வுக்கோ அல்லது அ.தி.மு.க-வுக்கோ எந்த கட்சிக்கும் தகுதி இல்லை. நான் பொதுமக்களுக்கு பொதுவெளியில் செய்ய வேண்டிய பணிகளை அரசியல் கட்சிகள் சார்பற்று, செயல்படுகிற அனைத்து அரசியல் அமைப்புக்கொளோடும் சேர்ந்து செயல்பட விரும்புகிறேன்.
அதிலும் குறிப்பாக, விவசாயிகளின் முன்னேற்றத்திற்காகவும் பெண்களி முன்னேற்றத்திற்காகவும், தொடர்ந்து பாடுபடப்போகிறேன். எந்த அரசியல் கட்சியிலும் சேருகிற நோக்கம் எனக்கு இம்மியளவும் கிடையாது.
இன்றைக்கு பா.ஜ.க மக்களை தவறான பாதைக்கு அழைத்துக்கொண்டுபோய் இருக்கிறது. அந்த பா.ஜ.க-வினுடைய உண்மையான முகத்தை தோலுரித்துக் காட்ட வேண்டும் என்றால், அரசியலுக்கு அப்பாற்பட்டு பொதுவெளியில் இயங்கினால்தான் என்னால் சில கருத்துகளை வெளிப்படையாக தெரிவிக்க முடியும். இதே நான் தி.மு.க-வில் இருந்துகொண்டு பா.ஜ.க-வை விமர்சனம் செய்தால், மத்தியில் ஆளும் கட்சியாக இருக்கிறா பா.ஜ.க-வுக்கும் மாநிலத்தில் ஆளும் கட்சியாக இருக்கிற தி.மு.க-வுக்கும் சங்கடத்தை ஏற்படுத்தும். எனவேதான், நான் இந்த இயக்கத்தில் இருந்து விலகி இருக்கிறேன். எனக்கு வேறு எந்த அரசியல் கட்சியிலும் சேருகிற எண்ணம் இம்மியளவும் இல்லை. நான் வேறு கட்சியில் சேர உள்ளதாக பரப்பப்படும் தகவல்கள் என்னைப் பிடிக்காதவர்கள் செய்யும் செயல். என் பெயருக்கு கலங்கத்தை ஏற்படுத்துவதற்காக இந்த மாதிரி செய்கிறார்கள்.” என்று கூறினார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”